Header Ads



முதியவரை நெகிழ்ச்சியில் அழவைத்த, பொதுமக்களின் அன்பு

இங்கிலாந்தின் வடக்கு டினிசைட் கவுன்டியை சேர்ந்த ஆலன் பர்னஸ், பார்வை மற்றும் வளர்ச்சி குறைபாடுகளுடன் பிறந்தவர். 4 அடி உயரமும் 38 கிலோ எடையும் கொண்ட இவர் கடந்த புதன்கிழமை மாலை அடையாளம் தெரியாத மர்ம நபரால் தாக்கப்பட்டார். பணம் இருக்கும் என்று நினைத்து இவரைத் தாக்கிய திருடன் ஆலனின் பாக்கெட்டில் பணம் இல்லாதது தெரிந்ததும் அவரைக் கிழே தள்ளிவிட்டு சென்றுள்ளான்.

இந்த தாக்குதலில் ஆலனின் கழுத்து எலும்பு உடைந்தது. கடும் வலியால் அவதிப்பட்ட அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ஒரு தனியார் செய்தி நிறுவனம் அவரிடம் பேட்டி எடுத்தது. இது போன்ற சம்பவம் யாருக்கும் நடந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் அந்த பேட்டியில் துணிச்சலாக சில கருத்துகளை ஆலன் தெரிவித்தார்.

இதயமற்ற ஒருவனால் கடுமையாக தாக்கப்பட்ட பின்னும் அவர் அந்த பேட்டியில் தைரியமாக பேசிய விதம் பல வாசகர்களை கவர்ந்தது. அதே நேரம் இவருக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து அறிந்த அனைவரும் அவரது நிலைமையை எண்ணி வருந்தினர்.அவர்களில் ஒருவர்தான் கேத்தி கட்லர். 21 வயதாகும் அழகு கலை நிபுணரான இவர், ஆலனுக்கு உதவும் நோக்குடன் இணையதளம் ஒன்றில் 'ஆலன் பர்னஸ் பண்ட்' என்ற பக்கத்தை தொடங்கினார். நியூசிலாந்து, அமெரிக்கா, தென் ஆபிரிக்கா மற்றும் கனடா என்று உலகம் முழுவதிலும் இருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இவருக்கு பணம் கொடுத்து உதவியுள்ளனர். இதனால் நான்கே நாட்களில் 2750000 பவுண்டு (2,57,20,946 ரூபாய்) நிதி கிடைத்துள்ளது.

இந்நிலையில் நேற்று தனது சகோதரியின் வீட்டில் வைத்து ஆலம் தனக்கு உதவிய கேத்தியை சந்தித்தார். இருவரும் கட்டிப்பிடித்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். அன்பு கரைந்து கண்ணீராக உருகும் அற்புதமான ஒரு நிகழ்வாக இந்த சந்திப்பு அமைந்தது.

உலகில் அன்பும் மனிதநேயமும் கொண்ட மக்கள் பலர் இருக்கிறார்கள் என்பதை இந்த சம்பவம் உறுதி செய்துள்ளது என்று கூறும் ஆலன், விரைவில் தனக்கென்று ஒரு வீடு வாங்கப் போகிறார். அதே சமயம், அவர் இனி தனது பென்சன் தொகையை எண்ணி எண்ணி செலவு செய்யும் நிலை இருக்காது என்பது அவரது சகோதரி உள்பட அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.