Header Ads



கிழக்கு முதலமைச்சர் நியமனமும், முஸ்லிம் காங்கிரஸ் மீதான எதிர் விமர்சனங்களும்

-நவாஸ் சௌபி-

கிழக்கு மாகாண முதலமைச்சரை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றதிலிருந்து அதற்கான வாதப்பிரதிவாதங்களும் அது ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களுக்கு வழங்கப்பட்டது தொடர்பாக கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளும் முஸ்லிம் காங்கிரஸ் மீது அதிருப்தி நிலையை உருவாக்கியதான தோற்றப்பாடுகளை அளித்திருக்கிறது. முதலமைச்சரை எடுத்தாலும் குற்றம் எடுக்காவிட்டாலும் குற்றம் என்ற நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் ஆகிவிட்டது. இறுதியில் ஹக்கீமுக்கு கொடும்பாவி எரிக்கும் ஆபத்துவரை அது சென்றுவிட்டது. எந்த இடத்தில் ஹக்கீம் தலைவர் என்று உறுதிசெய்யப்பட்டு தக்பீர் முழங்கப்பட்டதோ அந்த இடத்தில் அவரை கொடும்பாவியாக காட்டப்பட்டிருக்கிறது. எந்த மக்கள் அவரை வாழ்க என்று தூக்கினார்களோ அம்மக்களே அவரே ஒழிக என்று தூற்றுவதாகவும் ஆகிவிட்டது. இதன் விளைவாக குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் ஆதரவை மேலும் இழந்து நிற்கின்றது என்ற விமர்சனங்களும் எழுந்திருக்கின்றது. இது இவ்வாறு இருக்க சாய்ந்தமருது மக்கள் யாருக்காக ஹக்கீமை கொடும்பாவி எரித்தார்களோ அவர் அக்கட்சியிலிருந்து விலக்கப்பட்டதும் பின்பு  அவர் உடனடியாக அக்கட்சியோடு மீண்டும் இணைந்துகொண்டதும் இடையிலுள்ள மக்களைத்தான் வேடிக்கை பார்க்க வைத்திருக்கிறது. ஆனாலும் மக்கள் இதனை மறந்துவிட்டார்களா? அல்லது தவறான ஒரு விடயத்தை நாம் செய்துவிட்டோம் என்று உணர்ந்துவிட்டார்களா?  எல்லாம் அவ்வாறே அமைதியாகிவிட்டது.

பொதுவாக ஹக்கீம் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைய ஏற்றதிலிருந்து இதுபோன்ற எதிர்ப்புகளும் விமசர்னங்களும் எழுந்துகொண்டுதானிருக்கின்றன. அந்த வரிசையில் இது ஒன்றும் புதிதுமில்லை பெரிதுமில்லை. இவ்வாறான விமர்சனங்களும் எதிர்ப்புக்களும் ஹக்கீம் மீது சுமத்தப்படுகின்ற போதும், மக்களிடத்தில் இருக்கும் கட்சி ஆதரவு ஹக்கீமை காப்பாற்றிக்கொண்டிருக்கின்றது.  ஹக்கீமுக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகளும் கருத்துக்களும் தனிப்பட்ட முறையில் வரவேற்புடையதாகவும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருந்தாலும் அதன் நோக்கம் ஒருபோதும் நிறைவேறதாபடியே இருந்துவருகிறது. அக்கருத்துக்கள் எதற்காக தோன்றுகிறதோ அதுவும் முழுமையாகாதபடியே மறைந்துவிடுகிறது.

இதன்படி ஹக்கீம் மீது இவ்வாறான விமசர்னங்களும் கருத்துக்களும் ஏற்படுகின்ற போது முஸ்லிம் காங்கிரஸிலிருந்து அவரை வேறாக்கிப் பார்க்கும் நிலை உருவாகி ஹக்கீம் மீதான எதிர்வாதங்கள் அனைத்தும் தோற்றுப்போகின்றன. இந்நிலைதான் தற்போதுள்ள முதலமைச்சர் விடயத்திலும் வாதங்களாகவும் விமர்சனங்களாகவும் எழுந்திருக்கின்றன. குறிப்பாக ஹக்கீம் மீதான எதிர் விமர்சனங்களும் கருத்துக்களும் இரண்டுவிதமாக எழுகின்றன. ஒன்று மக்களால் முன்வைக்கப்படுகின்ற எதிர்விமர்சனங்கள் மற்றது கட்சிக்குள் இருக்கின்ற கட்சிகாரர்களால் முன்வைக்கப்படுகின்ற எதிர் விமர்சனங்கள். இதில் மக்கள் முன்வைக்கும் எதிர்விமர்சனங்கள் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை மையமாகக் கொண்டது. கட்சிக்குள்ளிருப்பவர்கள் முன்வைக்கும் எதிர்விமர்சனங்கள் பதவி பட்டத்தை மையமாகக் கொண்டது. 

பொதுவாக சமூகத்திற்காக மக்கள் குரல் எழுப்புகின்ற எதிர் விமர்சனங்களில் ஹக்கீமின் தலைமைத்துவம் தவறுசெய்திருக்கிறதா? இல்லையா? என்பதை அச்சந்தர்ப்பத்தில் அந்த தலைமை நடந்துகொள்ளும் விதத்தை வைத்தே ஒரு தீர்மானத்திற்கு வரமுடியும். ஆனால் கட்சிக்குள் இருப்பவர்களின் எதிர் விமர்சனங்கள் பதவி மையமாகவே அதிகம் இருந்துவருவதனால் அதனை நாம் முழுமையாக ஹக்கீமின் தவறாக அல்லது குற்றமாக விமர்சிப்பதில் சிலசமயங்களில் எந்த அர்த்தமும் இல்லாமல் போகின்றது. இதற்குப் பல முன் உதாரணங்கள் எம்மிடம் இருந்தாலும் இறுதியாக நடைபெற்ற சாய்ந்தமருது சம்பவம் இப்போதைக்குப் போதுமானது.

இக்கருத்தின் அடிப்படையிலேயே நாம் கிழக்கு மாகாண முதலமைச்சர் நியமனம் தொடர்பான எதிர் விமர்சனங்களை நோக்க வேண்டி இருக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சரை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே இதில் மக்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்பு அது நிறைவேறியதும் அதற்கான எதிர் விமர்சனங்கள் எதுவும் மக்களிடத்தில் இருக்க நியாயமில்லை என்றபடி ஆகிவிட்டது. ஆனால் அது யாருக்கு கொடுக்கப்பட்டது என்பதில்தான் கட்சிக்குள்ளிருப்பவர்கள் பலருக்கும் அதற்கான போட்டி நிலை உருவாகி அது கட்சிக்குள் இருப்பவர்களின் எதிர்விமர்சனமாக பின்பு மாறிவிட்டது. இதன்படி முதலமைச்சரை முஸ்லிம் காங்கிரஸ் யாருக்கு கொடுத்தது என்பது மக்கள் எதிர்கொள்ளும் ஒரு நேரடி பிரச்சினையாக இல்லாது அது யாருக்காகவோ பேசப்படுகின்ற விமர்சனமாகவே பார்க்கப்படுகிறது. இதிலும் கட்சியின் நியாயம் மேலோங்கி இருப்பதாக மக்கள் தங்கள் நியாயங்களை மீள்பார்வை செய்ய வேண்டியும் இருக்கின்றது.

முஸ்லிம் காங்கிரஸின் முதலமைச்சராக ஹாபிஸ் நஸீர் தெரிவு செய்யப்பட்டதும் கட்சிக்கு எதிராக இருந்தவர் கட்சிக்கு புதியவர், முதலமைச்சர் நியமனம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு போகக் கூடாது, அவர் தகைமை இல்லாதவர் என்ற வாதங்கள் ஒருசிலரால் இதற்காக முன்வைக்கப்பட்டாலும் அவற்றையெல்லாம் புறம்தள்ளும்படி அது வழங்கப்பட்ட சந்தர்ப்பம் அதற்கான நியாயங்களை சரிகாண வைத்திருக்கிறது.  இங்கு கட்சிக்கு எதிரானவர் என்ற விமர்சனத்தை நோக்கும் போது, இதுபோன்று கட்சிக்கு எதிரானவர்கள் என்ற பட்டியலில் இப்போதுகூட முஸ்லிம் காங்கிரஸில் அடையாளம் காணப்பட்ட எத்தனையோ பிரமுவர்கள் உயர் இடங்களில் இருக்கின்றார்கள். யார் இந்த பொலிஸ்காரன் என்று பெரும் தலைவர் மர்ஹூம் அஸ்ரஃப் அவர்கள் அணிந்துரை எழுதி ஒரு கைநூல் வெளியாக்கும் அளவுக்கு கட்சிக்கு எதிராக இருந்தவரையும் பின்பு அவர் இக்கட்சியில் இணைந்ததும் மக்கள் ஏற்றுகொண்டு வாக்களிக்கவில்லையா?

பெரும் தலைவர் அஸ்ரஃப் அவர்களுக்கு துவக்கை எடுத்தவர்களும் கல்லாhல் எறிந்தவர்ளும் பின்பு இக்கட்சிக்குள் வந்ததும் மக்களால் வரவேற்கப்பட்டு அரசியல் அந்தஸ்த்துப் பெறவில்லையா?  முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகி அதற்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்து அரசியல் செய்தவர்களும் இறுதியில் வேறு வழியில்லாமல் மீண்டும் முஸ்லிம் காங்கிரஸிற்குள் நுழைந்ததையும் மக்கள் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு வாக்களித்து பாராளுமன்றம் வரை அனுப்பவில்லையா? இப்படியான வரலாறுகள் பல இருக்கும் போது ஹாபிஸ் நஸீருக்கு மட்டும் இந்த எதிர்ப்பு வாத விமசர்னம் முன்வைக்கப்படுவது எப்படி ஏற்றுக்கொள்ளக் கூடியதாகலாம்.

கட்சிக்கு எவ்வளவு எதிரியாக இருந்தாலும் அவர் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்தவுடன் அதனை மக்கள் மன்னித்துவிடுகின்றார்கள். அதுதான் முஸ்லிம் காங்கிரஸில் இணைகின்ற எதிரானவர்களுக்கான முதல் விமோசனமாகிவிடுகிறது. இதுதான் இந்தக் கட்சிக்குள்ள பெரும் மதிப்பு இதனால்தான் இந்தக் கட்சிக்குள் ஆயிரம் முரண்பாடுகளிருந்தாலும் அதற்குள் இருந்துதான் அரசியல் செய்ய வேண்டும் என்று அதனுள் இன்றும் பலர் இருக்கின்றார்கள். கட்சியிலிருந்து வெளியானால் மக்கள் மனங்களில் இருந்தும் நாம் வெளியாகும் நிலை வரும் என்ற பயம் அதன் அரசியல் வாதிகளுக்கு இருக்கின்றது. 

ஆனாலும் ஹாபிஸ் நஸீர் எதிரானவர் என்ற கருத்துக்களில் உள்ள ஆதரங்களை விடவும் பலமான ஆதாரங்களையுடைய எதிர்கள் கட்சிக்குள் இருக்கின்றார்கள் என்ற நியாயத்தினையும் இதற்கு எதிர்வாதம் செய்கின்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அடுத்து கட்சிக்கு புதியவர் என்ற வாதத்தினை கூறுகின்ற போது அதனை நாம் எப்படி நியாயம் காண முடியும் என்ற கேள்வியும் இருக்கின்றது. ஏனெனில் முஸ்லிம் காங்கிரஸிற்கு ஹாபிஸ் நஸீர் ஒன்றும் புதியவரல்ல என்ற கட்சிப் பழமையும் அவருக்கு இருக்கின்றது.  எவரால்; கட்சி பலம் அடைகிறது என்றும் யாரால் கட்சிக்கு எதிரான பல எதிரிகள் தோற்கடிக்கப்படுகின்றார்கள் என்றும் குறிவைத்து ஒருவரை ஒரு பதவிக்கு தெரிவு செய்கின்ற போது அங்கு புதியவர் என்ற காரணத்தைவிடவும் பொருத்தமானவர் என்ற காரணம் ஏற்புடையதாகின்றது. 

இதற்கு உதாரணமாக கட்சிக்குள் பலர் இருக்கின்றார்கள் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் சிராஸ் மீராசாஹிப் கல்முனை மாநாகர சபைக்கும், நஸீர் மற்றும் தவம் ஆகியோர்; கிழக்கு மாகாணசபைக்கும்  தெரிவு செய்யப்பட்டது கட்சிக்குள் புதியவர்கள் என்கின்ற அடையாளங்களை கடந்தே ஆகும். இதுபோன்று இதற்கு இன்னும் பலர் உதாரணங்களாக இருக்கின்றனர். தகைமை என்ற வாதத்தை முன்வைத்தால் பெரும் தலைவர் அஷ்ரஃப் அவர்களால் முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகாரங்களுக்குப் பொருத்தமான ஒருவராக அடையாளம் காணப்பட்ட ஒருவராக ஹாபிஸ் நஸீர் இருந்திருக்கிறார் என்றால் அதைவிட ஒரு அரசியல் தகைமை வேறு என்ன வேண்டும் எனவும் கேட்க முடிகிறதல்லவா?  சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பானவராக அஷ்ரஃப் அiடாளம் காட்டிய ஒருவரை கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பானவராக ஹக்கீம் அடையாளம் கண்டதில் எந்த தகைமை குறைபாடுகளும் இல்லை. 

இதற்கு மேலாகவும் தகைமை பற்றி பேசுகின்றவர்கள் எதிர்பார்க்கும் தகைமை என்னவென்று அவர்கள்தான் அர்த்தம் கற்பிக்க வேண்டும். மேலுள்ள தனிப்பட்ட பார்வைகளுக்கு அப்பால் கட்சியின் நியாயம் என்பது அதன் அரசியல் அதிகாரப் பங்கீட்டை கிழக்கின் மூன்று மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிக்கும் பொறுப்பை நிறைவேற்றியதாகவே தெரிகிறது.  மத்திய அமைச்சரவையில் பெற்ற ஒரு இராஜாங்க அமைச்சரை அம்பாறை மாவட்டத்திற்கும் ஒரு பிரதி அமைச்சினை திருமலை மாவட்டத்திற்கும் பகிர்ந்தளித்த நிலையில் கிழக்கு மாகாண முதலமைச்சரை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்கியதில் கட்சியின் நியாயம் பிரதேசவாதங்களுக்கு அப்பால் நோக்கப்பட்டதாகவே இருக்கின்றது.

மேலும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பான கிழக்கு மாகாண ஆட்சியில் ஹாபிஸ் நஸீர் ஒரு அமைச்சராக இருந்தவர் என்ற நியாயங்களும் இருக்கின்றது. இவரோடு மன்சூர் அவர்களும் அமைச்சராக இருந்தார் என்று இவ்விடத்தில் நீங்கள் கேட்கலாம் என்றால் ஒரு இராஜாங்க அமைச்சரை அம்பாறைக்கு கொடுத்துவிட்டு மேலும் ஒரு முதலமைச்சரையும் இங்கே கொடுப்பது கட்சியின் அரசியலை எப்படி சமப்படுத்தும் என்ற கேள்வியை உங்களிடம் திருப்பிக் கேட்க வைக்கிறது அல்லவா?

அதே நேரம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களிடத்தில் இதற்கான போட்டி இருந்தது ஒருவருக்கு கொடுத்தால் மற்றவர் பாதிக்கப்படும் ஆபத்தும் இதில் இருந்திருக்கிறது. ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹபீஸ் நஸீர் என்ற ஒருவரே போட்டியின்றி பெறுவதற்கும் இழப்பதற்குமான ஒருவராக தனித்திருந்தார். அம்பாறை மாவட்டத்திலிருந்தவர்களின் உள்ளார்ந்த போட்டியும் இதனை ஹாபிஸ் நஸீருக்கு வழங்கவும் செய்திருக்கிறது. இப்படி கிழக்கு மாகாண முதலமைச்சர் நியமனம் தொடர்பான கட்சியின் நியாயங்களும் தனிப்பட்ட நியாயங்களும் வெளிப்படையக இருக்கும் நிலையில் இந்த முதலமைச்சர் நியமனம் எப்படி அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை குறைத்திருக்கிறது என்று இதற்கான எதிர்வாதம் புரிகின்றவர்கள் எதிர்வுகூறு முடியும். 

No comments

Powered by Blogger.