Header Ads



நாலு கழுதையும், நாசமாப்போன ஊரும்...!


சமூகத்தின் பெயர்சொல்லி நடிக்கின்ற கயவர்கள்
சருகுக்குள் எறிகின்றார் நாளும்-நாம்
ஈயென்று அதைப்பார்த்து இருந்தாலெம் தாய்மண்ணை
ஈக்கள்தான் மகிழ்வோடு ஆளும்

காலறிவே இல்லாத கழுதைகள் கதைகேட்டு
காலமுக்கி விடுவீரா மேலும்-நாம்
நினைத்தாலே உலகத்தை நிச்சயமாய் புரட்டிடலாம்
நில் கொஞ்சம் சொல்லுவதைக் கேளும்

ஏதேதோ பொய்பேசி எம்வாக்கை எடுத்தவரின்
Cellலுக்கு Call லெடுத்து பாரும்-அந்த
தறுதலையோ Busy யென்றும் Dont Call me என்றும்தான்
வாலாட்டும் நாய் இன்று கூறும்...

பாராளுமன்றுக்கு போகின்ற சிலரங்கு
சாப்பிடத்தான் பேய்வாயை திறப்பார்-நம்
ஊராளுமன்றத்தில் இருக்கின்ற ஊத்தைகளோ
மறந்தெம்மை கூட்டித்தான் கொடுப்பார்.

உரிமைகள், தனியலகு, தனியாட்சி என்றன்று
உளறியது அத்தனையும் மறக்கும்-தினம்
குடியோடு குடித்தனத்தை செய்கின்ற குரங்குகளின்
குடும்பங்கள் திமிரோடு நடக்கும்

நாலைந்து வருடத்தில் மறுபடியும் ஒரு தேர்தல்
நம்நாட்டில் புதிதாகப் பிறக்கும்-இன்று
பாழ்பட்ட எம்சமூகம் அத்தனையும் மறந்தன்று
பணத்துக்காய் வாக்கள்ளி கொடுக்கும்

இளைஞர்கள் வாய்பார்த்து இப்படியே நின்றிருந்தால்
இதுபோன்ற செயல் தொடராய் நடக்கும்-சிறு
தீக்குச்சி உள்ளேதான் தீப்பந்தம் இருக்கிறது-நாம்
நினைத்தாலே பெரும் புரட்சி வெடிக்கும்

காதலிலே தினம் மூழ்கி காணாமல் போகாமல்
கைகளிலே அரசியலை எடுப்பாய்-என்றும்
ஏழைகளை பொய் சொல்லி ஏமாற்றி வாழ்வோரை
எதிர்த்துநீ போரொன்றை தொடுப்பாய்..!

வீரா உன் தோளினிலே சூரியனைச் சுமந்து எழு
விடியட்டும் ஏழைகளின் கிழக்கு-நீ 
அடிக்கின்ற அடியினிலே அட்ரஸ்ஸே இல்லாமல்
போகட்டும் வீற்றிருக்கும் அழுக்கு...!!

1 comment:

  1. he looks just like his poem. he think without politics only with his idiotic poem muslims can survive ?

    ReplyDelete

Powered by Blogger.