புத்தளத்தில் தற்காலிக இணைப்புபெற்ற, மன்னார் வலய ஆசிரியர்களுக்கு 6 மாதம் காலநீடிப்பு
புத்தளத்தில் தற்காலிக இணைப்புப் பெற்றுள்ள மன்னார் வலய ஆசிரியர்களுக்கு மேலும் ஆறுமாதம் கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது
மன்னார் கல்வி வலயத்தைச் சேர்ந்த 6 பாடசாலைகள், புத்தளம் பிரதேசத்தில், அங்கு இடம்பெயர்ந்திருக்கின்ற வடக்கு மாகாண முஸ்லிம் மாணவர்களின் நலன் கருதி இயங்கிவருகின்றமை அறியப்பட்ட விடயமே 2010ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை இலக்குவைத்து அப்போதைய அரசாங்கத்தினால் வடக்கு மாகாணத்தில் தொண்டர் ஆசியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது, இந்நியமனத்தில் வடக்கு மாகாணத்தில் கடமையாற்றவென புத்தளத்தில் இடம்பெயர்ந்திருந்த தொண்டர் ஆசிரியர்களும் இணைக்கப்பட்டிருந்தனர். யுத்தம் நிறைவடைந்திருக்கின்ற இந்த சூழலில் வடக்கு மாகாணத்தில் சிவில், மற்றும் அரசியல் நிர்வாகங்கள் முறையாகத் தொழிற்படுகின்றன. மக்களும் தம்முடைய இருப்பிடங்களை நோக்கி மீளக்குடியேறிவருகின்றனர், வடக்கு மாகாணசபை நிர்வாகத்தின் கீழ் பல முஸ்லிம் பாடசாலைகள் மீளவும் திறக்கப்பட்டிருக்கின்றன. குறித்த புதிதாகத் திறக்கப்பட்டுள்ள பாடசாலைகளின் பாரிய அளவில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது.
இவ்வாறான நிலையில் 2015 பெப்ரவரி 22 முதல் அமுலாகும் வகையில் புத்தளத்தில் தற்காலிக இணைப்பினைப் பெற்று கடமையாற்றுகின்ற 15ற்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு தற்காலிக இணைப்பினை முடிவுக்கு கொண்டுவருவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சு அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது. எனினும் குறித்த ஆசிரியர்கள் தாம் இன்னமும் மீளக்குடியேற்றத்திற்கு தயாராக இல்லாத காரணத்தினால் தம்மால் மீண்டும் உடனடியாக மன்னார் மாவட்ட பாடசாலைகளில் கடமைகளைப் பெறுப்பேற்க முடியாதுள்ளது என வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் அவர்களினூடாக வடக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.
மேற்படி விடயம் குறித்து வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கௌரவ. த.குருகுலராஜா, வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அடிப்படையில் மனிதாபிமான நோக்கில் குறித்த பாடசாலை ஆசிரியர்களுக்கு ஆறு மாதகால தற்காலிக இணைப்பினை நீடித்து வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இதனடிப்படையில் குறித்த ஆசியர்கள் அனைவரும் எதிர்வருகின்ற 2015 செப்டம்பர் மாதம் முதல் மன்னார் வலயத்தில் உள்ள ஆரம்ப நியமன பாடசாலைகளில் பணிக்குத் திரும்பவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்விடயத்தின்போது வடக்கு மாகாணச்பை உறுப்பினர் அஸ்மின் அவர்கள் கருத்து வெளியிடும்போது, வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் வடக்கு மாகாணசபை கவனம் செலுத்திவருகின்ற சூழலில் இவ்வாறு ஆசிரியர்கள் தம்முடைய ஆரம்ப நியமனப் பாடசாலைகளில் கடமைக்குத் திரும்புவதற்கு மறுப்புத் தெரிவிக்கின்றமை முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு பாதிப்பாகவே அமையும், இவ்வாசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டபோது அப்போதிருந்த வன்னி மாவட்ட அரசியல் தலைவர்கள் பிழையான வழிகாட்டல்களை வழங்கியதும், அடிப்படை நியமனப் பாடசாலைகளில் கடமையாற்ற வேண்டும் என்கின்ற நிபந்தனைகளைத் தளர்த்தியமையும் இவ்வாறான பிரச்சினைகளுக்கு காரணம் எனவும் குறிப்பாக முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்குப் பாதிப்பாக அமைகின்றது என்றும் குறிப்பிட்டார், அத்தோடு மேலும் ஒரு கால நீடிப்பு வழங்கப்படமாட்டாது என்றும் அவர் தெரிவித்தார்.
.jpg)
Post a Comment