மைத்திரிபால அரசு மக்களின் அடிப்படை + இனப் பிரச்சினைகளுக்கு தீர்வை ஏற்படுத்தாது - அநுரகுமார திஸாநாயக்க
நாட்டில் ஆட்சியமைத்திருக்கின்ற மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கோ அல்லது இனப்பிரச்சினைக்கோ தீர்வை ஏற்படுத்தாது எனத் தெரிவித்திருக்கின்ற மக்கள் விடுதலை முன்னணி, எதிர்வரும் ஏப்ரலில் நடைபெறவுள்ள அடுத்த பாராளுமன்றத் தேர்தலின் பின்னராக அமையும் அரசினூடாகவே இதற்குத் தீர்வை எதிர்பார்க்க முடியுமென்றும் தெரிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய நிலைமைகள் மற்றும் வடபகுதி மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் ஜே.வி.பி.யினால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அச்சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
இந்த நாட்டில் நடைபெற்ற ஆட்சியில் கடந்த கால ஆட்சி மிகமோசமான ஆட்சி என்பதை மறுக்க முடியாது. இந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அரச பலம் மற்றும் பண பலம் என்பன பயன்படுத்தப்பட்டிருந்தும் தோல்வி ஏற்பட்டது. இதற்கு மக்களின் சக்தியே மிக முக்கியமானதாக அமைந்தது. இதனை வடக்கு ,கிழக்கு, தெற்கு என்று அனைவரும் ஒன்றாக இணைந்து வெளிப்படுத்தியிருந்தனர். இவ்வாறு மக்கள் அனைவருமாக இணைந்து வெளிப்படுத்தியிருக்கின்ற மக்கள் சக்தியை இனவாதமாகவே பார்க்கின்ற நிலையும் இருக்கின்றது. ஆனால் அத்தகைய இனவாத ரீதியான கருத்துக்களை நாம் அடியோடு நிராகரிக்கின்றோம்.
இவ்வாறான இனவாதத்தை பரப்பி வருபவர்கள் முன்னாள் ஜனாதிபதியும் அவருடைய மடியில் தவழ்ந்த முன்னாள் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் கட்சியோ மக்கள் ஆதரவோ இல்லாத உதய கம்மன்பில போன்ற சில ஆதரவற்ற தரப்பினர்களே. ஏனெனில் அவர்கள் மகிந்தவிற்கு இருப்பிடத்தை ஏற்படுத்தி தமது இருப்பிடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கே முயல்கின்றனர்.
இவ்வாறான நிலையிலும் மக்கள் விருப்பத்திற்கமைய மக்கள் சக்தியின் வெளிப்பாடாக புதிய ஆட்சியொன்று ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தற்போது அமைக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. இதனை இனவாதமாகப் பார்ப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இனவாதத்தை விதைத்து அனைவரையும் அச்சுறுத்தி மக்களை அடக்கி வைத்திருந்தது. மேலும் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களிடத்தே விசேட கவனம் செலுத்தி அவர்களின் அடிப்படைப் பிரச்சினைகளைக் கூட தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. இதனால் இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதில் தோல்வி கண்டுள்ளது.
இந்நிலையில் மாற்றமொன்று ஏற்படுத்தப்பட்டு பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புதிய ஆட்சியொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியில் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் உள்ளிட்ட இனப்பிரச்சினைக்குத் தீர்வை ஏற்படுத்த முடியாது. ஏனெனில் 100 நாட்களைக் கொண்டதான இடைக்கால ஆட்சியாகவே அமைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும் அதனைத் தீர்ப்பதற்குரிய பாரிய பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. எனவே எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் ஊடாக அமையப் போகும் அரசினூடாகவே உரிய தீர்வுகளை ஏற்படுத்த முடியும். இந்த நாட்டு மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எந்த ஆட்சியாளரிட மிருந்தும் தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியாது என்றார்.
.jpg)
Post a Comment