இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அடக்குவது குறித்து சீனாவின் விளக்கம்..!
இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பொதுமக்களைப் பாதுகாக்கவே, ஜின்ஜியாங் மாகாணத்தில் மதவாதிகளுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருவதாக சீனா விளக்கமளித்துள்ளது.
ஜின்ஜியாங் மாகாணம் குறித்து அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜின்ஜியாங் மாகாண மக்களின் மத உணர்வுகளுக்கும், மத உரிமைகளுக்கும் சீன அரசு மதிப்பு அளிக்கிறது. எனினும், மதவாதம் தலைதூக்குவதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் அரசு தொடர்ந்து ஈடுபடும்.
மாகாணத்தில் மதவாதத்தை ஒழிப்பதற்காக சட்டத்துக்கு உட்பட்டு அரசு எடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை நலன்களைப் பாதுகாக்கவே ஆகும்.
ஜின்ஜியாங் மாகாணத்தில் மத வெறியைத் தூண்டும் செயலில் மதவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
பிற மதத்தினர் மீது வெறுப்பை ஏற்படுத்தி, மாகாணத்தில் மத, இன ஒற்றுமையைக் குலைக்கின்றனர்.
மேலும், காலம் காலமாகக் பின்பற்றப்பட்டு வரும் இஸ்லாமியக் கொள்கைகளுக்கு முரண்பாடான மதக் கொள்கைகளை சமூகத்தினரிடையே திணிக்கின்றனர்.
இதனால், இஸ்லாமிய சமூகத்துக்குள்ளேயே மோதலை ஏற்படுத்தி, அந்த மதத்தின் அடிப்படைத் தன்மையை சீரழிக்கின்றனர்.
மதவாதம் என்பது மாகாணத்திலுள்ள சில இளைஞர்களை மத வெறியர்களாகவும், பயங்கரவாதிகளாகவும் ஆக்கி வருகிறது.
இதன் காரணமாக அப்பாவிப் பொதுமக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. தங்களது சொந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட அனைத்து இனத்தைச் சேர்ந்தவர்கள் மீதும் அவர்கள் தாக்குதல் நிகழ்த்தி வருகின்றனர் என அந்த வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜின்ஜியாங் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிப்பவர்கள் உய்குர் இன முஸ்லிம் மக்கள்.
நாட்டின் பிற பகுதிகளிலிருந்து ஹான் இனத்தவர்கள் அந்த மாகாணத்தில் குடியமர்த்தப்படுவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் பதற்றம் நிலவி வரும் அந்த மாகாணத்தில், பொது இடங்களில் அவ்வப்போது கத்திக் குத்துத் தாக்குதல் உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இதைத் தடுக்கும் வகையில் சீன அரசு மேற்கொண்டு வரும் கடுமையான நடவடிக்கைகள் மதச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தற்போது சீன அதிபர் ஜீ ஜின்பிங் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment