பரீட்சை எழுதச் சென்ற 89 சிறுவர்கள் கடத்திச் செல்லப்பட்டனர்
தெற்கு சூடானில் பரீட்சை எழுதுவதற்காக அமர்ந்திருந்த 89 சிறுவர்களை ஆயுதமேந்திய தீவிரவாதிகள் கடத்திச் சென்றதாக சர்வதேச குழந்தைகள் நிதியமான ‘யூனிசெப்’ இன்று அறிவித்துள்ளது.
சூடானில் நடைபெறும் ஆட்சிக்கெதிராக போராடி வரும் ஆயுதம் ஏந்திய தீவிரவாதக் குழுவினர் பள்ளிகளில் படித்துவரும் ஆண் குழந்தைகளை கடத்திச் சென்று அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து, தீவிரவாதிகளாக மாற்றி அரசுக்கு எதிரான வன்முறை தாக்குதல்களில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் தீவிரவாதிகளுடன் அரசு நடத்திய சமரச பேச்சுவார்த்தையின் விளைவாக இவ்வகையில் கடத்தப்பட்ட 11 முதல் 17 வயதுக்குட்பட்ட சுமார் 300 சிறுவர்கள் விடுவிக்கப்பட்டனர். தீவிரவாதிகளாக மாற்றப்பட்டுள்ள சுமார் 12 ஆயிரம் சிறுவர்களில் மேலும் 3 ஆயிரம் பேரை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை சர்வதேச குழந்தைகள் நிதியமான ‘யூனிசெப்’ செய்து வருகின்றது.
இந்நிலையில், தெற்கு சூடானின் அப்பர் நைல் மாநிலத்தில் உள்ள வாவ் ஷில்லுக் நகருக்குள் நுழைந்த தீவிரவாதிகள் பள்ளி வகுப்பறையில் பரீட்சை எழுதுவதற்காக அமர்ந்திருந்த 89 சிறுவர்களை தற்போது மீண்டும் கடத்திச் சென்றுள்ளதாகவும், இவர்கள் அனைவரும் 13 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் ‘யூனிசெப்’ அறிவித்துள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

Post a Comment