Header Ads



நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றி பெறுவோம் - அப்துர் ரஹ்மான்


மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை தேர்தல் காலங்கிள்ல பிரதேசவாதமும் இனவாதமும் பெரும் சாபக்கேடாக உருவெடுப்பத வழமை. இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே இத் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதான இலக்காகும். அதற்காகவே நாம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் உடன்பாட்டின் அடிப்படையில் இணைந்து போட்டியிடுகிறோம் என மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளரும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளருமான  எம்.எம். அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வேட்புமனுவைக் கையளித்த பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான் மேலும் கருத்து வெளியிடுகையில்,

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இம்முறை ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியில் மற்றுமொரு கூட்டணியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸோடு உடன்பாட்டின் அடிப்படையில் இணைந்து போட்டியிடுகிறது. இந்த உடன்பாட்டின் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தின் கீழ் நானும் கவிஞர் எஸ்.நளீமும் போட்டியிடுகிறோம். அதேபோன்று திருகோணமலை மாவட்டத்தில் யானைச் சின்னத்தில்  டாக்டர் ஸாஹிர் நல்லாட்சிக்கான தேசிய தேசிய முன்னணியில் சார்பில் போட்டியிடுகிறார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்குமிடையில் ஓர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவிருக்கிறது. அதற்கான ஷரத்துக்கள் ஏற்கனவே உடன்பாடு காணப்பட்டிருக்கின்றன.  இந்தப் பிரதேசத்தில் தேர்தல் காலங்களில் பிரதேசவாதம் என்பது பாரிய சவாலாக, சாபக்கேடாக உருவெடுக்கிறது என்பதை நாம் தொடர்ச்சியாக சொல்லி வந்திருக்கிறோம். அதேபோல இப் பிரதேச்தில் வாழுகின்ற சமூகங்களுக்கிடையிலான பிளவுகளும் இனவாதமும் ஒரு சாபக்கேடாகவே மாறியிருக்கிறது.  இந்த பிரதேசவாதமும் இனவாதமும் தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகளாலும் கட்சிகளாலும் அதிகம் தூண்டிவிடப்படுகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே எமது இரு கட்சிகளுக்குமிடையிலான உடன்படிக்கையின் பிரதான அம்சமாக இருக்கிறது. அதேபோன்று நல்லாட்சியை வலுப்படுத்த வேண்டியதன் அடிப்படையிலேயே தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதும் முக்கிய அம்சமாகும். இவ்வாறு பல அம்சங்களை உள்ளடக்கிய உடன்படிக்கையை முஸ்லிம் காங்கிரசுடன் இன்னும் ஓரிரு தினங்களில் செய்து கொள்ளவிருக்கிறோம்.

கடந்த ஜனவரி 8 இல் ஏற்பட்ட மாற்றம் கடந்த ஆறு மாதங்களுக்குள் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டு மீண்டும் ஓர் அராஜக ஆட்சி நிலைமை தோன்றுமோ என்ற அச்ச நிலைமை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 8இல் தொடங்கிய மாற்றத்தை நிறைவு செய்ய வேண்டியது ஒரு தேசியக் கடமையாக மாறியிருக்கிறது. அதனைச் செய்வதற்குரிய சிறந்த சந்தர்ப்பமாகவே நாட்டு மக்கள் இந்தத் தேர்தலை எதிர்பார்த்திருக்கிறார்கள்.

அந்த வகையில் இந்த மாற்றத்தை பாதுகாப்பதற்கு தலைமை வகிக்கின்ற அணியாக ஐக்கிய தேசியக் கட்சி இருக்கிறது. அதில் சகல கட்சிகளையும் இணைத்துக் கொண்ட பொது முன்னணியும் தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்தத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் இந்த முன்னணி மீண்டும் ஆட்சியமைக்கின்ற வாய்ப்பு இருக்கிறது.

மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஜனவரி 8 ஆம் திகதி நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர். இந்த நாட்டின் வரலாற்றில் அவ்வாறு நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி ஒருவர் மீண்டும் பாராளுமன்றத்திற்கு வர நினைப்பதென்பது ஒரு துரதிஷ்டவசமான புதிய வரலாறாகும். அவர் வெறுமனே பாராளுமன்றத்திற்கு வருவதோடு மாத்திரமல்லாது மக்கள் ஏற்படுத்திய மாற்றத்தினை சிதைப்பதற்கு அவரது தலைமையிலான குழு முயல்கிறது என்பதை மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். அவ்வாறு அவர் வருவது ஜனநாயகத்துக்கும் நல்லாட்சிக்கும் பாரிய அச்சுறுத்தலாக அமையும். எனவே அதனை நாம் முறியடிக்க வேண்டும். அதனை வெற்றி கொள்வதற்கான அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாம் இந்தக் கூட்டணியில் உடன்பாடுகளின் அடிப்படையில் இணைந்திருக்கிறோம்.

இன்ஷா அல்லாஹ் நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கின்றன. ஏனெனில் மக்கள் இன்று தேசிய அளவிலும் சரி மாவட்ட மட்டத்திலும் சரி மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த மாற்றத்தை முன்னின்று நடத்திய ஒரு அமைப்பாக முன்னணியாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விளங்குகிறது. முதல் தடவையான எமது பிரதிநிதிகள் இரு மாவட்டங்களில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இன்ஷா அல்லாஹ் மக்களின் விருப்பத்திற்குரிய தெரிவாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியுடைய பிரதிநிதிகள் நிச்சயமாக இருப்பார்கள். எனவேதான் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக நாம் நம்புகிறோம்.

5 comments:

  1. Dear Br. Please Say In Sha Allah

    ReplyDelete
    Replies
    1. Please read the article again with your two eyes wide open!

      Delete
  2. Ghouse.., Haa...Haa..lol

    ReplyDelete
  3. Why did you joint slmc you could agreement with unp and ask electing further

    ReplyDelete
  4. வெற்றி பெறுவது உறுதியா? அப்படியாயின் தேர்தல் எதற்கு....

    ReplyDelete

Powered by Blogger.