யேமன் விவகாரத்தில், சவுதி அரேபியாவுக்கு தோல்வியா..?
ஏமனில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ஐநாவிடம் சவுதி அரேபியா வலியுறுத்தியுள்ளது. ஏமன் நாட்டில் உள்நாட்டு போர் தீவிரமடைந்து வருகிறது. அரசுக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் போரிட்டு வருகின்றனர். ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபிய கூட்டுப்படையினர், கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இருதரப்பினர் இடையே நடந்து வரும் சண்டையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும் சண்டையில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். ஏமனில் தங்கியிருக்கும் வெளிநாட்டி னரை அந்ததந்த நாடுகள் மீட்டு வருகின்றன.
வலுத்துவரும் மோதலை முடிவுக்கு கொண்டுவர சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது. ஏமனில் நடந்து வரும் சண்டையை நிறுத்தும் வகையில், கிளர்ச்சியாளர்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று ஐநாவிடம், சவுதி அரேபியா கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து சவுதி அரேபியாவில் உள்ள ஐநாவுக்கான தூதரிடம் அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது. கிளர்ச்சியாளர்கள் சண்டையை நிறுத்த வேண்டும் எனவும், அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சனா உள்ளிட்ட நகரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐநா தூதரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐநா சார்பில் அமைதி பேச்சுவார்த்தை குறித்த தீர்மானம் விரைவில் நிறைவேற்றப்படும் எனவும், போர் நிறுத்த நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தலைவர்களிடம் வலியுறுத்தும் வகையில் இந்த தீர்மானம் அமையும் எனவும் சவுதி அரேபியா அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Post a Comment