Header Ads



கூலிக்கு மாரடித்தலும், மகிந்த ராஜபக்சவும்

பழங்காலங்களில் மரண வீடுகளில் கூலிக்கு மாரடிக்கும் நடைமுறை இருந்தது.

கூலிக்கு மாரடித்தல் என்பது ஒரு மரணம் நேர்கிற போது உற்றார் உறவினர்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் தங்கள் நெஞ்சின் மீது அடித்துக்கொண்டு அழுவதற்கு அப்பால் பணக்கார வீடுகளில் கூக்குரலிட்டு அழுவதற்கென்றே கூலிக்கு ஆட்களை நியமித்திருப்பர். இவர்களில் பெரும்பாலும் வயதான பெண்கள் காணப்படுவர்.இன்னும் தமிழ் திரைப்படங்களிலும் கூலிக்கு மாரடிக்கும் காட்சிகளை காட்டிக்கொண்டிருக்கின்றனர்.

கூலிக்கு மாரடிப்போர் போலியாக அழுதாலும் சுற்றுச்சூழலின் கவனத்தை திருப்பி மரணவீட்டினை சோகம் ததும்ப வைத்திருப்பதில் கில்லாடிகள்.

இறந்தவரைப்பற்றிய புகழ், அவரது நிறைவேறா ஆசைகள், கடைசியாக அவர் சாப்பிட்ட உணவு, அவரது இறுதி வார்த்தைகள் என உறவினர்களால் அவ்வப்போது சொல்லிக்கொடுக்கப்படும் குறிப்புகளை ஓலங்களாக அவர்கள் எழுப்பிக்கொண்டிருப்பர்.

பிணம் நகரந்ததும் அவர்களது "பெர்போர்மன்சுக்கு"ஏற்றவாறு படி அளக்கப்படும்.

சரி இப்போது எதற்கிந்த கதை?

மஹிந்த ராஜ்ஜியம் மரித்த பிற்பாடு தென்னிலங்கையில் இப்போது ஒரு வகை ஒப்பாரி தொடங்கியுள்ளது.

அரசியல் பிணமாக நடமாடும் அவரைச்சுற்றி அவர் செல்லுமிடமெல்லாம் இந்த கூலிக்கு மாரடிக்கும் கூட்டமும் செல்கிறது.

"அபே ஜனாதிபதிதுமா...ஆயித் என்ட... அபி ஹரி துகய்...அனே அபே ஜனாதிபதிதுமா.... " (எங்கள்ஜனாதிபதியே...மீண்டும் வாருங்கள்....நாங்கள் துக்கப்படுகிறோம்....எங்கள் ஜனாதிபதியே....)

என்று பல்வேறு ஓலங்களை அவர்கள் எழுப்புகின்றனர்.

இடங்களுக்கு ஏற்றாற்போல் கூலிகளின் ஓலங்களும் மாறுகின்றன...!

ஆனால் மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் இவ்வாறு ஓலங்களோடு நடமாடவில்லை! அவர்களது சாதாரண நகர்வுகள் கூட கடுமையான கண்காணிப்புகளுக்கு உட்பட்டு மட்டுப்படுத்தப்பட்டன.

ஊடகங்கள் அவர்களை கண்டுகொள்ளவில்லை, அரச ஊடகங்களது கண்கள் அவர்கள் மீது மாத்திரம் குருடாகவே இருந்தன.

ஆனால் இன்று இறந்து போன சர்வதிகாரத்தின் மரண ஊர்வலத்தை எல்லா ஊடகங்களும் காட்டுகின்றன.

அரசு அதற்கு எந்த தடையினையும் விதிக்கவில்லை.

"அபே ஜனாதிபதிதுமா ஆயித் என்ட அபிவ பேரகன்ட..."

(எங்கள் ஜனாதிபதியே மீண்டும் வாருங்கள் எங்களை காப்பாற்றுங்கள்)

என்று கூலிக்கு மாரடிப்போர் கூச்சலிடும் போது....

"ஹரி ஹரி...அன்டன்ன எபா...மம எனவா...எனவா"

(சரி..சரி..அழவேண்டாம். நான் வருவேன்...வருவேன்) 

என்கிறார் மஹிந்த!

மரித்தவர்கள் மீண்டதுண்டோ?

அப்படித்தான் மஹிந்தவின் சர்வதிகாரமும் மரித்துவிட்டது!

அது எழுந்துவராதென்று கூலிகளுக்கும் தெரியும் ஆனாலும் வாங்கிய காசுக்கு அழுதுதானே ஆகவேண்டும்.

வேற வழி?

-Mujeeb M Ibrahim

1 comment:

  1. வெகுசிறப்பான ஒப்பீடு!

    பிணங்களின் ஆட்சி நடப்பதென்றால் அதற்கு இடுகாடுதான் பொருத்தமேயன்றி இலங்கை நாடு அல்ல.

    ReplyDelete

Powered by Blogger.