Header Ads



விமான நிறுவன உரிமையாளரின் மகள் என்றால்..?


"மேகடேமியா' என்ற கடலை உணவை விமானப் பணிப்பெண் பரிமாறிய விதம் பிடிக்காததால் கடும் கோபமடைந்த கொரியன் ஏர் விமான நிறுவன உரிமையாளரின் மகள், ஓடுபாதையிலிருந்த அந்த விமானத்தை மீண்டும் பயணிகள் ஏறுமிடத்துக்கு ஓட்டிச் செல்ல உத்தரவிட்டது தொடர்பாக அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கொரியன் ஏர் நிறுவன உரிமையாளரின் மகளும், அந்த நிறுவனத்தின் அப்போதைய துணைத் தலைவருமான சோ ஹூனா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவின் கென்னடி விமான நிலையத்திலிருந்து தங்கள் நிறுவன விமானத்தில் புறப்பட்டார்.

ஓடுபாதைக்கு அந்த விமானம் வந்தபோது, "மேகடேமியா' என்ற கடலை உணவை விமானப் பணிப்பெண் அவருக்கு அளித்தார்.

அந்தக் கடலையை தட்டில் வைத்துத் தராமல் பொட்டலமாக அப்படியே அளித்ததால் கோபம் தலைக்கேறிய சோ ஹூனா, அந்தப் பணிப்பெண்ணை உடனடியாக வேலையை விட்டு நீக்கினார்.

மேலும், அந்த விமானத்திலிருந்து பணிப்பெண்ணை உடனடியாக வெளியேற்றுவதற்காக, மீண்டும் பயணிகள் ஏறும் பகுதிக்கு விமானத்தை ஓட்டிச் செல்லுமாறு விமானிக்கு உத்தரவிட்டார்.

இதனால் 250 பயணிகள் இருந்த அந்த விமானம் புறப்பட 20 நிமிடங்களுக்கு மேல் தாமதமானது.

சாதாரண கடலைக்காக இவ்வளவு பெரிய களேபரத்தில் சோ ஹூனா ஈடுபட்ட விவகாரம் வெளியே கசிந்தபோது, உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

ஆங்கிலப் பத்திரிகைகள் இந்தச் சம்பவத்தை "நட் ரேஜ்' (கடலைக் கோபம்) எனப் பெயரிட்டு செய்திகள் வெளியிட்டன.

பெரும் தொழிலதிபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் ஆதிக்கத்தில் சிக்கித் தவிப்பதாகக் கூறப்படும் தென் கொரியாவில் இந்த விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அதனையடுத்து கொரியன் ஏர் நிறுவன துணைத் தலைவர் பதவியிலிருந்து சோ ஹூனா விலகினார். எனினும் நிறுவனத்தின் பிற பதவிகளை அவர் ராஜிநாமா செய்யவில்லை.

இந்த நிலையில், விமானத்தின் பாதையை மாற்றியது, விமானியின் கடமையில் குறுக்கிட்டது, விமானப் பணிப்பெண்ணை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது உள்ளிட்ட செயல்கள் மூலம் விமானப் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்துக்காக சோ ஹூனாவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சியோல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.


No comments

Powered by Blogger.