அகதிகளுக்கு விரைவில், இலவச இணையதள வசதி
ஐரோப்பாவில் புகலிடம் கோரி வந்துள்ள அகதிகளுக்கு விரைவில் இலவசமாக இணையதள வசதிகள் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என பேஸ்புக் நிறுவன தலைவரான மார்க் ஷுக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஐக்கிய நாடுகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நேற்று தொழில்நுட்ப துறையில் புரட்சி செய்த நிறுவன தலைமை அதிகாரிகளுடன் ஒரு சிறப்பு கூட்டம் ஒன்று நேற்று நடந்துள்ளது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற பேஸ்புக் நிறுவனரான மார்க் ஷுக்கர்பெர்க் (31), ஐரோப்பாவில் புகலிடம் கோரி முகாம்களில் தங்கியுள்ள சிரியா நாட்டை சேர்ந்த அகதிகளுக்கு இலவச இணையதள சேவை வழங்க பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
இது குறித்து பேசிய மார்க் ஷுக்கர்பெர்க், தற்போதைய காலத்தில் இணையத்தளம் மூலம் மக்களை இணைப்பது மட்டும் இன்றி, இதன் மூலம் ஒரு நாட்டின் சமூக மற்றும் பொருளாதார ரீதியிலும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
அண்மையில் வெளியான ஆய்வில், இணையத்தளம் வசதி பெற்றுள்ள 10 நபர்களில் ஒருவரது வாழ்வாதாரம் பொருளாதார அளவில் உயர்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.
தற்போது ஐரோப்பாவில் உள்ள சிரியா அகதிகளுக்கு இணையத்தளம் மற்றும் பேஸ்புக் சேவைகளை இலவசமாக வழங்குவதன் மூலம், அவர்கள் தங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் எளிதாக தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
மேலும், அகதிகளுக்காக அரசு அறிவித்துள்ள பல்வேறு நலத்திட்டங்களை இணையத்தளம் மூலமாக அறிந்து அவற்றை பயன்படுத்திக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்றார்.
ஆனால், ஐரோப்பிய நாடுகள் முழுவதும் உள்ள முகாம்களில் தங்கியுள்ள சிரியா அகதிகளுக்கு எவ்வாறு இலவச இணையத்தள சேவை வழங்குவார் என்பதை அந்த கூட்டத்தில் மார்க் ஷுக்கர்பெர்க் தெளிவுபடுத்தவில்லை.
ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் கோரி வந்துள்ள வெளிநாட்டினர்களில் சிரியா நாட்டை சேர்ந்த அகதிகளே மிக அதிகம்.
சிரியாவில் ஒரு கோடியே 79 லட்சம் மக்கள் தொகை இருந்த நிலையில், உள்நாட்டு போர் வலுவடைந்ததால் தற்போது சுமார் 40 லட்சம் மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
சிரியா நாட்டில் பேஸ்புக் உள்ளிட்ட முக்கிய இணையத்தளங்களை பயன்படுத்த சட்டப்பூர்வமாக தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு அகதிகளுக்கு இலவச இணையத்தள சேவை வழங்கப்படும் என மார்க் கூறியிருப்பது ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

come on man, help them live first. then help to use the internet.
ReplyDelete