கழுத்தறுத்து ஓடியவர்கள் என்ற பழி வரக்கூடாது, அஷ்ரப் விட்ட இடத்தில், நான் நிற்கின்றேன் - அதாஉல்லா
(எம்.ஏ.றமீஸ்)
எம்மிடமிருந்து எல்லாவற்றையும் பெற்று விட்டு கடைசி நேரத்தில் கழுத்தறுத்து ஓடியவர்கள் என்ற பழி வரக்கூடாது என்பதற்காகவே நாம் மஹிந்த ராஜபக்ஷவின் பக்கம் நின்றோம் என தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.
'நாம் உன்னோடுதான்' என்னும் தொனிப்பொருளில் தேசிய காங்கிரஸ் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் வரவேற்பு வைபவமும் பொதுக் கூட்டமும் நேற்று(15) மாலை அக்கரைப்பற்று பிரதேசத்தில் இடம்பெற்ற போது அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் அவர் உரை நிகழ்த்துகையில், நமது மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் நமது மக்களுக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவங்களைப் பார்த்து மௌனிகளாக இருந்து விட்டு மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்து எதையெல்லாம் எடுக்க வேண்டுமோ அவற்றையெல்லாம் எடுத்து விட்டு மக்கள் வேறொரு பக்கம் சாய்ந்து விட்டார்கள் என்பதற்காக ஜனாதிபதித் தேர்தல் நடப்பதற்கு வெறும் பதினொரு நாட்கள் இருக்கும் போது மாறியவர்கள் இன்று வீராப்பு வசனங்கள் பேசுவதைப் பார்த்து நகைச்சுவையாக இருக்கின்றது.
நமது முஸ்லிம் மக்களுக்காக அவர்கள் செயற்பட்டவர்கள் என்றால் நமது மக்களுக்கு இன்னல்கள் ஏற்பட்டபோது மஹிந்தவின் பக்கம் இருந்து அவரை தூக்கி எறிந்து விட்டு சென்றிருக்க வேண்டும். நாங்கள் வாக்குறுதிகளுக்கு மாற்றமாக நடப்பவர்களல்ல. யார் வென்றாலும் தோற்றாலும் எமது நிலைப்பாடு ஒன்றாகவே இருக்கும். புலி பசித்தாலும் புல் தின்னாது என்பது போல நாம் கொள்கையில் நிலையாக நிற்பவர்கள். எமது முஸ்லிம் மக்கள் பள்ளிவாசல்களில் கொன்று குவிக்கப்பட்ட போதும், நமது மக்கள் நிம்மதியாக வாழ முடியாமல் இருந்தபோதும் நமக்கெதிரான பயங்கரவாதிகளை அழித்தார் என்ற காரணத்திற்காகவே நாம் மஹிந்தவின் பக்கம் நின்றோம்.
மஹிந்த ராஜபக்ஷ நமது மக்களுக்காக நாம் கேட்ட அனைத்தையும் செய்தவர், எம்மை நிம்மதியாக வாழச் செய்தவர் என்பகற்காகவே தோற்றாலும் வென்றாலும் ஒரே எண்ணப்பாட்டுடன் இருந்து செயற்பட்டோம். மக்கள் அலையாய் திரண்டபோது அந்த அலையில் அள்ளுண்டு போகாமல் நின்றவர்கள் நாம். அரசியலில் இவ்வாறாக கழுத்துக் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாடு ஒன்று இல்லைதான். இருந்தபோதிலும் விசுவாசமானவர்களுக்கு துரோகம் செய்ய முடியாது என்ற நிலைப்பாட்டிலே நாம் மஹிந்தவின் பக்கம் நின்றோம். அவரோடிருந்த காலத்தில் நமது மக்களுக்கு எவ்வாறான உதவிகளையெல்லாம் செய்யவேண்டுமோ அவற்றையெல்லாம் நாம் செய்திருக்கின்றோம்.
அரசியலில் உண்மைக்குண்மையாக செயற்படுகின்ற மக்களை தேசிய காங்கிரஸ் தோற்றுவித்திருக்கின்றது. இம்முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நமது பிராந்திய மக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் நடந்திருக்கின்றது. அக்கரைப்பற்று மக்கள் எதையோ இழந்தவர்கள் போல் காணப்படுகின்றார்கள். இம்மக்கள் அரசியலில் அநாதைகளிலில்லை. இம்மக்கள் யாருக்கும் அஞ்சவேண்டியதில்லை.
நான் என்ற தனி மனிதன்; தோற்று விடலாம். ஆனால் தேசிய காங்கிரஸ் என்ற மக்கள் சக்தி தோற்றுவிடக் கூடாது. நாங்கள் அரசியலில் எத்தனையோ காய்களை நகர்த்தி விட்டு வந்தவர்கள். எதிர்காலத்தில் பல்வேறான தேர்தல்கள் எம்மை நோக்கி வரவிருக்கின்றன. அந்த சந்தர்ப்பத்தில் நாம் காத்திரமான முடிவெடுத்து செயற்படவுள்ளோம். அந்த நகர்வுகளை நாம் முறையாக செய்யும் வரை தேசிய காங்கிரஸ் கட்சிக்காரர்கள் என்ற உணர்வுடன் மக்கள் இருக்க வேண்டும்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் பல்வேறான அமைச்சுக்களை பொறுப்பேற்று மக்களுக்காக பாரிய அபிவிருத்திகள் பலவற்றை நான் செய்திருக்கின்றேன். இம்முறையும் என்னால் அமைச்சராக வந்திருக்க முடியும். இலகுவாக இம்முறை அமைச்சராவதற்கு மக்களைப் பாவித்திருக்க முடியும் ஆனால் தேசிய அரசியலில் எமக்கென்று சேர்த்து வைத்த மானம் மரியாதை இழக்கக் கூடாதென்பதற்காகவே சுய மரியாதையோடு நாம் செயற்பட்டோம்.
நாங்கள் எப்போதும் ஒரு கொள்கையின் வழியிலேயே வாழ்கின்றவர்கள். எமது மக்களுக்கு அண்மையில் ஏற்பட்ட பிரச்சினைகளிலும் பார்க்க பெரும் பிரச்சினைகள் ஏற்பட்டபோது எமக்காகவும் எமது மக்களின் நலனில் அக்கறை கொண்டு செயற்பட்டவர்களினது பக்கம் நின்றோம். நாம் வாக்குறுதியளித்தது போல் நிலையாக நின்று செயற்பட்டோம். நமது முஸ்லிம் மக்களை தொப்பி புரட்டுபவர்கள் என்று இன்னொரு சமூகம் நகைச்சுவையாகப் பேசுகின்றவர்களாக நாம் இருக்கக் கூடாது. எமது கட்சி முடிவொன்றை எடுத்தால் எந்த சந்தர்ப்பத்திலும் மாறாமல் செயற்படும் என்பதை பல முறை நிரூபித்திருக்கின்றது.
எமக்குக் கிடைக்கின்ற பதவிகள் சில சந்தர்ப்பங்களில் இல்லாமல் கூடப் போகலாம். ஆனால் அரசியலில் நாம் இயற்கைத் தனமாக இருக்க வேண்டும். சிலரைப்போல் வேண்டுமென்றே சந்தர்ப்பவாத அரசியல் செய்யக் கூடாது. மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃபின் காலம் தொட்டு எமது அரசியல் செயற்பாடு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியோடு இணைந்ததாகவே நகர்ந்திருக்கின்றது. ஒரேயொரு முறை தலைவர் அஷ்ரஃப் ரணசிங்க பிரேமதாசவிற்கு வாக்களிக்கச் சொன்னார். அச்சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து செயற்பட முற்பட்டார். ஆனால் அந்நிலைமை நீடிக்கவில்லை. பின்னர் சந்திரிக்கா பண்டாரநாயக்வின் பக்கம் சென்று விட்டார். இதேபோல் ஒருமுறை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் நான் ஐ.தே.கட்சியன் பக்கம் கூட்டிச் செல்லப்பட்டேன். அப்போது ரணில் விக்ரமசிங்கவின் அந்த கோரப் பிடியிலிருந்து முஸ்லிம் மக்களைப் பாதுகாப்பதற்காக எமக்கான ஒரு கட்சி அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
நாங்கள் தலைவர் அஷ்ரஃபின் பாசறையில் வளர்ந்தவர்கள். பல தேர்தல்களை நாம் சந்தித்திருக்கின்றோம். காலத்திற்குக் காலம் சுய நல அரசியல் செய்யவில்லை. தலைவர் அஷ்ரஃப் விட்ட இடத்தில்தான் நான் நிற்கின்றேன். மக்களின் உணர்வுகளை மதித்தே நாம் அரசியல் செய்கின்றோம். எமது மக்களுக்காக பல்வேறான உதவிகளைச் செய்தவர்களுக்கு எம்மால் துரோகம் செய்ய முடியவில்லை. அந்த நன்றிக்கடனுக்காகவே நாம் மஹிந்த ராஜபக்ஷவின் பக்கம் நின்றோம். அண்மைக் காலத்தில் முஸ்லிம் மக்கள் மீது ஏற்பட்ட கசப்பான உணர்வுகளால் இப்பிராந்தியத்தில் மஹிந்தவிற்கெதிரான அலை ஒன்று எழுந்தது. அந்த அலையில் நாமும் அள்ளுண்டு போகாமல் நிதானமாக அரசியல் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் நாம் இருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள்தான். நாம் முன்னுதாரணம் மிக்க அரசியல்வாதிகளாக இருக்க வேண்டும். இலங்கையின் அரசியலில் வரலாற்றில் தற்போதைய சூழல் ஒரு விசித்திரமான கால கட்டமாக காணப்படுகின்றது. ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் அரசியலமைப்பு மாற்றத்தின் பின்பு ஜனாதிபதியும் பாராளுமன்றமும் ஒரே கட்சியாக இருந்ததைப் பார்த்திருக்கின்றோம். அதற்கு மாற்றமாக ஜனாதிபதியும் பாராளுமன்றமும் வௌ;வேறு கட்சியாக இருந்ததை ரணில் விக்ரமசிங்கவினதும் சந்திரிக்காவினதும் காலத்தில் பார்த்திருக்கின்றோம். இதற்கெல்லாம் மாற்றமாக பிரதம மந்திரியையும் எதிர்க் கட்சித் தலைவரையும் தெரிகின்ற சக்தி ஜனாதிபதியொருவருக்குக் கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பம் தற்போது நடைபெற்றிருக்கின்றது. அரசியலில் எவ்வாறான மாற்றங்களும் நிகழலாம். எதிர்காலத்தில் இலங்கையில் அரசியல் நிலைமை எவ்வாறு எமையப் போகின்றதென்பதை இறைவரன் ஒருவனே நன்கு அறிந்திருக்கின்றான்.
இலங்கையின் அரசியல் நகர்வுகளில் அடுத்த கணம் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாமல் இருக்கின்றது. எது நடந்தாலும் தேசிய காங்கிரஸ் நேர்மையானதும் நிதானம் மிக்கதுமான பாதையிலேயே செல்லும். எமது கட்சியலிருந்து சுய நலத்திற்காகச் சென்ற கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீனுக்கு எதிராக நாம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளோம். அவரை கட்சியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றார்.

Ah pothum unga viyakiyanam
ReplyDeleteIppothuthan Allah vinudaya nonsupport varuhintrathu pola election meetingla mahinda than velluvar entru allahwai Maranthu vaikiliya kathineengale marannthu poi vittatha munbalanced amaichchare ?
ReplyDeletePlease give up your politics because you make a division in muslims and this not the way of beloved leader marhoom Ashraff who always stood for unity.
ReplyDeleteஅதாவுல்லா அவர்களே !!!!! நீங்கள் எவ்வளவு சேவை செய்தாலும் நாங்கள் நன்றி செலுத்த மாட்டோம் ...நாங்கள் (அக்)கரப்பத்தானுகள் சேர் ராசீகா் பரீத் தையே அடித்து வரட்டியவா்கள்...
ReplyDelete