நான் நாட்டைவிட்டு ஓடவில்லை - ஜனாதிபதி செயலகம் அனுமதித்தமையால் ஜப்பான் சென்றேன் - அர்ஜூன மகேந்திரன்
எவருக்கும் அறிவிக்காமல் நாட்டைவிட்டு வெளியேறியதாக முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் தவறானது என மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தின் எழுத்துமூல அனுமதியுடனேயே தான் ஜப்பான் சென்றிருந்ததாக மத்திய வங்கியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
ஜப்பானிய நிதியமைச்சர் மற்றும் அந்நாட்டின் அமைச்சரவை செயலாளர் ஆகியோரை சந்திப்பதற்காக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட உயர்மட்டக் குழுவுடன் தான் சென்றிருந்ததாகவும், ஜூன் 27ஆம் திகதி முதல் ஜூலை 2ஆம் திகதி வரையான காலப் பகுதியில் ஜப்பான் சென்று வருவதற்கு ஜனாதிபதி செயலகம் தனக்கு எழுத்துமூல அனுமதி வழங்கியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தனது ஜப்பானிய விஜயம் குறித்து மத்திய வங்கியின் சிரேஷ்ட முகாமை யாளர்கள் மற்றும் நாணயசபை ஆகியவற்றுக்கு அறிவித்துவிட்டே சென்றதாகவும் கூறினார்.
இதேவேளை, நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
தேர்தல் முடிவடைந்த பின்னர் நாட்டில் கட்டுமானத்துறை தொடர்பான பல முதலீடுகள் வரவுள்ளன. நாட்டில் காணப்படும் ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலை காரணமாக தனியார் முதலீடுகள் பலர் முதலீடுகளுடன் காத்திருக்கின்றனர். நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டதும் இந்த முதலீடுகள் நாட்டுக்குள் வரும்.
2015ஆம் ஆண்டின் முதலாவது அரையாண்டின் பொருளாதார வளர்ச்சி 6.4 ஆகப் பதிவாகியிருக்கும் நிலையில், அடுத்த அரையாண்டில் 7 வீத வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. வருமான வசூல் கடந்த ஒரு தசாப்தத்தின் பின்னர் முன்னேற்றம் கண்டுள்ளது. 2003ஆம் ஆண்டு வருமான வசூல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 19 வீதமாகக் காணப்பட்டது. எதிர்வரும் காலங்களில் இந்த நிலைமையை மீள எட்டிவிடமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
கடந்த காலங்களில் விதிக்கப்பட்ட சிக்கல் நிறைந்த வரிமுறை வருமான வசூல் குறைவதற்குக் காரணமானது. இந்த வரிமுறையில் மாற்றத்தை நாம் கொண்டுவந்துள்ளோம். அத்துடன் வரி நிர்வாகத்தை நவீனமயப்படுத்துவதன் ஊடாக வரி செலுத்துனர்களை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கணனி மயப்படுத்தலுக்கு ஏற்கனவே சிங்கப்பூர் அரசாங்கத்தின் உதவி பெறப்பட்டுள்ளது என்றார்.
திறைசேரி முறி விநியோகம் தொடர்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், சர்ச்சைக்குரிய பேப்பர்சுவல் ட்ரெஷரி நிறுவனத்தில் தனக்கு பங்குகள் இருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அப்பட்டமானவை என்பதுடன் அதனை மறுப்பதாகக் கூறினார்.
வெள்ளிக்கிழமை தினம் ஒன்றிலேயே திறைசேரி முறி விநியோகம் நடைபெற்றது. திங்கட்கிழமைக்குள் 10 பில்லியன் ரூபா பணம் தேவைப்பட்டது. திறைசேரிக்கு கோரப்பட்ட விண்ணப்பங்களில் 20 பில்லியனுக்கு விண்ணப்பங்கள் கிடைத்தன. இந்த நிலையிலேயே நான் 10 பில்லியனை பெறுமாறு ஆலோசனை கூறியிருந்தேன்.
இரண்டு நாட்களுக்குள் பெருந்தொகை பணத்தை பெறுவதற்கு வேறு வழியிருக்கவில்லை. வங்கிகளிலிருந்து மிகைப்பற்றினைப் பெற்றிருந்தால் சிறிய நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுவிடும் என்பதால் திறைசேரி முறிகளினூடாக திறைசேரிக்குப் பணத்தைத் திரட்டத் தீர்மானித்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Bandula is a liar....................
ReplyDelete