புதிய தேர்தல் முறையும், இனப் பிரதிநிதித்துவமும் (விபரம் இணைப்பு)
-நஜீப் பின் கபூர்-
இன்னும் இரண்டு மாதங்களுக்குள் தேர்தல் முறையில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்று தற்போது தீர்க்கமான முடிவு எடுக்கப்பட்டு இருக்கின்றது. அதன் படி கலப்பு முறையில் அமைய இருக்கின்ற இந்தத் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 இருந்து 235 அதிகரிக்கவும் சிபார்சுகள் செய்யப்பட்டிருக்கின்றது.
இலங்கையிலுள்ள இன விதாசாரத்திற்கேற்ப இந்த 235 உறுப்புரிமையை வகுப்பதானால்
சிங்கள சமூகத்திற்கு 168 முதல் 170 ஆசனங்கள்
இலங்கைத் தமிழர் 26 முதல் 28 ஆசனங்கள்
முஸ்லிம்கள் 21 முதல் 23 ஆசனங்கள்
இந்திய வம்சாவலி 10 முதல் 12 ஆசனங்கள்
என்ற அடிப்படையில் இது அமைய வேண்டும்.
சிங்கள சமூகத்திற்கு நேரடியாகத் தொகுதிகளை வகுப்பதில் பிரச்சினைகள் இருக்காது, அதேபோன்று இலங்கைத் தமிழர்கள் வடக்கிலும் கிழக்கிலும் 20 தொகுதிகளில் பெரும்பான்மையாக இருக்கின்றார்கள்.
முஸ்லிம்களைப் பொறுத்த வரை அவர்கள் 10 தேர்தல் தொகுதிகள் அளவிலேயே பெரும்பான்மையாக அல்லது கணிசமாக இருக்கின்றார்கள்.
இந்திய வம்சாவலி மக்களைப் பொறுத்த வரை நுவரெலிய மஸ்கெலியத் தொகுதியில் மட்டுமே அவர்கள் கனிசமான அளவு இருக்கின்றார்கள்.
எனவே தொகுதி முறையில் நேரடிப் போட்டி நிலைவரும் போது சிறுபான்மை சமூகங்களுக்கு நாம் போட்டிருக்கின்ற கணக்குப்படி பல ஆசனங்கள் கேள்விக்குறியாகின்றது.
கலப்பு முறையில் வரும் இந்தத் தேர்தலில் விகிதாசாரத்துக்குப் பிரதிநிதித்துவம் என்று வருகின்றபோது தமக்குக் கிடைக்கின்ற மொத்த வாக்கை வைத்து இலங்கைத் தமிழர் இன்னும் இரண்டு மூன்று ஆசனங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
முஸ்லிம்களையும் இந்திய வம்சாவலி மக்களையும் பொறுத்தவரை அவர்கள் சிதறி வாழ்வதால் நாம் குறிப்பிடுகின்ற இந்த விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ள மாற்றுவழிகள், வகுக்க வேண்டிய வியூகங்கள் என்ன என்பதனை புத்திஜீவிகள் மிகவிரைவாக சிந்தித்து அதற்கான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டி இருக்கின்றது.
கட்சிகள் கூட்டுச்சேரும் போது கடந்த காலங்களைப் போன்றுதான் விரும்பியவாறு கட்சி தாவி பதவி பட்டங்களுக்காக ஆளும் தரப்புக்கே வேறு தரப்புக்கோ போக முடியாது. அப்படிப் போனால் அந்த உறுப்பினர் பதவி காழியாகும். எனவே கட்சிகள் வெற்றி வாய்ப்புக்காகக் கூட்டுப்போட்டால் அந்தக் கூட்டிலே அடுத்த தேர்தல்வரை இருக்க வேண்டி வரும். சமூக நலனுக்காக கட்சிகள் சுயமாக செயலாற்ற முடியாத ஒரு நிலையும் உருவாகும்.

Post a Comment