Header Ads



நீங்கள் அடிக்கடி, தைலம் பூசிக்கொள்பவரா..?

கையில் எந்நேரமும் தைல டப்பாவுடனும் இன்ஹேலருடனுமே தன் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் எண்ணற்ற மனிதர்களை நம் தினசரி வாழ்க்கையில் பார்க்கிறோம். வலி இருக்கிறதோ இல்லையோ தைலத்தைப் பூசிக்கொள்வதும், இன்ஹேலரை உறிஞ்சுவதும் அவர்களது வாடிக்கையான நிகழ்வாக இருக்கும். ஏன் இப்படி? 

டீ, காபி பழக்கம் போன்று தைலம்  பூசுதலும் ஒரு பழக்கமாகி, பயன்படுத்தாமல் இருந்தால் உறுத்துகிற மனநிலைக்கு அவர்கள் தயாராவதுதான் காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். இது பற்றி மனநல மருத்துவர் ஜெயக்குமாரிடம் கேட்டோம்...

‘‘மன வலிகள் கூட உடல் வலிகளாக மாறும். இப்படி மனநலப் பிரச்னைகளால் உடல் நோய்கள் ஏற்படுவதற்கு Somatosform disorder என்று பெயர். மன அழுத்தத்தின் காரணமாக செரட்டோனின் எனும் ரசாயனத்தின் அளவு குறைகிறது. இதனால் வலி தாங்குகிற சக்தியும் நமக்குக் குறைவதால் சின்னச் சின்ன வலிகள் கூட பெரிதாகத் தோன்றும். சின்னச் சின்ன வலிகளைக் கூட தாங்காத நிலைக்கு வரும்போது வலி நிவாரணிகள் எப்போதும் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கும். 

வயது முதிர்ந்தவர்கள் கை, கால் குடைச்சல் என்று மருத்துவமனைக்குச் சென்று, பி காம்ப்ளக்ஸ் ஊசி போட்டுக் கொண்டு வருவார்கள். நாளடைவில் அந்த பி காம்ப்ளக்ஸ் ஊசி போட்டால்தான் நிம்மதி என்கிற மனநிலைக்கு ஆளாவார்கள். தொலைந்து போன இளமைப் பருவம், ஆதரவின்மை போன்ற சிக்கல்களால் முதியவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. அதுவே கை, கால் குடைச்சலுக்கு காரணமாக அமைகிறது.  ஒரு இடத்தில் எரிச்சலைத் தூண்டுவதன் மூலம் அந்த எரிச்சலைக் கட்டுப்படுத்த மூளையில் வலி நிவாரண ரசாயனங்கள் சுரக்கும். இந்த செயல்பாட்டுக்காகத்தான் தைலம் தடவப்படுகிறது. 

தைலத்தை அதிகம் பயன்படுத்தும்போது அது நம் வாழ்வியலோடு  கலந்து விடுகிறது. டீ, காபி குடிப்பது அதற்கு அடிமையாவது என்று சொல்வதை விட பழக்கம் என்று சொல்லலாம். அது போன்ற பழக்கம்தான் இதுவும் என்கிறார் ஜெயக்குமார். 

No comments

Powered by Blogger.