Header Ads



புதிய அமைச்சரவையின் கன்னி அமர்வுக்காக, காத்திருக்கும் ஜனாதிபதி மைத்திரி

தேசிய உணவு உற்பத்தி, சூழல் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சிறுநீரக நோயை ஒழித்தல் என்பவற்றுக்கான தேசிய திட்டங்கள் தொடர்பிலான யோசனைகளை அமைச்சரவையின் கன்னி அமர்வில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இந்தத் திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலணி உறுப்பினர்களுடன் இன்று மாலை இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது, இந்தத் திட்டங்களின் முன்னேற்ற அறிக்கைகளை ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் ஜனாதிபதியிடம் முன்வைத்தார்கள்.

தேசிய உணவு உற்பத்தித் திட்டம் சில பிரிவுகளின் கீழ் முன்னெடுக்கப்படுவதுடன், விவசாய ஆராய்ச்சித் தரம், செயற்றிறன் மிக்க சந்தைப்படுத்தல் வலையமைப்பு ஆகியவற்றின் கீழ் செயற்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

பயிரிடப்படாத அனைத்து காணிகளிலும் பயிர் செய்கை மேற்கொள்வதற்கு விவசாயிகளை ஈடுபடுத்துவதன் முக்கியதுவம் தொடர்பில் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

சூழல் பிரச்சினை, காட்டு யானைகள் தொல்லை, கரையோர பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களின் கீழ் சூழல் பாதுகாப்பு தேசிய திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

தாம் சுற்றாடல் அமைச்சராக செயற்பட்ட காலத்தில் இருந்த பொலித்தீன் பாவனையைக் கட்டுப்படுத்தும் திட்டம் தற்போது செயலிழந்துள்ளதாகவும், அது தொடர்பில் ஆராய்ந்து மீண்டும் நடைமுறைப்படுத்துமாறும் இதன்போது ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

சிறுநீரக நோய் ஒழிப்பு தொடர்பில் முன்னெடுக்கப்படும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தை நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பதற்கான திட்டமும் முன்வைக்கப்பட்டது.

இந்த அனைத்து பொறுப்புகளும் ஒரு அமைச்சுக்கோ நிறுவனத்திற்கோ மட்டுப்படுத்தப்படாத வகையில் அனைவரும் இணைந்து நாட்டின் எதிர்காலத்திற்காக இந்தத் திட்டத்தை வெற்றியை நோக்கி கொண்டுசெல்ல வேண்டும் எனவும் ஜனாதிபதி இந்த சந்திப்பில் கேட்டுக்கொண்டார்.

No comments

Powered by Blogger.