Header Ads



பள்ளிவாசல்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களே, ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்தன - ரவூப் ஹக்கீம்

நாட்டில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. முஸ்லிம் சமூகத்தின் புனித வணக்கஸ்தலங்களின் மீது தொடுக்கப்பட்ட அநியாயமான தாக்குதல்கள்தான் இந்த ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்தன என்று சொல்கிற அளவுக்கு இன்று நிலைமை ஏ ற்படிருக்கின்றது என நகர அபிவிருத்தி நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொத்தாந்தீவு கொலனி கிராமத்தில் புதிய ஜூம்ஆப் பள்ளிக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு  தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம் மேலும் கூறியதாவது;

கடந்த காலங்களில் இந்நாட்டு முஸ்லிம்கள் பல்வேறு பாரிய சவால்களுக்கு முகங்கொடுத்து வந்தார்கள். இவ்வாறான விடயங்கள் நடந்த போதும் அலட்சியப்போக்கோடு நடந்து கொண்ட ஆட்சியாளர்கள் அவ்வாறான அநியாயங்களுக்குத் துணை போனார்கள் என்ற ஆத்திரமும், ஆவேசமும் முழு நாட்டின் முஸ்லிம் சமூகத்தையும், ஒட்டுமொத்த சிறுபான்மைச் சமூகங்களையும் கடுமையாகப் பாதித்தது. எப்படியாவது அந்த அக்கிரமத்திற்கு முடிவு கட்ட வேண்டுமென்ற நிலையில்தான் ஆட்சி மாற்றம்  நிகழ்ந்தது.

இதனை எல்லா அரசியல் விமர்சகர்களும் வெளிப்படையாகவும், சூட்டுசுமமாகவும் சொல்லி வருகின்றார்கள்.  ஆனால்  முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் தங்களது இல்லங்களைப் பாதுகாப்பது என்பது அல்லாஹ்விடம் பொறுப்புக்கூறப்பட்ட விடயம். இருந்தாலும் ஆங்காங்கே சிறுபான்மைச் சமூகங்கள் அடிக்கடி இப்படியான நெருக்குவாரங்களுக்கு உள்ளாகின்ற நிலை இந்நாட்டில் மட்டுமல்ல முழு உலகிலும் பல மூலைமுடுக்குகளிலும் நடக்கின்ற சர்வசாதாரணமான விடயமாக இருக்கின்றது.

எமது நாட்டிலே எவ்வளவுதான் அக்கிரமங்கள் நடந்தாலும் கடந்த மூன்று வருடங்களுக்குள்  நடந்த சம்பவங்களின் பட்டியல் என்பது இதற்கு முன்னர் இந்தளவு குறுகிய கால எல்லைக்குள் அதிகளவு சம்பவங்கள் நடைபெறவில்லை என்பதைக் காட்டுகின்றன.  வேண்டுமென்றே முஸ்லிம்  சமூகத்தை வீண் வம்புக்கு இழுக்கின்ற விடயங்களைச்  சகித்துக் கொள்ள முடியாத ஒரு நிலையில்தான் சர்வதேச சமூகத்திற்கு முன்னாலும் முறையிட வேண்டிய நிலை  எங்களுக்கு  ஏற்பட்டது.

எவ்வளவுதான் சர்வதேச சமூகம், சர்வதேச இஸ்லாமிய  உலகம் எச்சரிக்கை செய்தபோதும்  அவற்றையெல்லாம் கவனத்தில் எடுக்காமல் ஆட்சியாளர்கள் அலட்சியப்போக்கோடு தாங்கள் பொறுப்பாளர்கள்  அல்ல என்ற  தோரணையில் நடந்து கொண்டார்கள். இதனை நாங்கள் எல்லோரும்  ஆத்திரத்தோடும் ஆவேசத்தோடும் அணுகினோம்.

அவற்றின் விளைவுகளாகத்தான் இறுதியிலே பாரியதொரு ஆட்சி மாற்றம் இடம்பெற்றிருக்கின்றது. இன்று முஸ்லிம் அல்லாத சமூகங்களும், ஏன் பெரும்பான்மைச் சமூகத்திலே இருக்கின்ற நேர்மையை, நியாயத்தை, சகல சமூகங்களுக்கு மத்தியிலும் சகிப்புத் தன்மையினைப் பேண வேண்டும்  ஒற்றுமையாகப் புரிந்துணர்வோடு வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கின்ற எல்லா நடுநிலையாளர்களும் வரவேற்கின்ற ஒரு முடிவாகத்தான் இந்த ஆட்சி மாற்றம் நடந்திருக்கின்றது என்றார்.

இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் உட்பட பிரதேச அரசியல் பிரமுகர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பள்ளிவாசல் பரிபாலன  சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

3 comments:

  1. நாம் நல்ல ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதில் பெரும்பான்மை உறவுகளும் உறுதியோடு இருப்பதனாலும் இந்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டது

    ReplyDelete
  2. Rauff! Have you forgoton you were giving oxigon to that Government?

    ReplyDelete

Powered by Blogger.