Header Ads



மகிந்த ராஜபக்சவுக்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக மன்னிப்பு கேட்கிறேன் - ராஜித்த சேனாரத்ன

ஒரே கல்லில் இரண்டு குருவிகளை 19வது அரசியலமைப்பு திருத்தம் மூலம் கொலை செய்ய முடிந்தது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

19ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

19வது திருத்தச் சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதுடன் முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்தன மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் தோல்வியை தழுவியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்தன மற்றும் மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட அதிகார வர்க்கமுறை தற்போது 19ம் திருத்தச்சட்டத்தின் மூலம் நீக்கப்பட்டுள்ளது.

ஜே.ஆர்.ஜயவர்தனவினால் ஏற்படுத்தப்பட்ட பிரச்சினைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதன்மூலம் முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்தனவும், மஹிந்த ராஜபக்ஷவும் தோல்வியடைந்துள்ளனர்.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் இது பொய்யான அரசு, வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு என பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் எமது அரசின் வாக்குறுதியை நாம் தற்போது நிறைவேற்றியுள்ளோம்.

குறித்த அரசிலமைப்பின் ஊடாக ஜனாதிபதியின் பதவிக்காலம், ஆறு வருடங்களிலிருந்து ஐந்து வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளதுடன்,  ஜனாதிபதி பதவி இருதடவைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னர் ஜே.ஆர். ஆட்சியில் நிறைவேற்று அதிகாரத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, அவரது ஆட்சி காலத்தில் 18வது திருத்த சட்டத்தை அமுல்படுத்தி அதனூடாக அதிகாரங்களை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

அதன் போது அவருக்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக நான் இச்சந்தரப்பத்தில் மன்னிப்பு கோருவதாக அமைச்சர் அதன் போது குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 19 நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தவும் 20ம் திருத்தச்சட்டத்தை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.