மலேசிய விமானம் மாயம் - தற்போது வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8-ம்தேதி சீனதலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற பயணிகள் விமானம் கடலில் விழுந்தது. இவ்விபத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த 239 பேரும் பலியாகினர்.
விபத்தை தொடர்ந்து அந்த விமான பாகங்களை இந்திய பெருங்கடலில் தேடும் பணி தீவிரமாக நடந்தது. இப்பணியில் ஆஸ்திரேலியா, சீனா, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ஈடுபட்டன. இருந்தும் விமானத்தின் உதிரி பாகங்களோ அல்லது விபத்தில் இறந்தவர்களின் உடலோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆஸ்திரேலிய நிபுணர்கள் தலைமையில் ஆழ்கடல் பகுதியில் 4 பெரிய கப்பல்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. சுமார் 60 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பகுதியை மையமாக வைத்து நடந்துவரும் இந்த தேடலில் 40 சதவீதம் நிறைவடைந்துள்ளது. எனினும், இதுவரை ஒரு சிறு துரும்பு கூட கிடைத்தபாடில்லை. மீதமுள்ள ஆழ்கடல் பகுதியை தேடும் பணிகள் வரும் மே மாதத்துக்குள் நிறைவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், விபத்துக்குள்ளாகி கடல் பகுதியில் விழுந்துவிடும் விமானங்கள் மீட்புப் படையினருக்கு விமானத்தின் கருப்பு பெட்டியில் இருக்கும் சுழலும் விளக்குகள் (locator beacon) சிக்னல் அனுப்பும். அந்த சிக்னலை வைத்து விமானம் விழுந்த பகுதியை சுலபமாக கண்டுபிடித்து விடலாம்.
ஆனால், 8-3-2014 அன்று மாயமான மலேசிய விமானத்தில் இந்த லொக்கேட்டர் பீகானுக்கு மின்சாரத்தை சப்ளை செய்யும் பேட்டரி சர்ச்சைக்குரிய அந்த விமானம் மாயமாவதற்கு சுமார் இரண்டாண்டு காலத்துக்கு முன்னதாகவே (2012) செயலிழந்துப் போயிருந்தது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதேவேளையில், விமானிக்கும் தரை கட்டுப்பாட்டு அறையில் உள்ள அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெறும் உரையாடல்களை பதிவு செய்யும் கருவியின் பேட்டரி இயங்கும் நிலையில் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த பேட்டரிக்கான உத்திரவாத தேதி காலாவதியான பின்னரும், மாற்றாக புதிய பேட்டரி பொருத்தப்படவில்லை. எனினும், முழுமையாக பயனற்றதாகிப் போவதற்கு முன்னதாக காலாவதி தேதிக்கு பின்னரும் சில நாட்கள் இவ்வகை பேட்டரிகள் வேலை செய்வதுண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த விமானம் விழுந்த இடத்தை மீட்புப் படையினரால் துல்லியமாக கண்டுபிடிக்க முடியாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம் என்று தற்போது தெரியவந்துள்ளது. பீக்கான் பகுதி பேட்டரி இயங்காத நிலையிலும் கருப்பு பெட்டி ஒழுங்காக வேலை செய்திருக்கும். அனைத்து தகவல்களும் அதில் பதிவாகி இருக்கும் என நம்பப்படுகின்றது.
மாயமான மலேசிய விமானம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மலேசியாவில் உள்ள ஒரு நிறுவனம் இதே விமானத்தில் அனுப்பிவைத்த 221 கிலோ லித்தியம் இயான் பேட்டரிகளை சரியான முறையில் பரிசோதிக்காமல் ஏற்றப்பட்ட விமான நிலைய அதிகாரிகளின் மெத்தனப்போக்கும் இந்த விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
இதுதவிர, இந்த விமானத்தை ஓட்டிய இரு விமானிகளின் குணநலன்கள் மற்றும் அவர்களின் பொருளாதார நிலை தொடர்பாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விசாரணையின் முக்கிய நோக்கமே எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தவிர்ப்பது தானேயொழிய, யார் மீதும் பழி போடுவதற்காக அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment