Header Ads



ஏவுகணை தயாரித்த தலிபான்கள் - ‘ஒமர் - 1’ என பெயரிட்டு, விண்ணில் ஏவி சோதனை

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள வடக்கு வசிரிஸ்தான், கைபர் பக்துன்கவா மாகாணத்தில் பயிற்சி முகாம்கள் அமைத்து பதுங்கியுள்ளனர்.

அவர்களை அழிக்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. அந்நாட்டு போர் விமானங்கள் தலிபான்கள் மீது குண்டு வீச்சு நடத்தி வருகிறது. அதை தொடர்ந்து வடக்கு வசிரிஸ்தான் மற்றும் கைபர் மலைப்பகுதியில் 2 ஆயிரம் தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு தொடர்ந்து வேட்டை நடந்து வருகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள தலிபான்கள் அதிநவீன ஏவுகணையை தயாரித்துள்ளனர். தலிபான் இயக்கத்தின் என்ஜினீயரிங் தொழில்நுட்ப பிரிவு இதை உருவாக்கியுள்ளது.

அந்த ஏவுகணைக்கு ‘ஒமர்-1’ என பெயரிட்டுள்ளனர். மேலும் இந்த ஏவுகணையை விண்ணில் ஏவி வெற்றிகரமாக சோதனை நடத்தியுள்ளனர். இது குறித்த வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த தகவலை தலிபான்களின் செய்தி தொடர்பாளர் முகமது குராசணி தெரிவித்துள்ளார். தலிபான்களின் ‘ஒமர்-1’ ஏவுகணை பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்து விலகிய தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஏனெனில் அது பாகிஸ்தான் ராணுவத்திடம் உள்ள ஏவுகணை போன்ற தோற்றத்தில் உள்ளது. இந்த ஏவுகணை குறித்து தலிபான் செய்தி தொடர்பாளர் குராசனி கூறும்போது, ‘‘இந்த ஏவுகணையின் வலிமை எங்களது எதிரிகளுக்கு நிச்சயம் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும்.

கடவுளின் கருணையால் எங்ளது எதிரிகளின் மீது மிக விரைவில் இதன் மூலம் தாக்குதல் நடத்துவோம். இந்த ஏவுகணையை பயன்படுத்துவது குறித்து பயிற்சி அளிப்போம் என்றார்.

‘ஒமர்-1’ ஏவுகணை தாக்கும் தூரம் குறித்து தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அது தலிபான்களின் பகுதியான கைபர் பக்துன்கவாவில் இருந்து உள்ளது. இது இந்திய எல்லையில் இருந்து 600 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. இதனால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுமா? என தெரியவில்லை.

இதே போன்று தலிபான்களின் ஆதிக்கம் நீடித்தால் பாகிஸ்தானின் அணு ஆயுதங்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. அவை தலிபான்களின் கைகளில் சென்றடையும் என உலக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

1 comment:

  1. கடவுளின் கருணையால்????

    கடவுள்? கருணை? இதெல்லாம் தலிபான்களுக்கு இருக்கா?

    ReplyDelete

Powered by Blogger.