தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியில் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில்
-ஏ.எம்.கபீர்-
அண்மைக்காலமாக தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தொடர்பாக வலைத்தளங்களில் பரவிவரும் செய்திகள் எவ்வித அடிப்படைகளுமற்றவை. மிகக்குறுகிய காலத்தில் பாரிய வளர்ச்சியினைக் கண்டுவரும் இப்பல்கலைக்கழகத்தின் மீதும் அதன் நிருவாகத்தின் மீதும் காழ்புணர்ச்சி கொண்ட சிலர் இவ்வாறான செய்திகளை வழங்கிவருவது மிகவும் வருந்தத்தக்கது.
குறிப்பாக தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் அவர்களை தனிப்பட்ட முறையில் இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் இவ்விசமத்தனமான கருத்துக்களை பல்கலைக்கழக சமூகம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. மிகக் குறுகிய காலத்தினுள் பல்கலைக்கழக வளர்ச்சிக்கு துணைவேந்தர் கலாநிதி இஸ்மாயில் அவர்கள் வழங்கிய பங்களிப்பினை மூடிமறைத்து அவரது நற்பெயருக்கு அபகீர்த்தியினை ஏற்படுத்தும் வகையில் இவ்வூடகப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
கலாநிதி இஸ்மாயில் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் உட்கட்டுமானம், பௌதீக மற்றும் மனிதவள அபிவிருத்தியில் முன்னெப்போதும் இல்லாத அளவு வளர்ச்சி கண்டுள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகம் இலங்கையின் ஏனைய பல்கலைக்கழகங்களுடன் போட்டிபோடும் அளவுக்கு உயர்ச்சி கண்டுள்ளது. சர்வதேச மற்றும் தேசிய பல்கலைக்கழகத் தரப்படுத்தலில் பல தசாப்தங்கள் செயற்பாட்டில் உள்ள இலங்கையின் தேசியப் பல்கலைக்கழகங்கள் பலவற்றினைப் பின்தள்ளி இப்பல்கலைக்கழகம் முன்னேற்றம் கண்டுள்ளது.
உள்நாட்டு மாணவர்கள் மட்டுமன்றி சர்வதேச மாணவர்களும் இப்பல்கலைக்கழகத்தினை நாடிவந்து கல்வியினைத் தொடர்வதற்கான வாய்ப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இப்பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் தேவைகளையறிந்து செயற்படும் உபவேந்தர், அவர்களுக்கான அடிப்படைத் தேவைகள் பலவற்றினைப் பூர்த்தி செய்துள்ளதுடன் புதிய பீடங்களையும் பாடநெறிகளையும் அறிமுகப்படுத்தி ஆற்றலுள்ள பட்டதாரிகளை உருவாக்குவதற்கான முயற்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தியுள்ளார்.
பிராந்திய அபிவிருத்தியினை நோக்காகக் கொண்டு பாடநெறிகளை இனங்கண்டு அப்பாடநெறிகளை பல்கலைக்கழக மட்டத்தில் போதிப்பதற்கு துணைவேந்தர் கலாநிதி இஸ்மாயில் எடுத்துவரும் முயற்சிகள் பாராட்டத்தக்கது. இந்நிலையில் பல்கலைக்கழக நிருவாகம் தொடர்பிலும் அதன் மூதவை தொடர்பிலும் போலியான குற்றச்சாட்டுக்கள் சோடிக்கப்பட்டு வெளிவரும் இச்செய்திகள்மூலம் பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தினைக் கொண்டு நடாத்துகையில் முறையான நிதிக்கையாள்கையுடன் கூடிய சட்ட நியமங்கள் உபவேந்தரினாலும் பல்கலைக்கழக நிருவாகத்தினாலும் பின்பற்றப்பட்டுள்ளன. இதற்கான சட்டச் சான்றுகளும் இதர ஆவணங்களும் பல்கலைக்கழக நிருவாக மற்றும் நிதிப் பிரிவிடம் உள்ளன.
இவ்வாறான நிலையில் கல்விச் சமூகத்தினையும் பிரதேச மக்களையும் திசைதிருப்பும் நோக்கில் இத்தவறான போலிப் பிரச்சாரங்கங்கள் முன்னெடுக்கப்பட்டுவருவதனை பல்கலைக்கழக சமூகம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.

Post a Comment