Header Ads



முஸ்லிம் சமூகத்துக்கு சில பொறுப்புகள் உள்ளன - ஒபாமா

இஸ்லாமுக்கு எதிராக அமெரிக்கா போரிடவில்லை என்று அந்நாட்டு அதிபர் ஒபாமா கூறினார்.

அமெரிக்க அதிபர் மாளிகை சார்பில் பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச மாநாடு நடைபெற்று வருகிறது. 60-க்கும் மேற்பட்ட நாடுகள் இதில் கலந்துகொள்கின்றன. அந்த மாநாட்டில் கலந்து கொண்டு ஒபாமா கூறியதாவது:

அல்-காய்தா, இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) போன்ற அமைப்புகள் தங்களின் செயல்பாடுகளை நியாயப்படுத்தப் பார்க்கின்றன.

அந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தங்களை மதத் தலைவர்கள் என்றும், இஸ்லாமைப் பாதுகாக்கும் புனிதப் போரில் ஈடுபட்டிருப்பவர்கள் என்றும் கூறிக் கொள்கின்றனர்.

தன்னை "இஸ்லாமிய தேசம்' எனக் கூறிக் கொள்ளும் ஐ.எஸ். அமைப்பு, அமெரிக்காவும் பிற மேற்கத்திய நாடுகளும் இஸ்லாமுக்கு எதிராகப் போரிட்டு வருவதாகக் கூறி வருகிறது.

இதைச் சொல்லித்தான் ஆதரவாளர்களைத் திரட்டவும், இளைஞர்களைத் தீவிரவாதத்தில் ஈடுபடுத்தவும் முயற்சி செய்கிறார்கள்.

ஆனால் அந்த வாதத்தை ஏற்க முடியாது. அவர்கள் கூறுவது பொய். அவர்களுக்கு மத ரீதியான முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதை ஏற்க முடியாது.

அவர்கள் மதத் தலைவர்கள் அல்ல; அவர்கள் பயங்கரவாதிகள்.இஸ்லாம் மதக் கோட்பாடுகளிலிருந்து குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் அல்-காய்தாவும் ஐ.எஸ்.ஸýம் பரப்பி வருகின்றனர்.

அவர்கள் இஸ்லாம் மதத்தின் சார்பாகப் பேசுவதாகத் தவறான தோற்றம் அளிக்கப்படுகிறது. இஸ்லாம் மதத்தில் வன்முறை உள்ளடங்கியுள்ளதாகவும் மனித நாகரிகங்களின் மோதல் நிகழ்கிறது என்றும் உலகெங்கும் உள்ள தவறான எண்ணத்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

நூறு கோடி முஸ்லிம்களின் சார்பில் அவர்கள் பேசவில்லை. எந்த மதத்தையும் பயங்கரவாதுக்குப் பொறுப்பேற்கச் செய்ய முடியாது. வன்முறைக்கும் பயங்கரவாதத்துக்கும் மனிதர்கள்தான் பொறுப்பு.

சிரியா, இராக் நாடுகளில் அப்பாவிகளின் தலைகளைத் துண்டிப்பது, உயிருடன் எரிப்பது போன்ற குரூரச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பாவிகள் கொல்லப்படுவதை நியாயப்படுத்தவே முடியாது. இஸ்லாமுக்கு எதிராக அமெரிக்கா போரிடவில்லை.

மேற்கத்திய நாடுகளுக்கும் இஸ்லாமுக்கும் இடையே போர் நடைபெறுவதாகப் பரப்பப்படும் பிரசாரத்தை நிராகரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் முஸ்லிம் சமூகத்துக்கும் சில பொறுப்புகள் உள்ளன என நான் கருதுகிறேன்.

இஸ்லாமை ஒடுக்கும் நோக்குடன் உலக நாடுகள் செயல்படுகின்றன என்ற தோற்றத்தை அந்த மதத் தலைவர்கள் நிராகரிக்க வேண்டும் என்று ஒபாமா கூறினார்.

No comments

Powered by Blogger.