சிறையிலிருந்து நடாத்திய, கள்ளக் கடத்தல்
வெலிக்கடை சிறைக்குள் இருந்து கொண்டே இத்தாலியில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பெருந்தொகைப் பணத்தை மோசடி செய்த கைதியொருவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதியொருவர் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் துணையுடன் தொலைபேசி ஒன்றை சிறைக்குள் தருவித்துக் கொண்டுள்ளார்.
அதன் பின்னர் இத்தாலியில் தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாக பத்திரிகை விளம்பரங்களை தனது காதலி மூலமாக வெளியிட்டு பெருந்தொகையானோரை ஏமாற்றியுள்ளார்.
அவரது விளம்பரங்களை நம்பி ஏமாறுவோரிடம் வங்கிக் கணக்கு ஒன்றில் கொஞ்சம் கொஞ்சமாக பெருந்தொகைப் பணத்தை வைப்புச் செய்ய வைத்து அவரும் காதலியும் அதனை மோசடி செய்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் சந்தேக நபரின் தொலைபேசி வெலிக்கடை சிறைவளாக தொலைபேசிக் கோபுரத்தில் இருந்து செயற்படுவதை கண்டறிந்துள்ளனர்.
அதன் பின்னர் சிறைக்குள் இருந்து கொண்டே பலரை ஏமாற்றி பண மோசடி செய்த சந்தேக நபரும் கண்டறியப்பட்டுள்ளார்.
தற்போது சந்தேகநபரான சிறைக்கைதிக்கு எதிராக இன்னொரு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அவரது காதலியும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Post a Comment