Header Ads



வாஸ் குணவர்த்தனவின் மனைவி முறைப்பாடு - ஷிரந்தி ராஜபக்ஷ சிக்குவாரா..?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு எதிராக முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவின் மனைவி ஷாமலி பெரேரா இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். 

நாட்டின் திறைசேரியில் இருந்த தங்கத்தை விற்பனை செய்ய முயற்சித்தமை தொடர்பில் அவர் முறைப்பாடு செய்துள்ளார். 

முறைப்பாட்டை செய்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், திறைசேரியில் இருக்கும் 100 கிலோ கிராம் தங்கம் 50 ஆயிரம் லட்சம் ரூபாவுக்கும் மோசடியான முறையில் விற்பனை செய்யப்பட உள்ளதாக தனது கணவருக்கு தகவல் கிடைத்ததாகவும் அதன்படி அவர் விசாரணைகளை நடத்தி சிலரை கைது செய்ததாகவும் குறிப்பிட்டார். 

விசாரணை முன்னேற்றம் அடைந்து சென்று கொண்டிருந்த வேளையில் மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க, தனது கணவரை சந்தித்து விசாரணையை நிறுத்துமாறு வலியுறுத்தியதாகவும் அரச ஊடகவியலாளர் ஹட்சன் சமரசிங்கவும் இவ்வாறு வலியுறுத்தியதாகவும் வாஸ் குணவர்த்தனவின் மனைவி ஷாமலி பெரேரா தெரிவித்துள்ளார். 

தனது கணவரான முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன விசாரணையை தொடர்ந்ததால் அவர் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தி சிறையில் அடைத்ததாகவும் இந்த விடயத்தை வெளியில் சொன்னால் கணவர் தொடர்ந்தும் சிறையில் இருக்க வேண்டிவரும் என அச்சுறுத்தியதாகவும் வெளிநாட்டில் உள்ள தனது மகன் மற்றும் தனக்கும் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இதேவேளை, மாலபே தொழிநுட்ப கல்லூரி மாணவன் நிப்புன ராமநாயக்கவை கடத்தி தாக்குதல் நடத்தியதாக வாஸ் குணவர்த்தன, அவரது மனைவி மற்றும் மகன் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.