Header Ads



'மரணப் படுக்கையில், நிற்கும் நல்லாட்சி'

-நஜீப் பின் கபூர்-

அச்சகக் காரர்கள் சந்தித்துக் கொள்கின்ற ஒரு மத்திய  இடம் கண்டி செனிட். செனிடை அச்சகக்காரர்களின் செனட் என்று கூட சொல்ல முடியும். அது ஒரு தமிழ் சகோதரரின் நிறுவனம். எனக்கும் அச்சுத் துறைக்கும் தொழில் ரீதியிலான தொடர்புகள் இல்லாவிட்டாலும்  கண்டிப் பக்கம் போனால் சில தேவைகளுக்காக  நானும் செனிட்-செனட் படிகளில் ஏறி இறங்குவதுண்டு. நான் அங்கு போய் நின்றால், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் நாட்டு அரசியல் பற்றி ஏதாவது புதிய தகவல்களை என்னிடத்தில் கேட்பார். சில தினங்களுக்கு முன்பு நான் அங்கு போய் நின்றதும் அரசியலில் புதிய    தகவல்களை வழக்கம் போல் என்னிடத்தில் கேட்டு நின்றார்.

நாட்டு அரசியல் புரியாத புதிராக  இருக்கின்றது என்றேன். நீங்களே அப்படிச் சொல்ல முடியுமா என்றார். சமகால அரசியல் செய்திகளை நான் ஊடகங்களில் சொல்வதால் உரிமையோடு அவர் என்னிடத்தில் கேள்வி எழுப்புகின்றார் என்பது புரிந்தாலும் இன்றைய அரசியல் பற்றி அப்படித்தான் சொல்ல வேண்டி இருக்கின்றது. பாமரர்களுக்கு மட்டுமல்ல படித்தவர்களுக்கும்  புரிந்து கொள்ள முடியாத ஒரு நிலையில் தான் சம அரசியல் போய்க் கொண்டிருப்பது தொடர்பாக எனது நிலைப்பாட்டை சொல்வதற்காகத்தான் ஒன்றும் புரியவில்லை என்றேன். செனிட்காரர் வார்த்தைகளில் சொல்வதானால் உப்புச் சப்பில்லாத நிலை-நகர்வு. என்றாலும் அரசியலில் ஏதோ குழப்பமும் கொந்தளிப்பும் கூச்சலுமான நிலை தோன்றி இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது. மீண்டும் ஒரு ஆதிக்கப் போட்டி நாட்டில் ஏற்பட்டிருக்கின்றது.

குறிப்பாக கடந்த வாரத்தில் சில நாட்கள் நல்லாட்சி, மைத்திரி-ரணில் இணக்கப்பாடு சுதந்திரக் கட்சி - ஐ.தே.க புரிந்துணர்வு, அரசியல் கட்சிகளிடையே ஒருமைப்பாடு  என்ற விவகாரங்களில் நிறையவே காயங்கள், கசப்புணர்வுகள்  ஏற்பட்டிருந்தது என்பதை மட்டும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. எனவே அந்த விவகாரங்களை இந்த வாரம் பார்க்கலாம். தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து மௌனித்துப் போயிருந்த ராஜபக்ஷக்களும் அவரது கையாட்களும் தற்போது உற்சாகத்துடன் தமது நகர்வுகளை வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

பாராளுமன்றத்தில் மைத்திரி - ரணில் அல்லது ஐ.தே.க - சுதந்திரக் கட்சிக் காரர்களின் நல்லாட்சி தரப்பில் நிதி அமைச்சர் ரவி கருணநாயக்கவால் முன்வைக்கப்பட்ட குறை நிறைப்பு மசோதாவை நல்லாட்சியின் பங்காளிகள் பாராளுமன்றத்தில்  மண் கவ்வச் செய்திருக்கின்றனர். இதில் மற்றுமொரு வேடிக்கை என்ன வென்றால் பிரேரணையை முன்வைத்த நிதி அமைச்சர் மற்றும் ஆளும் தரப்பு பிரதமர் கூட அந்த வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் ஸ்கெப்பாகியது  ஏன் என்று புரியவில்லை. சிலர் இதனை பாராளுமன்றத்தில் ராஜபக்ஷவின் ஊசலாட்டம் என்று குறிப்பிடுகின்றார்கள். இந்தக் கருத்து யதார்த்தம் என்று எடுத்துக் கொண்டால் பாராளுமன்றத்தில் ராஜபக்ஷவுக்கு பெரும்பான்மை என்று தான் அதன் அர்த்தமா என்று கேட்கத் தோன்றுகின்றது.

பாராளுமன்றத்தில் நிதி அமைச்சரின் பிரேரனை 20 பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்ட விவகாரம் மறுபுறத்தில் ஜனாதிபதி மைத்திரிக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவும் இதனை நாம் பார்க்க வேண்டும். சுதந்திரக் கட்சியினர் இன்னும் மைத்திரியைத் தமது தலைவராக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்பதுதான் இந்த நிகழ்வு கோடிட்டுக் காட்டுகின்ற செய்தி. கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நடந்த மற்றுமொரு நிகழ்வும் ஜனாதிபதி மைத்திரி சுதந்திரக் கட்சித் தலைமைக்குக் கொடுக்கப்பட்ட ஒரு ரெட் நோடீசாகத்தான் தெரிகின்றது.

பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சித்  தலைவர் தொடர்பாக 50 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தினேஷ் குனவர்தனாவை அந்தப் பதவிக்கு நியமனம் செய்யுமாறு கோரி சபாநாயகர் சாமல் ராஜபக்ஷவிடம் எழுத்து மூலம் கோரி  இருந்தனர். இதற்கு தான் ஏப்ரல் 7ம் திகதி செவ்வாய்க் கிழமை ஒரு தீர்ப்பைச் சொல்வதாக சபாநாயகர் தரப்பில் கூறப்பட்டிருந்தது. குறித்த தினமான 7ம் திகதி  இதற்குத் தீர்ப்பு சொல்வதற்கு தனக்கு இன்னும் சில நாட்கள் தேவை என்ற ஒரு மலுப்பலான பதில் சபாநாயகர் சாமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் கொடுத்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பார்த்து தினேஷ் குனவர்தனாவை எதிர்க் கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்கின்றவர்கள் எழுந்து நிற்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கோரிய போது அங்கு பெரும்பாலானவர்கள் எழுந்து நின்றதை அவதானிக்க முடிந்தது.

சபாநாயகருக்கு இக்கட்டான நிலை ஏற்படவே சபாநாயகர் சுசில் பிரேம் ஜயந்தைப் பார்த்து கூட்டமைப்பு செயலாளர் என்ற வகையில் இந்தப் பிரச்சினைக்கு நீங்கள்தான் ஒருமித்து ஒரு முடிவை எனக்கு உங்கள் தரப்பு சார்பில் அறியத்தர வேண்டும் என்று பந்தை அவர் பக்கத்திற்கு போட்டார் சாமல். இதற்கு சுசில் எந்தப் பதிலையும் அளிக்கவில்லை. இது தொடர்பாக நாம் சுசிலிடத்தில் எதிர்க் கட்சித் தலைவர் விவகாரத்தில் தீர்மானத்திற்கு வந்து விட்டீர்களா என்று கேள்வி எழுப்பினால் தற்போது புத்தாண்டு நிகழ்ச்சியில் மக்களும் உறுப்பினர்களும் அதிக கவனம் செலுத்துவதனால் உடனடியாக இந்த விவகாரத்தில் தீர்மானம் எடுப்பது இப்போது சாத்தியம் இல்லாத விடயமாக இருக்கின்றது என்று பதில் கொடுக்கின்றார் அவர்.

இதற்கிடையில் தமிழர் தேசிய கூட்டமைப்பு இந்தப் பதவியைப் பெற்றுக் கொள்ளத் தனக்குள்ள உரிமையைச் சபாநாயகருக்குத் தெரியப்படுத்தி இருக்கின்றது. எனவே தற்போது இந்த விவகாரத்தில் சுதந்திரக கட்சிக்குள் பிளவு ஏற்பட்டிருக்கின்றது. யார் ஏற்றுக் கொண்டாலும் மறுத்தாலும் இந்தப் பிளவை மைத்திரி - ராஜபக்ஷ அணிகளின் பலப் பரீட்சையாகத்தான நாம் பார்க்கின்றோம்.

இதற்கிடையில் முதுகில் குத்தாமல் தேவையானால் எதிர்க் கட்சித் தலைவர் பதவியை எடுத்துக் கொள்ளுமாறு தற்போதய  எதிர்க் கட்சித் தலைவர் நிமல் சிரிபால டி சில்வா குறிப்பிடுகின்றார். எனவே தனது பதவி குறித்து கட்சியில் முரண்பாடுகள் நிலவுவதை அவர் பகிரங்கமாக ஏற்றுக் கொள்கின்றார்-தனக்குப் பெரும்பான்மையில்லாத நிலை அவருக்குப் புரிகின்றது. 19 வது யாப்புத் திருத்தம் தொடர்பாக தற்போது உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கி இருக்கின்றது. பெரிய திருத்தங்கள் இல்லாவிட்டாலும் சிறிய திருத்தங்களுடன் மக்கள் கருத்துக் கணிப்புக்குச்  செல்லாமல் 19 திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ள இதனால் இடமேற்பட்டிருக்கின்றது. என்றாலும் இந்த விவகாரத்தில் சுதந்திரக் கட்சியில் ராஜபக்ஷ விசுவாசிகள் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்ற விடயத்தில் மைத்திரி குழப்பத்தில் இருப்பதாகத் தெரிகின்றது.

ஜனாதிபதி மைத்திரி சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான அவசர சந்திப்பொன்றை வெள்ளிக் கிழமை ஏற்பாடு செய்திருந்தார். பாராளுமன்றத்தில் அண்மையில் நடந்த விடயங்கள் மற்றும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கொண்டு வந்த பிரேரனை தோற்கடிக்கப் பட்டது. நாம் ஐ.தே.க.வுடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்பாட்டை மீறுகின்ற ஒரு நடவடிக்கை என்று அவர் அங்கு சுட்டிக் காட்டி இருக்கின்றார். இது விவகாரமாக மைத்திரியும்-ரணிலும் சந்தித்துப் பேசி இருக்கின்றார்கள். எதிர் வருகின்ற நாட்களில் நமது உறுப்பினர்கள் இப்படி முரணாக நடந்து கொள்ளக் கூடாது என்று ஜனாதிபதி அந்த சந்திப்பில் அங்கு கேட்டுக் கொண்டதாகத் தெரிகின்றது. ஆனால் இந்த முரண்பாடு நீடிக்கவே செய்யும் என்பது எமது கருத்து.

தேர்தல் முறையில் மாற்றங்கள் செய்தால் மட்டுமே நாம் 19 க்கு ஆதரவாக வாக்களிக்க முடியும் என்ற நிலைப்பாட்டில் இன்னும் பெரும்பாலான சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இருப்பதாகத் தெரிகின்றது. எனவே இந்த விவகாரத்திலும் ராஜபக்ஷ ஊசலாட்டம் பாராளுமன்றத்தில் நிலவுவதற்கு. நிறையவே வாய்ப்பிருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்ஹ மஹிந்த ராஜபக்ஷ விடயத்தில் வெளியிடுகின்ற சில வார்த்தைகள் ராஜபக்ஷ விசுவாசிகளுக்குப் பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. ராஜபக்ஷவுக்கு இன்னும் சுதந்திரக் கட்சி ஊடாக அரசியில் செய்ய வேண்டுமாக இருந்தால் சுதந்திரக் கட்சிக்கு வந்து அவர் தலைகுனிந்து  தனது பணிகளைச் செய்ய வேண்டும் என்று ஓரிடத்தில் சந்திரிக்கா பேசி இருந்தார். இந்தக் கருத்து ராஜபக்ஷவுக்கும் அவர் விசுவாசிகளுக்கும் பெருத்த எரிச்சலை ஏற்படுத்தி இருக்கின்றது.இதனால் அவர்கள் சந்திரிக்காவுக்கு அரசியல் ரீதியில் நெருக்கடிகளை கொடுக்க தற்போது முனைகின்றார்கள்.

இதற்கிடையில் குருனாகலையில் நடைபெற்ற கட்சி அமைப்பாளர்கள் கூட்டத்தில் சந்திரிக்காவின்  பெயரை வைபவத்தில் விளக்கேற்ற  அழைத்த போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு எதிராக பலர் எழுந்து நின்று கோஷம் போட்டு அவருக்கு ஹூ வைத்திருக்கின்றார்கள். இது முன்னாள் அமைச்சர் ஜேன்ஸ்டன் நிகவரட்டியிலிருந்து கொண்டு வந்த ஆட்கள் பார்த்த வேலை என்று பின்னர் சந்திரிக்கா இது பற்றி கருத்துக் கூறி இருக்கின்றார். தற்போது ராஜபக்ஷ விசுவாசிகள் தமது முதல் இலக்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை தெரிவு செய்திருக்கின்றார்கள்.

பிரதி அமைச்சர் லலித் திசாநாயக்காவும் பாராளுமன்ற உறுப்பினர்  நாமல் ராஜபக்ஷவுக்குமிடையே முறுகள் நிலை ஏற்பட்டிருக்கின்றது அந்தச் சந்தர்ப்பத்தில் நாமல் ராஜபக்ஷவைப் பார்த்து பிரதி அமைச்சர் லலித் திசாநாயக்கா சுதந்திரக் கட்சியை உங்களுடைய தந்தையின் குடும்ப உடமையாக நீங்கள் கருதிக் கொண்டு இதன் பின்னரும் செயலாற்ற வரவேண்டாம் என்று எச்சரித்திருக்கின்றார். இதற்கு முன்னர் இப்படி நாமல் ராஜபக்ஷவைப் பார்த்து, ராஜபக்ஷக்கள் அதிகாரத்தில் இருக்கும் போது எவராவது கேள்வி எழுப்பி இருப்பார்களா என்று கேட்கத் தோன்றுகின்றது.அப்படிப் பேசினால் என்ன நடக்கும்.!

சந்திரிக்காவுக்கு உதய  கம்மன்பிலவும் ஒரு சவாலைத் தற்போது  விடுத்திருக்கின்றார். முடியுமானால் வருகின்ற பொதுத் தேர்தலில் கம்பஹ மாவட்டத்தில போட்டியிட்டு தற்போதய முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்ஹவை விட ஒரு வாக்கையாவது அதிகம் பெற்றுக் காட்டுமாறு அவர் சந்திரிக்காவுக்கு சவால் விடுத்திருக்கின்றார். ராஜபக்ஷ விவகாரத்தில் சந்திரிக்கா இறுக்கிப் பிடிப்பதால்தான் தற்போது அவர் இலக்கு வைக்கப்பட்டிருக்கின்றார். எம்மைப் பொறுத்தவரை இந்த அரசியல் ஆதிக்கப் போட்டியில் சந்திரிக்கா தாக்குப் பிடிக்க மாட்டார் என்று தான் தெரிகின்றது. இப்படி ராஜபக்ஷ விசுவாசிகள் சத்திரிக்காவை ஓரம் கட்டிய பின்னர் அவர்களுடைய அடுத்த இலக்கு மைத்திரி பிடியிலிருந்து சுதந்திரக் கட்சியை மீட்டு அதன்  தலைமையை ராஜபக்ஷவுக்குப் பெற்றுக் கொடுப்பதுதான்.

கோத்தாபே ராஜபக்;ஷ தனக்கும் அரசியலுக்கு வர வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது என்ற அறிவித்தலைத் தற்போது பகிரங்கமாகச் சொல்லி இருக்கின்றார். இதற்கு முன்னர் கோத்தா அரசியல் வருகை பற்றி இந்தப் பக்கத்தில் நாம் பல முறை சொல்லி இருந்தோம். கோத்தாவால் இயக்கப்படுபவர் என்று சொலல்ப்படும் கலபொட ஞானத்தாரும் தற்போது பிசியாகி இருக்கின்றார்.  மைத்திரியை அவர் முதுகெழும்பில்லாதவர் என்று கூறி இருப்பதுடன் அரசியல் பொறுப்புக்களையும் அதிகாரங்களையும் ரணிலுக்கு ஏற்குமாறு அவரது அறிவுக்கு எட்டியவாறு ரணிலுக்கு உபதேசம் சொல்லி இருக்கின்றார். எமக்குக் கிடைக்கின்ற மற்றுமொரு தகவலின் படி இந்த முறை சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மற்றும் ராஜபக்ஷ ஆகியோருக்கு அழைப்புக்கள் விடுக்கப்பட்டிருக்கின்றது. என்றாலும் இந்த முறை ராஜபக்ஷ விசுவாசிகள் தனியாக மே தினக் கூட்டமொன்றையும் ஊர்வலமொன்றையும் நடாத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றார்கள் என்று தெரிகின்றது. இதற்கு சுதந்திரக் கட்சியின் தொழிற் சங்கங்களையும் இணைத்துக் கொள்ள அவர்கள் தற்போது இரகசியப் பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருகின்றார்கள்.

நரேஹேன்பிட்ட அபேயராம விகாரை

தென்னிந்திய மற்றும் மேலைத் தேச ஆக்கிரமிப்புக்களுக்கு நாடு இலக்காகிய காலங்களில் சிங்கள மன்னர்களுக்கு பௌத்த விகாரைகளே  பாதுகாப்புக் கொடுத்தது. சிங்கள ஆட்சியாளர்கள் ஓடி ஒழித்த போது விகாரைகளே அவர்களுக்குத் தஞ்சம் கொடுத்து பாதுகாப்பு வழங்கி இருக்கின்றது. அதே பாணியில் இந்த முறை நரேஹேன்பிட்ட அபேயராம விகாரை மஹிந்த ராஜபக்ஷவுக்கு அடைக்கலம் கொடுத்து அவரது அரசியல் நடவடிக்கைகளின் மைய நிலையமாக தற்போது செயலாற்றிக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. ஆளும் தரப்பிலுள்ள சில சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் ரணிலிடத்தில் இப்படி ஒரு கோரிக்கையை விடுத்திருக்கின்றார்கள். ஐக்கிய தேசியக் கட்சி செயற் குழுவில் நடந்து கொள்வதைப் போன்று அரசாங்கத்தை நடத்த முனைய வேண்டாம் என்பது அவர்களின் அந்தக் கோரிக்கை.

100 நாள் நல்லாட்சி முடிவடைய இன்னும் 10  நாட்களே எஞ்சி இருக்கின்ற இந்த நேரத்தில் ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் பல சவால்களை எதிர் நோக்கி வருவதை அவதானிக்க முடிகின்றது. சொல்லப் பட்ட எல்லா வேலைத் திட்டங்களையும் அமுல் படுத்துவதற்கு முன்னர் மைத்திரி- ரணில் நல்லாட்சி தற்போது மரணப்படுக்கையில் விழுந்து விடும் போல்தான் தெரிகின்றது. நல்லாட்சிக்கு உள்ளிருந்தும் தாக்குதல்கள் வெளியே இருந்தும் தாக்குதல்கள். நல்லாட்சி எப்படி உயிர் வாழ்வது..?

3 comments:

  1. ஒரு நேர்மைமையான வெளிப்படையான அரசியலை சந்திரிக்கா செய்கிறார். குள்ளநரி பாணியில் ஒரு வேடம் போட்டு கொஞ்சம் தந்திரமாக அரசியலில் மீண்டு வர ராஜபக்ச முயற்சி செய்கிறார். இதில் நேர்மையும் வெளிபடத்தன்மையும் வெல்லும் என நாம் எதிர்பார்க்கிறோம். அதற்காக நாங்களும் பாடுபடுவோம். நாட்டு நலனை முன்னிறுத்தி மக்களும் முக்கியமாக புத்தி ஜீவிகளும் இளைய சமுதாயமும் மாற்றத்தை நோக்கி செயற்படும் என்றே நாம் கருதுகிறோம். ராஜபக்ச இல்லாத பொதுத் தேர்தல் நடக்குமானால் அது UNP க்கு மிகவும் சவாலான தேர்தலாக அமையும். அதாவது ராஜபக்ச களத்தில் இருப்பது தான் UNP நல்லது. UNP ஆட்சி அமைப்பதும் சந்திரிக்காவின் பலம் ஓங்குவதும் முஸ்லிம் சமுகத்துக்கு மிகவும் நல்லது.

    ReplyDelete
  2. இப்படியான ஒரு இடைநிலை அரசியல் இருப்பது ஒரு திட்ட மிட்ட அரசியலாகவும் இருக்கும். இது ஒரிஜினல் சுதந்திர கட்சியை கட்டி எழுப்புவதற்கு சந்திரிக்கவுக்கும் மைத்திரியிக்கும் இலகுவாக இருக்கும் என நம்புகிறோம்.

    ReplyDelete
  3. 100 நாள் ஓடினால் படம் மாபெரும் வெற்றி என்று சொல்வார்கள், தியேட்டரில் கூட்டம் குறைந்தால், படத்தை மாற்றி விடுவார்கள். மைத்ரி, ரணில் இணைந்து சந்திரிகா இயக்கத்தில் நடித்த படம் தியேட்டரை விட்டு தூக்கப்படும் காலம் நெருங்கி விட்டதாகவே தெரிகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.