Header Ads



அதாஉல்லா, றிசாத் போன்று முஸ்லிம் அடையாளத்தை நீக்கியிருந்தால் கேட்டதெல்லாம் கிடைத்திருக்கும்.

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது மக்கள் எத்ர்நோக்கி வருகின்ற நிலப் பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு கரைவாகு வயல் பகுதியில் ஒரு தொகுதி காணியை நிரப்புவதற்காக தான் மேற்கொண்டு வருகின்ற முயற்சிகள் வெற்றியளிக்கும் கட்டத்திற்கு வந்திருப்பதாக கல்முனை மாநகர முதல்வரும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளருமான சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

சாய்ந்தமருதின் புதிய நகரமயமாக்கல் திட்டம் மற்றும் காணி நிரப்புதல் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் இடம்பெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் எண்ணூறுக்கு மேற்பட்ட காணிச் சொந்தக்காரர்கள் கலந்து கொண்டனர். அங்கு முதல்வர் நிஸாம் காரியப்பர் மேலும் பேசுகையில் கூறியதாவது;

"எமது கல்முனைத் தொகுதியில் சாய்ந்தமருது, கல்முனைக்குடி, மருதமுனை போன்ற பிரதேசங்களில் புதிதாக வீடமைத்து குடியிருப்பதில் மக்கள் பாரிய நிலத் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளார்கள் என்பதை அறிந்து கடந்த கல்முனை மாநகர சபைத் தேர்தலின் போது எனது விஞ்ஞாபனத்தில் காணி நிரப்பும் பிரச்ச்சினையை உள்ளடக்கியிருந்தேன்.

அதன் பிரகாரம் பிரதி முதல்வராக தெரிவானது தொடக்கம் அதற்கான தீவிர முயற்சிகளிலும் போராட்டங்களிலும் நான் ஈடுபட்டு வந்துள்ளேன். அதனை வெற்றி கொள்வதில் நான் பாரிய சவால்களை எதிர்கொண்டிருந்தேன்.

அப்போது நகர அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் அந்த அமைச்சின் செயலாளராக கோட்டபாய ராஜபக்சவும் பதவி வகித்தனர்.
இந்த அதிகாரத்தின் மூலம் நகர அபிவிருத்தி அதிகார சபையை கையில் வைத்துக் கொண்டே கொழும்பு மாநகரத்திற்கான பாரிய அபிவிருத்தித் திட்டங்களை அவர் முன்னெடுத்திருந்தார்.

அந்த வகையில் எமது மக்களின் குடியிருப்புக்கான நிலப் பிரச்சினை தொடர்பில் நான் கோட்டபாய ராஜபக்சவையும் உயர் மட்ட அதிகாரிகளையும் பல தடவைகள் சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, கடுமையாக போராடி வந்தேன். அதன் பயனாக 50 ஏக்கரை நிரப்புவதற்கான அனுமதியைத் தருவதாக உறுதியளித்தனர். 

ஆனால் நான் அதற்கு இணங்கவில்லை. குறைந்தது 300 ஏக்கருக்காவது அனுமதி தரப்பட வேண்டும் என ஒற்றைக்காலில் நின்றேன். அதற்கு 150 ஏக்கருக்கு முயற்சிப்போம் என்று சொன்னார்கள். அப்போது கோட்டபாய ராஜபக்ச நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக மேற்கொள்ளும் எந்தவொரு திட்டத்திற்கும் அமைச்சரவை அனுமதி தேவைப்பட்டிருக்கவில்லை. ஆனால் எமது விடயத்தில் அவர் இறுக்கமாக இருந்தார்.

ஏனென்றால் அவர் என்னிடம் நேரடியாகவே சொன்னார்; நீங்கள் இனவாதக் கட்சி நடத்துகின்றீர்கள், இனவாதம் பேசுகின்றீர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியில் இருக்கும் முஸ்லிம் எனும் பதத்தை நீக்கி விட்டு வாருங்கள் அல்லது நீ அந்தக் கட்சியில் இருந்து வெளியேறி எம்முடன் வந்து இணைந்து கொள்ளுங்கள், நீங்கள் கேட்பதை எல்லாம் செய்து தருகின்றேன். 300 ஏக்கர் காணியை நிரப்புவதற்கான அனுமதியை மாத்திரமல்ல, அதற்கான பாரிய இயந்திரத் தொகுதியையும் மற்றும் உண்டான உதவிகளையும் தருகின்றேன் என்று வற்புறுத்தினார்.

நான் சொன்னேன்; நாம் இனவாதம் பேசவில்லை. அதற்காக கட்சி நடத்தவில்லை. உங்கள் போன்ற தலைவர்கள் சிறுபான்மையினரை இன ரீதியாக புறக்கணித்து மேலாதிக்கம் செய்வதாலேயே நாம் ஒரு இனத்துவக் கட்சியை ஆரம்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது என்று கூறினேன். நீங்கள் இனவாதி என்று கூறுகின்ற மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் உறவினர்தான் நான் என்றும் அவரிடம் சுட்டிக்காட்டினேன். 

அதாஉல்லா, றிசாத் பதியுதீன் ஆகியோர் போன்று நாமும் எமது கட்சியின் பெயரில் முஸ்லிம் இனத்துவ அடையாளத்தை நீக்கியிருந்தால் நாம் கேட்டதெல்லாம் கிடைத்திருக்கும். ராஜபக்ச குடும்ப அரசாங்கத்தில் எமது கட்சிக்கு உரிய அந்தஸ்த்தும் அதிகாரமும் கிடைத்திருக்கும். கல்முனையும் பாரிய அப்விவிருத்தியைக் கண்டிருக்கும்.

இந்த நாட்டில் முஸ்லிம் கட்சிகள் எதுவும் இனத்துவ அடையாளத்துடன் இருக்கக் கூடாது என்பதில் கோட்டபாய உறுதியாக இருந்தார். அதற்காக எதையும் தருவதற்கு அவர் தயாராக இருந்தார். நான் அசைந்து கொடுக்கவில்லை. நான் ஒருபோதும் கோட்டாவுக்கு அஞ்சவில்லை. அவரது அதிகாரத்திற்கு அடிபணியவில்லை. அவரால் தரப்படும் எனக் கூறப்பட்ட சலுகைகளுக்கு சோரம் போகவில்லை.

நாட்டுத் தலைவர்கள் என்ற ரீதியில் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு தர வேண்டிய கடப்பாடு உங்களுக்கு இருக்கிறது என்று நான் அவரிடம் அடித்துக் கூறினேன். இப்படியொரு இக்கட்டான அரசியல் சூழலுக்குள் நின்று கொண்டே இக்கானிப் பிரச்சினைக்காக நான் போராடி வந்தேன். 

இதற்கிடையில் பொது பல சேனாவின் பிரச்சினையும் தலைதூக்கி விட்டது. அதையும் இந்த கோட்டபாயவே செயற்படுத்தி வந்தார் என்பதால் அவரை சந்திப்பதிலும் உறவைப் பேணுவதிலும் எனக்கு சிக்கல் இருந்தது. அதனால் தேசிய ரீதியில் விஸ்பரூபம் எடுத்த சமூகப் பிரச்சினைக்கே முன்னுரிமை கொடுத்தேன்.

இந்த சூழ்நிலையிலேயே ராஜபக்ச சாம்ராஜ்யம் வீழ்ந்து நல்லாட்ட்சி மலர்ந்தது மட்டுமல்லாமல் அவர்கள் வைத்துக் கொண்டு எம்மை ஆட்டிப் படைத்த நகர அபிவிருத்தி அமைச்சே எமது தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கிடைத்திருக்கிறது. அதனால் அமைச்சுப் பதவியை பாரமெடுத்த கையேடு எமது நகரமயம்மாக்கள் திட்டத்தையும் காணி நிரப்புவதற்கான எமது நீண்ட கால இலக்கையும் நிறைவேற்றிக் கொள்வதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் நாம் முடுக்கி விட்டுள்ளோம். 

நிச்சயம் அது வெற்றியளிக்கும் அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. புதிய நகரமயமாக்கல் திட்டத்தின் கீழ் குடியிருப்புகளுடன் நெடுஞ்சாலை, உள்ளக வீதிகள், பொதுத் தேவைகள் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் கொண்ட ஒரு நகரம் அமைவதற்கான வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. அது விரைவில் வர்த்தமானிப் பிரகடனம் செய்யப்படும்.

அடுத்த தேர்தலுக்கு மக்கள் காலடிக்கு வரவேண்டியிருப்பதால் இதனை நிறைவேற்றிக் கொடுங்கள் என்று இங்கு பள்ளிவாசல் தலைவரினால் கூறப்பட்டது. நிச்சயமாக இல்லை. இதனைக்காட்டி தேர்தலில் வாக்குக் கேட்க நான் ஒருபோதும் வர மாட்டேன். எமது மக்களின் தேவையையும் கஷ்டத்தையும் நன்கறிந்தே இந்தப் பணியை நான் மேற்கொண்டு வருகின்றேன். அதற்காக நான் எடுத்துள்ள பிரயத்தனங்கள், போராட்டங்களை இங்கு விபரிக்க அவகாசம் போதாது. அப்படியொரு அனுதாபம் எனகுத் தேவையுமில்லை.

நான் இதனை ஒரு சமூகப் பிரச்சினையாகக் கருதி இறைவனுக்கு அஞ்சிய படியே காரியமாற்றி வருகின்றேன். தேர்தலை இலக்கு வைத்தோ தனி நபர்களுக்குப் பயந்தோ நான் ஒரு வேலைத் திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை. அப்படியொரு எண்ணம் என்னிடம் கிஞ்சித்தும் கிடையாது. எனக்கு அமானிதமாக தரப்பட்டுள்ள அரசியல் அதிகாரத்தைக் கொண்டு என்ன செய்தாய் என்று மறுமையில் என்னிடம் இறைவன் கேள்வி கேட்பான் என்கிற அச்சத்துடனும் கடமையுனர்வுடனுமே நான் சேவையாற்றி வருகின்றேன்" என்று குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.