Header Ads



மஹிந்த ராஜபக்சவின் சர்வாதிகார யுகத்தினை ஆரம்பிக்க முயற்சிக்கப்படுகின்றது - லக்ஸ்மன் கிரியெல்ல

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதிக்க மாட்டார் என அமைச்சரும், ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார். 

அரசாங்கத்தின் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்காக முயற்சிப்பதும் மஹிந்த ராஜபக்சவின் சூழ்ச்சியே.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

தேசிய அரசாங்கத்தை வீழ்த்தி மீண்டும் மஹிந்த ராஜபக்சவின் சர்வாதிகார யுகத்தினை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மஹிந்தவின் விசுவாசக் கூட்டணியொன்று முயற்சி செய்து கொண்டிருக்கின்றது. அதன் காரணத்தினாலேயே ஐக்கிய தேசிய கட்சியின் மீது பொய் பிரசாரங்களை மேற்கொண்டு எம்மை குற்றவாளிகளாக முயற்சிக்கின்றனர்.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் நடந்த ஊழல் மோசடிகள் மற்றும் கொலை கொள்ளை சம்பவங்கள் அனைத்தும் மக்களுக்கு தெரிந்துள்ளது. அதேபோல் கடந்த பத்து ஆண்டுகளில் இவர்கள் ஆட்சி செய்ததன் காரணத்தினால் தான் இன்று எமது அரசாங்கம் அழுத்தங்களுக்கு முகங்கொடுத்து வருகிறது.

இவ்வாறான நிலையில் அரசாங்கத்தை கவிழ்க்க சதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மஹிந்த ராஜபக்சவை பிரதானப்படுத்தி விமல், தினேஷ், வாசு குழுவினர் அரசாங்கத்திற்கு எதிராக பல சூழ்ச்சி வேலைகளை செய்து கொண்டிருக்கின்றனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்து அரசாங்கத்தை கவிழ்க்கும் சதி திட்டத்தின் பின்னணியில் மஹிந்தவே செயற்படுகின்றார். மீண்டும் அவர் அதிகாரத்தை கைப்பற்றி நாட்டை சீரழிக்க பார்க்கின்றார். ஆனால் அதற்கு ஒருபோதும் மக்கள் இடம்கொடுக்க மாட்டார்கள்.

அதேபோல் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி யார் பக்கம் நிற்பது என்பதில் இன்றும் குழப்பமாகவே உள்ளனர். மஹிந்த ராஜபக்சவை ஆதரிப்பதா அல்லது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதா என்ற குழப்பத்திற்கு முதலில் விடை தேட வேண்டும்.

எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கையில்லா பிரேரணையினை கொண்டு வர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அனுமதிக்கமாட்டார் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

1 comment:

  1. தற்போதைய அரசாங்கம் "கோமாளிகளின் அரசு" ஆகிவிட்டது என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது. மகிந்த மீண்டும் வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

    மகிந்த இருக்கும் பொழுது சில கோமாளிகளும், குற்றவாளிகளும் அரசில் இருந்தார்கள், ஆனால் மகிந்த சொல்லும் வடிவில் மட்டும்தான் அரசு சென்றது. முக்கிய விடயங்களில் அரசின் குரல் ஒன்றாகவே ஒலித்தது. இன்று அப்படி இல்லை, அரசாங்கமே ஒரு கோமாளிக் கூட்டமாக இருக்கின்றது. முக்கிய விடயங்களில் ஆளுக்கொரு கருத்து, கேவலமாக உள்ளது. கொழும்பு போர்ட் சிட்டி விடயத்தை பாருங்கள், அரசுக்கு அது குறித்து இன்னுமும் ஒரு தீர்க்கமான முடிவு இல்லை. இப்படி சொன்னவர் ஒரு பெரும்பான்மை இன நண்பர்.

    யானை தானே தன தலையில் மண்ணை வாரிக் கொட்டிக் கொள்ளும் என்று நினைக்கின்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.