நாங்கள் திட்டமிட்டபடி, இந்த ஆட்சி 5 வருடங்கள் தொடருமாக இருந்தால் - ரவூப் ஹக்கீம்
வடமாகாண நீர்வழங்கல் நடவடிக்கையை 2020ம் ஆண்டு 20 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகர திட்டமிடல், நீர்வழங்கல் துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இன்று (03) வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் வைத்திய சேவை தொடர்பாக ஆராய்வதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்துக் கூறும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நீர்வழங்கலைப் பொறுத்தவரை நாட்டினுடைய முழு நீர்ப்பாசன தேவைகளில் 45 சதவீதத்தை பூர்த்தி செய்துள்ளோம். அதை 2020ம் ஆண்டு 60 சதவீதமாக உயர்த்துவதற்கான பாரிய நீர்ப்பாசன வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம்.
இந்த நிலையில் வடமாகாணத்தில் குடிநீர் வழங்கல் திட்டத்தில் 9 சதவீதம் தற்போது பூர்த்தியாகியுள்ளது. இதனை 2020ம் ஆண்டு 20 சதவீதமாக கூட்டுவதற்கு திட்டமிட்டுள்ளோம். இதைவிட, வவுனியாவைப் பொறுத்தவரை இப்போதைக்கு 4 சதவீதம்மான பிரதேசத்தில் தான் குடிநீர் வழங்கல் திட்டம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இதனை 2020ல் 40 சதவீதமாக அதிகரிப்பதற்கான செயற்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றோம்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் எமது நாட்டில் நீர்வழங்கலுக்கென தனியான வாவி அமைக்கப்பட்டு அதற்கான அணைக்கட்டு வேலைகள் எல்லாம் பூர்த்தியாகி பேராறு நீர் வழங்கல் திட்டம் தயாராகி வருகின்றது.
இதேபோல், மல்வத்து ஓயா நீர்வழங்கல் திட்டமும் அமுல்படுத்தப்படுகின்ற போது நாங்கள் எதிர்பார்கின்ற 40 சதவீதத்தை 2020ல் எட்டுவதற்கான நடவடிக்கைகள் முழுமை பெறும். முழு நாட்டிற்கும் 15 சதவீதமாக கூட்ட திட்டமிட்டுள்ள நீர்வழங்கல் திட்டம் வடமாகாணத்தைப் பொறுத்தவரை 9 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் வரை அதாவது இரு மடங்காகவும் வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரை 4 சதவீதத்தை 40 ஆக கிட்டத்ட்ட 10 மடங்காகவும் அபிவித்தி செய்வதற்கான முயற்சி 2020 ஆண்டு எட்டப்படும்.
இந்த ஆட்சி நாங்கள் திட்டமிட்டபடி 5 வருடங்கள் தொடருமாக இருந்தால் இந்த இலக்கை நாங்கள் அடையலாம். அதற்கான அனைத்து வேலைகளும் ஒழுங்கப்பட்டு வருகிறது.
இன்று விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் அவர்களிடம் இருந்து நீர் வழங்கலுக்காக பெறப்பட்ட காணிகள், அதற்கான மாற்றுக் காணிகள் வழங்கல், நீர்பாசன திட்டங்களை கிராம மட்டத்திற்கு வழங்குதல் தொடர்பாக பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கும் நாம் தீர்வுகளை வழங்கியுள்ளோம் என்றார்.

நல்ல விடயங்கள், சரியாகப் பேசுகிறீர்கள், ஆனால் இப்படி பேசினால் இந்த அரசாங்கம் நகர அபிவிருத்தி அமைச்சை உங்களிடம் இருந்து எடுத்து விட்டு நகரத்திட்டமிடலை தந்துள்ளதைப் போல, இன்னும் கொஞ்ச நாளில் நீர்வழங்கல் அமைச்சை எடுத்து விட்டு நீர் வழங்கலுக்கான திட்டமிடல் அமைச்சு என உங்களுக்கு வழங்கி கௌரவப்படுத்துவார்கள்.
ReplyDelete