Header Ads



காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை - முஸ்லிம்கள் கண்ணீர் மல்க முறைப்பாடு

(எம்.ஏ.றமீஸ்)

காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்ட அமர்வு இன்று(09) இரண்டாவது நாளாகவும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது பெருந்தொகையான தமிழ் முஸ்லிம் மக்கள் கண்ணீர் மல்க ஆணைக்குழுவிடம் தமது முறைப்பாடுகளை முன்வைத்தனர். இதன்போது 1990ஆம் ஆண்டு விவசாய அறுவடைக்காகச் 20 பேருடன் சென்ற எனது கணவன் காதர் வெல்லை வெள்ளத்தம்பி வயல் வெளியில் நின்றபோது விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் அவர்களைப் பிடித்து கதறக் கதற உழவு இயந்திரப் பெட்டியொன்றில் ஏற்றிச் சென்ததை கண்ட எனது உறவினர் எம்மிடம் வந்து சொன்னார். உடனே நாம் சம்பந்தப்பட்ட இடத்தினை நோக்கி ஓடிச் சென்று பார்த்தோம். எங்குமே அவர்கள் சென்ற தடயங்களே தென்படவில்லை. பட்டி தொட்டி என்று எல்லா இடங்களிலும் தேடியலைந்தோம். ஆனால் இதுவரை அவரை கண்டு கொள்ள முடியாமலே போய்விட்டது. வருமானமே இல்லாத எனக்கு மூன்று பிள்ளைகள். கணவர் இல்லாமல் போனபோது எனது கடைசிப்பிள்ளைக்கு ஆறு மாதங்களுடைய கைக்குழந்தையுடன்தான் நானிருந்தேன்.  அவர்களில் இரு பெண்களைகளை ஏதோ ஒரு வகையில் திருமணம் செய்து கொடுத்து விட்டேன். கணவர் இல்லாமல் போன செய்தி கேட்ட எனது மூன்றாவது மகன் அதிர்ச்சியுற்று தற்போது அங்கவீனராக உள்ளார். ஆவரைக் காணும்போதெல்லாம் எனது கணவனின் முகம் வந்து செல்கின்றது என பள்ளிக்குடியிருப்பு, அக்கரைப்பற்றைச் சேர்ந்த முகம்மது அலிமா நூறு நிஷா கண்ணீர் மல்க ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்தார்.

கடந்த 1985 செப்டம்பர் மாதம் 14ஆந் திகதி விவசாய நடவடிக்கையின் அறுவடைக்காக நான்குபேருடன் உழவு இயந்திரப் பெட்டியில் அம்பாறை ஹிங்குராணைப் பிரதேசத்திற்குச் சென்ற எனது கணவன் சீனித்ம்பி இப்றாலெவ்வை விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தின் சாரதிக்கும் அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய போதிலும் காதுப்பகுதியில் வெடிக்காயத்துடன் ஒடித் தப்பி வந்த சாரதி என் கணவரையும் அவருடன் சென்ற அனைவரையும் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் சுட்டுக் கொன்று விட்டதாக எம்மிடம் சொன்னார். நான் தற்போது மிகுந்த வறுமை நிலையிலேயே வாழ்ந்து வருகின்றேன். சமுர்த்திக் கொடுப்பனவு கூட எனக்குத் தரவில்லை. நான் குளக்கரையில் உள்ள இலைக்கறி வகைகளைப் பிய்த்து அதனை விற்றுக் கொண்டு அதில் வரும் சிறுதொகையைக் கொண்டே எனது ஜீனனோபாயத்தை கடத்தி வருகின்றேன். எனக்கு மரணம் வரவேண்டும் என்றே நீண்ட காலமாக எதிர்பார்த்திருக்கின்றேன் அது நடக்கவில்லை. தொடர்ந்தும் நான் சோதனைகள் பவவற்றையே சந்தித்து வருகின்றேன் என அட்டப்பள்ளம், அலியார் வீதி, நிந்தவூரைச் சேர்ந்த முகைதீன்பாவா கதீஜா உம்மா கண்ணீர் விட்டு ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார்.

வயலுக்குச் சென்ற ஆறு பிள்ளைகளின் தந்தையான முகம்மது ஹசன் பௌறுதீன் 1992 ஆண்டு சென்றவர் வயலுக்குள் வைத்து விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அல்லிமூலை எனும் இடத்திலுள்ள வயலுக்குள் உங்கள் மகனின் மையித்து கிடக்கின்றது என ஒருவர் வந்து சொன்னதும் நாங்கள் ஓடிப்போய்ப் பார்த்தபோது எனது மகனின் தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்தது. எனது மகனின் இழப்பிற்காக அரசாங்கத்தினால் 25 ஆயிரம் ரூபா பணம் நஷ்ட ஈடாகத் தந்தார்கள். எனக்கு இருப்பதற்கே வீடற்ற நிலையில் குடிசை ஒன்றிலே வசித்து வருகின்றேன் என அழுது கொண்டு தனது முறைப்பாட்டை ஆணைக் குழு முன்னிலையில் முன்வைத்தார் சி.பி.எஸ். வீதி, நிந்தவூரைச் சேர்ந்த எஸ்.கொச்சிம்மா.

கடந்த 1990 ஜுன் மாதம் 15 ஆந்திகதி தரம் 11இல் கல்வி கற்றுக் கொண்டிருந்த எனது மகன் எம்.ஹாறூனை இனந்தெரியாத குழுவினர் வந்து பலாத்காரமாக அழைத்துச் சென்றார்கள். அவருக்கு என்ன ஆனது? ஆவர் இப்போது அருக்கின்றாரா அல்லது உயிரிழந்துள்ளார? ஏன ஒன்றுமே தெரியாமல் நாளுக்கு நாள் நான் வேதனையில் செத்துப் பிழைத்துக்கொண்டிருக்கின்றேன் என ஆணை;குழு முன் சாட்சியமளித்தார் உடையார் வீதி, இறக்காமத்தைச் சேர்ந்த கே.றூக்கியா உம்மா.

வறுமை நிலையில் உள்ள எமது குடும்பத்தை அன்றாட வருமானம் மூலம் காப்பாற்றி வந்தது எனது கணவர் இப்றாஹீம். அவர் விவசாய அறுவடையான சூடு மிதிக்கச் செல்லும் போது எனது 9 வயது மகள் ஆயிஷாவையும் கூட்டிச் செல்வது வழக்கம். அன்றும் அதாவது 1985ஆம் ஆண்டு இப்படித்தான் வழக்கம்போல் மகளுடன் ஏனைய நான்கு விவசாயிகளுடன் வயலுக்குச் சென்றபோது தீகவாபிச் சந்தியில் அவர்களை இனந்தெரியாதோர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள். இப்படியாக சுடப்பட்ட அவர்களை வயற் பிரதேசத்தில்  வீசிச் சென்றுள்ளார்கள் அச் செய்தி கேட்டு நாம் அங்கே சென்று சடலத்தை எடுத்து வந்து அடக்கம் செய்தோம். ஆனால் அவர் கூடவே சென்ற எனது மகளுக்கு என்ன ஆனது என்று இன்னும் புரியாத புதிராகவே உள்ளது என சாட்சியமளித்தார் மாவடி வீதி, நிந்தவூர்-03, கலந்தர் பாத்தும்;மா.

1990 நவம்பர் மாதம் 29 ஆந் திகதி மாடு மேய்க்கச் சென்ற எனது கணவர் அஹமட் லெவ்வை மகம்மட் றசீதை  கதறக் கதற கழுத்தை வெட்டிக் கொலை செய்துள்ளார்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர். கோலை செய்த அவரை வயல் நிலத்தில் புதைத்துள்ளார்கள். நாங்கள் வீட்டுக்கு வராதவரை எத்தனையோ முறை தேடியலைந்தும் அவர்; கிட்டவில்லை. சில நாட்களின் பின்னர் மழை பெய்து கொண்டிருந்த ஒரு நாள் ஒரு விவசாயி வயலுக்குச் சென்றபோது சேட் ஒன்று மண்ணிலிருந்து தெரிவதை அவதானித்திருக்கின்றார். உடனே அவ்விடத்திற்கு போய் தோண்டிப் பார்த்தபோது எனது கணவர் புதைக்கப்பட்டிருக்கின்றார் என்பதை அவர் அறிந்தார. அந்த செய்தியினை எம்மிடம் அவர் வந்து சொன்னதும் அதனைக் கேட்டு பதறியடித்துக் கொண்டு ஒடிச் சென்று சடலத்தை எடுத்து முறைப்படி அடக்கம் செய்தோம். இன்னும் அந்த வடு என் மனக்கண் முன்னே வந்து செல்கின்றதென ஆணைக்குழு முன் சாட்சியமளித்தர் நிந்தவூர் அரசடித்தோட்டம் இப்றாலெவ்வை பரீதா.

 இன்று வியாழக்கிழமை அக்கரைப்பற்று பிரதேசத்திலிருந்து கிடைக்கப்பெற்ற 21 முறைப்பாட்டாளர்களுக்கும், நிந்தவூர் பிரதேசத்திலிருந்து கிடைக்கப்பெற்ற 24 முறைப்பாட்டாளர்களுக்கும், இறக்காமம் பிரதேசத்திலிருந்து கிடைக்கப்பெற்ற 16 முறைப்பாட்டாளர்களுக்குமாக 61 பேருக்கு விசாரணை நடத்துவதற்கு ஆணைக்குழுவினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் அவர்களுடன் புதிதாக முறைப்பாட்டை பதிந்து பலர் சாட்சியமளித்ததுடன் நேற்றைய தினம் சாட்சியமளிக்க சமூகமளிக்காத சிலரும் இன்றைய தினம் ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க சமூகமளித்தனர்.

No comments

Powered by Blogger.