அறபா வித்தியாலய அதிபருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை, விசாரிக்க கல்விப் பணிப்பாளர் உத்தரவு
புதிய மாணவர் அனுமதியின் போது, பெற்றோர்கள் வழங்கிய பணத்தினை, பாடசாலை வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யாமல் கையாடல் செய்தமை, மற்றும் மாணவர்களுக்கான மதிய போசனத்தில் மோசடி செய்து - பணம் சம்பாதித்தமை உள்ளிட்ட 08 குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய அதிபருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள முறைபாடு தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான பணிப்புரையினை - தான் வழங்கியுள்ளதாக, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி. நிஸாம் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய அதிபர் மேற்கொண்டதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பில், அப் பாடசாலையின் அபிவிருத்திக் குழு செயலாளர் மற்றும் உறுப்பினர் கையெழுத்திட்டு – கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்திருந்தனர்.
மேற்படி கடிதம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, மாகாணக் கல்விப் பணிப்பாளரிடம் வினவியபோதே, அந்தக் கடிதம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு - தாம் உத்தரவிட்டுள்ளதாக, அவர் கூறினார்.
அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட - அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தின் அதிபர் - பல்வேறு மோசடிளைப் புரிந்துள்ளதாக மேற்படி கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அறபா வித்தியாலயத்தில் 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டு - புதிய மாணவர்கள் அனுமதியின் போது, பெற்றோர்களிடமிருந்து பணம் அறவிடப்பட்டதாகவும், அந்தப் பணத்தினை பாடசாலையின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யாமல், அதிபர் தன்வசம் வைத்திருந்தமை குறித்தும் - முறையிடப்பட்டுள்ளது.
மேலும், பாடசாலை வளாகத்தினுள் நின்றிருந்த பெறுமதி வாய்ந்த மரங்களை, முறையான அனுமதியின்றி வெட்டி – களவாக விற்பனை செய்ததாகவும், அந்த விற்பனையின் மூலம் கிடைத்த பணத்தினை, அதிபர் கைவசப்படுத்திக் கொண்டதாகவும், அறபா வித்தியாலய அதிபருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, பாடசாலை அபிவிருத்திக் குழுவின் பொருளாளராகச் செயற்பட்ட ஆசிரியரொருவர் பதவியுயர்வு பெற்று, வலயக் கல்விக் காரியாலயத்துக்கு மாற்றலாகிச் சென்ற பின்னர், பாடசாலை அபிவிருத்திக் குழுவின் பொருளார் என, ஆசிரியரொருவரை மோசடியாக காசோலைகளிலும், ஆவணங்களிலும் கையொப்பமிட வைத்தார் எனவும், அறபா வித்தியாலய அதிருக்கு எதிரான முறைப்பாட்டுக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாடசாலை மாணவரொருவருக்கு மதிய உணவுக்காக வழங்கப்படும் 25 ரூபாய் பணத்தில் 04 ரூபாவினை கையகப்படுத்திக் கொண்டு, 21 ரூபாவுக்கே மதிய போசனத்தினை வழங்கியதாகவும், இதன் மூலம் 40 ஆயிரத்துக்கும் குறையாத தொகையினை ஒவ்வொரு மாதமும் அறபா வித்தியாலயத்தின் அதிபர் முறைகேடாகப் பெற்று வந்தார் எனவும் - கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் விபரிக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று வலயக் கல்விக் காரியாலயத்தின் பொறுப்புமிக்க அதிகாரிகளுக்கு, மேற்படி மோசடிகள் குறித்து, தாம் - தெரியப்படுத்படுத்தியிருந்த போதும், அவை தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், அதன் காரணமாகவே – உயர் அதிகாரிகளுக்கு இது குறித்து அறிவிக்க வேண்டிய தேவை தமக்கு எழுந்ததாகவும், அந்தக் கடிதத்தில் முறைப்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர், கிழக்கு மாகாண பிரதிப் பிரதம கணக்காய்வாளர் ஆகியோருக்கும், குறித்த கடிததத்தின் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

Post a Comment