வளர்ந்து வரும் தேசப் பற்றும், இருட்டடிப்பு செய்யப்பட்ட சோனக பங்களிப்புகளும்..!
-டாக்டர் I.L.M. றிபாஸ்-
நல்லாட்சி நோக்கிய ஒரு பயணத்தில் பல சவால்களைத் தாண்டி இலங்கை தேசத்தின் மக்களில் பெரும் பன்னமையானோர் ஒரு மாற்றத்திற்காக ஒன்றினைந்து உழைத்தனர். அந்த உழைப்பின் பிரதிபலனை அனுபவிக்கும் காலம் மலர்ந்துள்ளதாக மக்கள் நம்புகின்றனர், அதற்காக கொஞ்சம் பொறுமையுடன் காத்திருப்பதற்கும் பெரும்பாலான மக்கள் தம்மை தயார்ப் படுத்தி இருக்கின்றனர். இந்த நல்லாட்சி நோக்கிய மாற்றத்திற்கு சிறுபான்மை சமுகம் தம்மை முழு ஈடுபாட்டுடன் அர்ப்பணித்தது, அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமுகம் தனது கடந்த கால கசப்பான அனுபவங்களை முன்னிறுத்தி மகிந்தவின் அரசுக்கு சரியான பாடம் ஒன்றை கற்பிக்க இறைவன் இவ்வளவு விரைவில் சந்தர்ப்பத்தை வழங்குவான் என எதிர்பார்த்திருக்கவில்லை, அவ்வாறான சந்தர்ப்பம் கிடைத்தபோது அதனை நழுவவிட முஸ்லிம் சமுகம் தயாராக இருக்கவில்லை. முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த இன ரீதியான அத்து மீறல்களும், அடாத்தான நடவடிக்கைகளும், இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் கண்டும் காணாதது போல் இருந்து கொண்டு கடந்த கால அரசு நாடகமாடியதையும் மக்கள் ஐயமற அறிந்திருந்தனர். அதற்கு தக்க பாடம் புகட்ட தருணம் பார்த்திருந்த மக்களுக்கு கிடைத்த வாய்ப்பினை முழுவதும் பயன்படுத்தி தமது செய்தியினை கடந்தகால அரசுக்கு அழுத்தமாக சொல்லி வைத்தனர்.
இந்த மக்களின் மாற்றத்தை புரிந்துகொண்ட முஸ்லிம் அரசியல் தரப்பினர் தமது இருப்புக்கே கேள்வி எழுப்பப்படும் என உணர்ந்தபோது அரை மனதுடன் மக்களின் உணர்வுகளுடன் ஒத்துப்போய் இறுதி தருனத்தில்தான் மாற்றத்திற்கு உடன்பட்டனனர். இந்த அரசியல் வியாபாரிகளின் கணக்கு தப்பவில்லை அதன் பலாபலன்களை இப்போது பதவிகளாக இவர்கள் அனுபவிக்கின்றனர்.
இந்த மாற்றத்தின் பூரிப்பும் பெருமிதமும் சாஸ்வதமாய் நிலைத்து நிற்கும் என நாம் நம்ப முடியாது. இதனை தக்க வைத்துக் கொள்வதற்கான நேர்மையான உழைப்பும் அர்பணிப்பும் நமது முஸ்லிம் தரப்பிலிருந்தும் குறிப்பாக அரசியல் தரப்பிலிருந்தும் அனைத்து இன மக்களாலும் எதிர் பார்க்கப்படுகிறது. இதற்காக பொறுமையுடனும் ஒற்றுமையாகவும் உழைக்கவேண்டியுள்ளது. சிவில் சமுக மற்றும் அறிவுசால் தரப்பினரின் பங்களிப்பும் பெரிதும் வேண்டப்படுகிறது. அறிவு பூர்வமற்ற குறுகிய அரசியல் நோக்கமுடைய செயற்பாடுகளை முஸ்லிம் அரசியல் தரப்பு முன்னெடுக்கும் போது இதற்கான எச்சரிக்கையினை மிக கடினமான தொணியில் சிவில் சமுகம் மற்றும் அறிவியல் சமுகம் காத்திரமாக முன்வைக்க வேண்டும்.
இந்த அடிப்படையில் நாம் கொண்டாடி இருக்கின்ற நமது 67வது சுதந்திர தினம் நமக்கு சில வினாக்களை விட்டுச் சென்றுள்ளது. இதில் முக்கியமான ஒரு விடயம்தான் இந்த தேசத்தின் விடுதலையில் எழுச்சியில் முன்னேற்றத்தில் முஸ்லிம் சமுகம் வழங்கிய பங்களிப்பு என்ன? என்கின்ற வினாவாகும். கடந்த அரசின் இனவாதிகள் முஸ்லிம் சமுகம் இந்த நாட்டின் தேசிய நலனில், தேசிய விடுதலையில், பயங்காரவாதததற்கு எதிரான போரில் எந்த பங்களிப்பயுமே செய்யவில்லை என ஒரேயடியாக மறுதலித்து பிரச்சாரம் செய்தனர்.. இது முழுப் பொய்யாக இருந்த போதிலும் இதற்கான அழுத்தமான எதிர் பிரச்சாரத்தை முழு வீச்சில் செய்வதற்கு முஸ்லிம் தரப்பினால் முடியவில்லை. அது மட்டுமல்லாது போதிய சான்றுகளுடன் கூடிய ஆதாரங்கள் முஸ்லிம்களிடம் காணப்படவும் இல்லை. இதற்கான காத்திரமான பங்களிப்பினை வழங்க முடியாத கையறு நிலையில்தான் முஸ்லிம் அரசியல் இருந்தது, அத்தோடுசரியான ஆதாரங்களோடு கூடிய தரவுகளை முன்வைத்து விஞ்ஞான பூர்வமாக விவாதிக்கும் அளவிற்கோ அல்லது பிரச்சார ரீதியான பங்களிப்புகளை வழங்க கூடிய அளவிற்கோ சிவில் தரப்புகளும் போதிய பலம் பெற்றிருக்கவில்லை.
இப்படி ஒட்டுமொத்தமாக நிராகரிக்கும் அளவிற்கு இலங்கை தேசத்தின் நலனுக்காக எந்தப் பங்களிப்பினையும் முஸ்லிம் சமுகம் வழங்கவே இல்லை என மறுதலிப்பது மிக பாரதூரமான இருட்டடிப்பும் பொய்யுமாகும். நாட்டின் பிரிவினை வாத்தத்திற்கு எதிரான நிலைப்பாடினை கொண்டிருந்ததால்தான் பயங்கர வாதிகளின் மிகக் கடுமையான தாக்குதல்களுக்கு முஸ்லிம் சமுகம் முகம் கொடுத்ததது. அந்த ஒரே காரணத்திற்காகத்தான் வடக்கிலிருந்து இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டு விரட்டியடிக்கப் பட்டது, வடக்கிலும் கிழக்கிலும் மிகமோசமான பொருளாதார மற்றும் உயிர் இழப்புகளை சந்தித்தது. இந்த இழப்புகளும் துயரங்களும் சரியாக ஆவணப் அடுத்தப் படாமலும் ஒருங்கிணைக்கப் படாமலும் இருப்பதானால் ஒட்டு மொத்த இழப்பின் பெறுமானம் மிகச் துல்லியமாகவும் சரியான விகிதத்திலும் உலகிற்கு முன்வைக்கப் படவில்லை. அங்கும் இங்குமாக சில முன்வைப்புகளைத் தவிர ஒரே பார்வையிலான சரியான அழுத்தத்துடன் இந்த விடயங்களை சமுகம் முன்வைக்கவில்லை. முஸ்லிம் சமுகத்தின் இழப்புகளை அவர்கள் முகம் கொடுத்த சவால்களை சர்வதேசத்திற்கு முன்வைக்கக் கூடிய பல சந்தர்ப்பங்களில் கூட நமது அரசியல் சக்திகள் அதனைப் பயன்படுத்த தவறின அத்துடன் இதற்கான சரியான அணுகுமுறையும் அவற்றிடம் இருக்கவில்லை.
தற்போது உருவாகியுள்ள ஓர் சுமுக சூழலிலாவது முஸ்லிம் தரப்பு தமது பொருளாதார மற்றும் உயிர் இழப்புக்கள் பற்றியும், இந்த நாட்டின் நலனுக்கான தமது பங்களிப்புகள் பற்றியும் மிக துல்லியமாக ஆவணப் படுத்த முனைய வேண்டியுள்ளது, அத்தோடு இந்த ஆவணங்கள் ஒருங்கிணைக்கப் பட்டு ஒரு வரலாற்று ஆதாரமாக மாற்றியமைக்கப்பட வேண்டும் அத்தோடு இந்த தகவல்கள் இலங்கை தேசத்தில் வாழும் மக்கள் அனைவரையும் ஓரளவாவது போய்ச் சேரும் அளவிற்காவது பிரபல்யப் படுத்தக் கூடிய நுட்பங்களை பிரயோகிக்க வேண்டும்.
குறிப்பாக இனவாத பிரிவினை ஆரம்பிக்கப்பட்டு அது முழு சமராக வெடித்தபோது முதலாவதாக வடக்கில் வெடிக்க வைக்கப்பட்ட கண்ணிவெடியில் சிக்கி இந்த நாட்டிற்காக உயிரிழந்த கண்டியைச் சேர்ந்த கெப்டன் அலி தொடங்கி ஆழ ஊடுருவும் படையணியை அமைத்து புலிகளை நிலை குலையச் செய்து அந்த போர் நடவடிக்கைகளில் தனது உயிரினை தியாகம் செய்த கேணல் லாபிர் மற்றும் படு கொலை செய்யப்பட்ட புலனாய்வு அதிகாரி முத்தலிப், சரணடைந்த போது கொத்து கொத்தாக கொலை செய்யப்பட்ட சம்மாந்துறை பொலிஸ் அதிகாரிகள் போன்று பாதுகாப்பு படைகளில் இணைந்து இந்த நாட்டின் சமாதானத்திற்காக, ஒருமைப் பாட்டிற்காக தமது உயிர்களை தியாகம்செய்த பல நூற்றுக் கணக்கான முஸ்லிம் வீரர்களின் வரலாறு மிக இலகுவாக மறக்கடிக்கப்படுள்ளது, இவர்களைப் பற்றி பெரும்பான்மை சமுகம் மட்டுமல்லாமல் முஸ்லிம் சமூகம் கூட பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை ஆனால் தமது உயிரைப் பணயம் வைத்து இந்த தேசத்தின் ஒருமைப் பாட்டிற்காக உயிர்த் தியாகம் புரிந்த இவர்களின் வரலாறுகள் மீட்டப்பட வேண்டும். ஒரு முஸ்லிம் செய்யும் சிறிய தவறும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுகத்தை குறிவைத்துக் குத்திக் காட்டப்படும் போது பாதுகாப்புப் படையில் இணைந்து தம்மையே அர்ப்பணித்த நூற்றுக் கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் பற்றி தனியாக சுட்டிக் காட்டுவதில் தவறு இருக்க முடியாது.
இந்த வீரர்களது பெயர்கள் தனியாக சிறிய வாழ்க்கைக் குறிப்புகளுடனாவது ஆவணமாக்கப்பட்டு இந்த நாட்டின் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு தரப்பின் பொறுப்பதிகாரிகளால் சான்றுப்படுத்தப்பட்டு முடியுமானால் ஒரு பெரிய நிகழ்வாக மேற்குறிப்பிட்டவர்களின் பிரசன்னத்தோடு இந்த தொகுப்பு வெளியிடப்பட வேண்டும், அத்தோடு இந்த வீரர்களுக்காக ஞாபகார்த்த அடையாளங்களும் (souvenir) நிறுவப்பட வேண்டும். இவ்வாறு பல தரப்புகளிலிருந்தும் முஸ்லிம் சமுகம் இந்த நாட்டின் நன்மைக்காக ஆற்றிய பங்களிப்புகள் ஆவணப் படுத்தப் பாடலானது இலங்கையின் ஏனைய இனங்களுக்கு முஸ்லிம்கள் பற்றிய சந்தேகங்களைக் களைய உதவுவதோடு உணர்வு பூர்வமான மரியாதையையும் உருவாக்க உதவும், அது மட்டுமல்லாது இது எமதும் தாய் நாடே என அதிக தேசப் பற்றோடு செயலாற்ற ஆரம்பித்துள்ள முஸ்லிம் சமுகத்தினை இன்னும் அழுத்தமாக நாட்டுக்காக செயலாற்ற தூண்டும் என்பது திண்ணமாகும்.
இந்த பாரிய பணியினை முஸ்லிம் சமுக அமைப்புகள் முன்வந்து செய்யவேண்டும் அதற்கான உதவிகளையும் ஆலோசனைகளையும் எமது அமைப்பான ஆய்வுக்கும் அறிவுப் பகிர்வுக்குமான மையம் செய்ய எப்போதும் தயாராக உள்ளது என்பதனை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
.jpg)
Post a Comment