Header Ads



மஹிந்த அணியினரின் குழப்பமான நிலைமை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்புமனுக்களில் கையெழுத்திட்ட வேட்பாளர்களில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணிக்கு உதவிகளை வழங்கும் அணியும் இடம்பெற்றிருப்பதால், மகிந்த ராஜபக்ச உட்பட அவரது அணியினரின் தேர்தல் பிரச்சாரம் தொடர்பில் ஒரு குழப்பமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தமது எதிர்தரப்புக்கு உதவும் நபர்கள் வேட்பாளர்களாக இருப்பதால், தேர்தல் பிரச்சார திட்டங்கள், சேறுபூசும் பிரச்சார நடவடிக்கைகள் வெளியில் கசிவதை தடுப்பது சிரமமாக மாறியுள்ளது.

தேர்தல் பிரச்சாரக்குழுவில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிரானவர்களும் இடம்பெற்றுள்ளனர். இதனால், அவர்களின் அனுமதியின்றி திட்டங்களை வகுப்பதும் சிரமமான காரியமாக மாறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி ஏதோ ஒரு விதத்தில் ஆட்சியை கைப்பற்றினால், மகிந்த எதிர்ப்பு அணியினரும் அந்த அரசாங்கத்தில் கட்டாயம் இணைந்து கொள்வர்.

இதனால், இவர்களை மகிந்த ராஜபக்ச அணியினர் நல்லாட்சி சூழ்ச்சிகார்கள் என அழைக்க ஆரம்பித்துள்ளனர். பொதுத் தேர்தலில் இவர்களை தோற்கடிக்கவும் அவர்களுக்கு எதிராக சேறுபூசும் பிரச்சாரங்களை முன்னெடுக்கவும் மகிந்த தரப்பு திட்டங்களை வகுத்து வருகிறது.

இதற்கான செயற்பாடுகளில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையிலான குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவுடன் மகிந்த அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கலாவெவ அமைப்பாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவுக்கு எதிராக கடும் பிரச்சாரங்களை முன்னெடுப்பது என மகிந்த அணியின் முக்கியஸ்தர்கள் தீர்மானித்துள்ளனர்.

அதேவேளை எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு மிகவும் பொருத்தமான நபராக துமிந்த திஸாநாயக்க இருப்பார் எனவும் அவரது ஜாதகத்தில் ராஜயோகம் இருப்பதாகவும் இது ராஜபக்ச குடும்ப வாரிசுகளின் எதிர்காலத்திற்கு பாதிப்பாக அமையும் என்பதையும் ராஜபக்சவினர் உணர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கிய பலர் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்துள்ளனர். எனினும் துமிந்த திஸாநாயக்க அவர்களுடன் செல்லவில்லை.

எதிர்கால எதிர்ப்பார்ப்பு காரணமாகவே செல்லவில்லை என துமிந்த திஸாநாயக்கவுக்கு நெருக்கமான தரப்புகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த பல சிரேஷ்ட உறுப்பினர்களின் ஆதரவும் ஆசியும் அவருக்கு கிடைத்துள்ளது.

அதேவேளை கொலன்னாவ தொகுதியின் சார்பில் போட்டியிடும் பிரசன்ன சோலங்கஆராச்சிக்கு தற்போதுள்ள பிரபலம் காரணமாக அவர் கொழும்பு மாவட்டத்தில் முன்னிலைக்கு வந்தால், மகிந்த ஆதரவாளர்களுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால், அவருக்கு எதிராகவும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என மகிந்த தரப்பில் பேசப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, அடுத்த வாரம் இலங்கை திரும்பவுள்ளார். அவர் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கெடுக்கும் விதத்தின் அடிப்படையில், மகிந்தவாதிகளின் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும் என  அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.