Header Ads



மன்னர் அப்துல்லாவின் இறுதிசடங்கில் பங்கேற்க 1,00,000 பவுண்ட் செலவிட்ட பிரிட்டன் பிரதமர் மீது கண்டனம்


சவுதி அரேபிய மன்னரான அப்துல்லாவின் இறுதி சடங்கில் பங்கேற்க சென்ற பிரித்தானிய பிரதமர் 1,00,000 பவுண்ட் வரை பயண செலவுக்கு பயன்படுத்தியது தற்போது அம்பலமாகியுள்ளதால் கமெரூன் பெரும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளார்.

சவுதி அரேபிய மன்னரான அப்துல்லா கடந்த சனவரி மாதம் மரணமானதை தொடர்ந்து, அவரது இறுதி சடங்கில் பங்கேற்பதாக பிரித்தானிய பிரதமர் உள்ளிட்ட 5 உயர் அதிகாரிகள் தனி விமானத்தில் சவுதி அரேபியா சென்று திரும்பியுள்ளனர்.

சவுதி அரேபியாவில் மனித உரிமைகளை மீறி கொடூரமான மரண தண்டனைகள் வழங்கப்படுவதால் பிரித்தானியா மற்றும் சவுதி அரேபியா நாடுகளுடனான நட்பு தொடரக்கூடாது என பிரித்தானிய மனித உரிமைகள் அமைப்பு ஒன்று ஏற்கனவே வலியுறுத்தி வருகிறது.

இந்த அமைப்பு, யூலை 2014 முதல் மார்ச் 2015ம் ஆண்டு வரை பிரதமர் கமெரூன் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டதற்காக ஆன மொத்த செலவினங்களை குறித்து அரசிடம் அண்மையில் அதிகாரப்பூர்வ தகவல்களை பெற்றுள்ளது.

இந்த தகவலில், கடந்த நவம்பர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் பங்கேற்க கமெரூன் சென்றதற்கு 13,290 பவுண்ட் செலவாகியுள்ளது.

அதே மாதத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற உலக பொருளாதாரம் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்க சென்றபோது, 3,986 பவுண்ட் செலவானது.

ஆனால், கடந்த சனவரி மாதம் சவுதி அரேபிய மன்னரின் இறுதி சடங்கில் பங்கேற்க சென்றபோது மட்டும் 1,01,792 பவுண்ட் செலவாகியுள்ளது ஏன் என அந்த மனித உரிமைகள் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

பிரித்தானிய குடிமக்களின் வரிப்பணத்தை இவ்வாறு வாரி இறைக்கும் பிரதமர் இவ்வளவு தொகை செலவானது ஏன் என விளக்கம் அளிக்க வேண்டும் என அந்த மனித உரிமைகள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, மனித உரிமைகளை மீறி வரும் சவுதி அரேபியாவுடன் எதற்காக நல்லுறவை வளர்த்து வருகிறீர்கள் என நிருபர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த கமெரூன், ‘சவுதி அரேபிய அரசாங்கத்திடமிருந்து பிரித்தானிய அரசிற்கு முக்கிய ரகசிய மற்றும் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் கிடைக்கிறது.

சவுதி அரேபியாவுடனான தொடர்பு பிரித்தானிய நாட்டின் பாதுகாப்பிற்கு தான்’ என கமெரூன் விளக்கம் அளித்துள்ளார்.

தற்போது மனித உரிமைகள் அமைப்பு பிரித்தானிய பிரதமரின் செலவினங்கள் குறித்து கேள்விக்கு பிரதமரின் செய்தி தொடர்பாளர் பதில் அளித்துள்ளார்.

அதில், சவுதி அரேபிய மன்னரின் இறுதி சடங்கில் பங்கேற்க பிரதம அலுவலக அதிகாரிகள், அரண்மனை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகளும் பயணத்தில் பங்கேற்றதால், இவர்களின் பாதுகாப்பிற்காக இந்த தொகை செலவிடப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளார்.

No comments

Powered by Blogger.