'மஹிந்தவின் ஆட்சியில் மோசடிகளில் ஈடுபட்ட, பிரமுகர்களின் கறுப்புப் பட்டியல் வெளியிடப்படும்'
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் காலத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட முக்கிய பிரபுக்கள் பற்றிய பட்டியல் ஒன்றை வெளியிட உள்ளதாக மின்வலு எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மஹிந்த ஆட்சிக் காலத்தில் பாரியளவில் மோசடிகளில் ஈடுபட்டு பல மில்லியன் ரூபா பணத்தை சம்பாதித்த முக்கிய பிரமுகர்களின் கறுப்புப் பட்டியலொன்று வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முக்கிய பிரபுக்களின் வங்கிக் கணக்கு விபரங்கள் பணம் பெற்றுக் கொள்ளப்பட்ட விதம் போன்ற பல்வேறு விடயங்களை நிரூபிக்கக் கூடிய ஆதாரங்கள் உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.
விரைவில் இவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டவர்கள் பற்றிய விபரங்கள் பெயர் அடிப்படையில் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பட்டியலில் குறிப்பிடப்படும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது சவாலாக இருக்காது எனவும் ஏனெனில் பூரண ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் ஆட்சி நிர்வாகத்தின் மீது பொறாமை கொண்டவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக சம்பிக்க தெரிவித்துள்ளார்.
தம்மையும் தமது குடும்பத்தாரையும் அச்சுறுத்துவதாகவும் நாட்டை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கப்படுவதாகவும் போலியாக பிரச்சாரம் செய்து வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்ட முடியாது என உறுதியானவர்கள் மஹிந்த ராஜபக்ஸவை மீளவும் அரசியலில் களமிறக்க முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
வாக்காளர்களை முட்டாளாக்கி, மஹிந்த மீது மக்களுக்கு அனுதாபத்தை ஏற்படுத்தி மீண்டும் பாராளுமன்றிற்குள் நுழைந்து கொள்வதே இவர்களின் நோக்கமாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த முயற்சிகள் வெற்றியளிக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment