''நாளை சூடான பல, தகவல்கள் வெளியாகும்'' (வீடியோ)
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அதிகாரிகள் சபை தொடர்பில் நாளைய தினம் இடம்பெறவுள்ள மாற்றங்கள் மற்றும் கட்சியின் யாப்பு மாற்றம் குறித்து அதன் சிரேஷ்ட தலைவர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் தலைமையில் இன்று முற்பகல் கொழும்பு டாலி வீதியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதனையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாப்பா நாளைய தினம் சூடான பல தகவல்கள் வெளியாகும் என குறிப்பிட்டார்.
கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்ன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் இரண்டு ஜனாதிபதிகளுடனும் ஒற்றுமையுடன் எதிர்கால செயல்பாடுகளை முன்னெடுப்பது குறித்து இன்று கலந்துரையாடியதாக குறிப்பிட்டார்.
இதற்கிடையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையிலான கூட்டமைப்பு என்ற பேரில் எதிர்கால செயல்பாடுகளை முன்னெடுப்பது குறித்து இன்று அவதானம் செலுத்தப்பட்டதாக முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவிக்கான வெற்றிடம் தொடர்ந்தும் நிலவுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச வெளிநாடு சென்றதையடுத்து பதவியில் இருந்து விலகுவதாக கட்சியின் பொதுச் செயலாளருக்கு அறிவித்திருந்தார்.
தேசிய அமைப்பாளர் பதவிக்கு அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை நியமிப்பது தொடர்பான யோசனை ஒன்று அண்மையில் ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகின.
எவ்வாறாயினும், ஹொரனையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமநாயக்க தேசிய அமைப்பாளர் பதவிக்காக தம்மை முன்னிலையாகுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
நாளைய தினம் புதிய அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளதுடன், பண்டாரநாயக்காவின் கோட்பாட்டிற்கு உட்பட்டவர்கள் அதற்காக நியமிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தேசிய அமைப்பாளர் பதவியை விட தலைமைத்துவ பதவியே அவசியமாக உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
.jpg)
Post a Comment