Header Ads



கிழக்கு முதலமைச்சர் முஸ்லிமாக இருப்பது, தமிழ் - சிங்கள சமூகங்களுக்கு ஆரோக்கியமாக இருக்கும்

கலாநிதி அஷ் ஷெய்க் மசிஹுதீன் இனாமுல்லாஹ் 

தற்போதைய நிலைமையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியினை ஒரு முஸ்லிம் உறுப்பினரிடம் கையளிப்பதே தமிழ் மற்றும் சிங்கள சமூகங்களைப் பொறுத்தவரை ஆரோக்கியமான அரசியல் நகர்வாக இருக்கும்.

இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வை முன்வைப்பதற்கும், தேசிய பாதுகாப்பை ஊர்ஜிதம் செய்வதற்காகவுமே நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறை இந்த நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது, இந்திய இலங்கை உடன்படிக்கை அதன் மூலமே சாத்தியமானது, தற்பொழுது நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறை ஒழிக்கப்பட்டு பாராளுமன்றத்திடம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டணி இன்னும் சற்று நிதானமாகவும் பொறுப்பாகவும் முடிவுகளை எடுக்க வேண்டும்.

இந்திய இலங்கை உடன்படிக்கையின் பிரகாரம் அரசியலமைப்பின் மீதான 13 ஆவது திருத்தப் பிரேரணை அடிப்படையிலேயே மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன,  இணைந்த  வட கிழக்குடன் மாகாண சபை வழந்கப்பட்ட பொழுது அதனை புலிகள் நிராகரித்தமையும், இந்தியாவை பகைத்துக் கொண்டு இந்தியப் படைகளுடன் போரிட்டமையும், ராஜீவ் காந்தியை கொலை செய்ததுவும், முஸ்லிம்களை வடகிழக்கில் இனச் சுத்திகரிப்பு செய்தமையும் விடுதலைப்புலிகள் தற்கொலைக்குச் சமமாக செய்து கொண்ட மிகப் பெரிய அரசியல் மற்றும் வரலாற்றுத் தவறுகளாகும்.

விடுதலைப்புலிகள் நிராகரித்த மாகாண சபையினை பெற்றுக்கொண்ட ஈ பி ஆர் எல் எப், வரதராஜப்பெருமாள் தமிழ் தேசிய ஆமியை தோற்றுவித்து சகோதர முஸ்லிம் சமூகத்திற்கு இழைத்த கொடுமைகள் ஒரு புறமிருக்க ஈழப் பிரகடனம் செய்தமை தென்னிலங்கையில் தமிழர்களின் போராட்டம் குறித்த சந்தேகங்களை ஆழமாக விதைத்திருக்கிறது.

தென்னிலங்கை பேரின அரசியல் தலைமைகளுக்கு எவ்விதத்திலும் குறைவில்லாமல் விடுதலைப் புலிகளும், தமிழ் தலைமைகளும் இனப்பிரச்சினை விவகாரத்தை கோரா யுத்தமாக மாற்றுவதில் பங்களிப்பு செய்திருக்கின்றார்கள்.

தற்போதைய நிலைமையில் அதிகாரப்பரவலாக்கல் குறித்த அரசியல் தீர்வுகள் முன்வைக்கப்படாத நிலைமையில், முஸ்லிம்களது நிலைமை குறித்த தெளிவில்லாத நிலைமையில் முதலமைச்சர் பதவியை தமிழர் கூட்டணி கேட்பது நியாயமில்லை, அரசியல் ரீதியாக அவர்களுக்கும் ஆரோக்கியமானதாய் இல்லை.

இரண்டு மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் இணங்குகின்ற பட்சத்தில் வடகிழக்கை ஒரு மாகாணமாக பிரகடனப்படுத்துகின்ற சட்ட ஏற்பாடு இருக்கின்ற நிலைமையில், அவை முஸ்லிம்களா மத்தியில் கடந்த கால அச்சங்களை ஏற்படுத்தும், அதேவேளை தென்னிலங்கையில் தேசிய பாதுக்காப்பு குறித்த அச்சங்களை தோற்றுவிக்கும்.

சிங்கள மக்கள் தேசிய பாதுகாப்பு குறித்து பீதி கொள்ளாமல் இருக்கவும், முஸ்லிம் மக்கள் தமக்கான ஒரு தனி அலகை கோரும் நிலை ஏற்படாதிருக்கவும், அவ்வாறான ஒரு நிலையை தோற்றுவித்து பேரின மற்றும் பிறநாட்டு சக்திகள் எரிகிற வீட்டில் குளிர்காயாமல் இருப்பதற்காகவும், மாத்திரமன்றி தமிழ் பேசும் மக்களிடமே (முஸ்லிம்கள் உற்பட )அதிகாரங்கள் இருக்க வேண்டும் எனவும் சிந்திப்பதாயின் கடந்தகால தவறுகளை தமிழர் தேசிய கூட்டணி ஆத்திர அவசரத்தில் செய்து விடக் கூடாது.

பொதுத் தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ள நிலைமையில் அதை மைத்ரியிடமோ, ரணிலிடமோ கேட்டு நிற்பது தமிழ் மக்களின் நீண்ட கால அரசியலுக்கு ஆரோக்கியமாக இருக்காது. இந்தியாவுடனும் சர்வதேச சக்திகளுடனும் நல்லுறவுகளை கட்டி எழுப்பி தமிழ் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளுக்கு நியாயமான அரசியல் தீர்வை பெற்றுக் கொள்ளும் சாமர்த்தியமான,சமயோசிதமான நகர்வுகளை ஒருபுறம் வைத்து விட்டு தென்னிலங்கை பேரின சக்திகளை தூண்டி விட்டு நிலைமைகளை தமிழ் தேசியக் கூட்டணி ஆத்திர அவசரத்தில் கெடுத்துவிடக் கூடாது.

முஸ்லிம் ஒருவருக்கு வழங்குவதாயின் சகல தரப்புக்களையும் இணக்கப்பாட்டிற்கு கொண்டுவரவும், ஒரு முதலமைச்சரை சிபாரிசு செய்யவும் எல்லோரும் ஏற்றுக் கொள்கின்ற ஒரு சிவில் தலைமையால்  முடியும் என நான் நினைக்கிறேன்.

2 comments:

  1. ஐயா நன்றாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    ஆனால் ஒன்று..... உங்கள் அரசியல் வாதிகள் கடந்த கால சிந்தனையிலேயே தொடர்ந்து வாழலாம் என்று நினைப்பதுதான் தவறு

    .தமிழன் எதிர்ப்பு அரசியல் செய்கிற வரையும் தான் உங்கள் கபட அரசியல் எல்லாம்......நடந்து முடிந்த தேர்தலில் கூட கூட்டமைப்பு மகிந்தவுக்கே வாக்களியுங்கள் என்று தமிழ் மக்களுக்கு உத்தரவிட்டிருந்தால் இந்நேரம் நிலைமை தலைகீழ் ஆகியிருக்கும்...... தொடர்ந்தும் மற்ற சமூகங்களின் முதுகில் ஏறி அரசியல் செய்யாதீர்கள்

    கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு முஸ்லிம் சமூகத்தால் எவ்வளவோ இன்னல்கள் இளைக்கப்பட்டிருந்தும் இன்னும் இரு சமூகங்களும் புரிந்துணர்வுடன் வாழவேண்டும் என்பதே தமிழ் மக்களின் எண்ணம் உங்களுடைய'' நரித் தந்திர'' அரசியலால் இவற்றை கெடுத்துக்கொள்ளாதீர்கள்...

    ReplyDelete
  2. திரு. சுரேஷ் தில்லை,

    இனாமுல்லாஹ் கூறியதில் தவறு எதுவுமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

    எடுத்தவுடன் எல்லாவற்றையும் எல்லா சமூகங்களும் ஏற்றுக்கொண்டுவிட இலங்கைத் தீவு ஒன்றும் சுவிட்சர்லாந்து அல்ல.

    இலங்கை அரசியல் நிலவரம் எம்ஜியார் சினிமாக்களின் கடைசிக்காட்சி கிடையாது. அவரது வில்லன்கள் 'வணக்கம்' அல்லது 'சுபம்' போடுவதற்கிடையில் அவசரகதியில் சடுதியாக திருந்திவிடுவது போல சிங்கள - தமிழ் - முஸ்லீம் சமூகங்கள் தமது பகைமையை மறந்துவிட முடியாது.

    முதலில் இந்த 'அமைதியான' சூழலில் ஒருவரையொருவர் சந்தேகமின்றி நோக்க வேண்டும். அதற்கு ஒன்றிணைந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கு சிறிது காலமும் பொறுமையும் பரஸ்பர விட்டுக்கொடுப்புகளும் தேவை.

    ஆனால் இதற்கெல்லாம் வாய்ப்பே தராமல் இன்னும் பிரிவினை அரசியலையே எல்லோரும் பேசிக்கொண்டிருந்தால் எப்பொழுது இதெல்லாம் நடப்பது...?

    'முஸ்லீம் உறுப்பினர் ஒருவருக்கு' என்று குறிப்பிட்டுள்ளதை விட 'சிறிது மூளையும் சலுகைகளுக்குச் சோரம்போகாத சமூகப்பற்றும் நல்லிணக்கமும் கொண்ட முஸ்லீம் உறுப்பினர் ஒருவருக்கு' என்று திருத்திக்கொண்டால் இனாமுல்லாஹ் கூறியது யதார்த்தமானதே.

    ReplyDelete

Powered by Blogger.