ரவூப் ஹக்கீம், கதாநாயகன் ஆவாரா..?
-எம்.வை.அமீர்-
மக்களால் அதிரடியாக தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள், தனது தேர்தல் பரப்புரையில் மக்களுக்கு வாக்குறுதியளித்தபடி 100 நாள் அமைச்சரவையை அண்மையில் பிரகடனப்படுத்தினார். குறித்த 100 நாள் அமைச்சரவையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களும் இணைத்துக்கொள்ளப்பட்டு, ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச அவர்களது அமைச்சரவையில் இருவருக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சும் வழங்கப்பட்டுள்ளது.
100 நாட்களை மட்டுமே ஆயுட்காலமாகக் கொண்ட இவ் அமைச்சரவையில் அமைச்சுக்களைப் பெற்ற அமைச்சர்கள் உடனடியாகவே தங்களுக்குரிய அமைச்சுக்களுக்குச் சென்று தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளை ஆரம்பித்துள்ள நிலையில் வழங்கப்பட்டுள்ள 100 என்ற மூன்று தானங்களைக் கொண்ட நாட்கள் தற்போது இரண்டு தானங்களுக்கு மாறியுள்ளன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுப்பதவியானது கடந்த பலவருடங்களாக அபிவிருத்தியின்றி ஏங்கிக்கொண்டிருந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய அமைச்சாக இருக்கின்ற போதிலும் குறிப்பிட்ட நாட்களுக்குள் மக்கள் எதிர்பார்க்கும் அபிவிருத்திகளை அவர்களால் பெற்றுக்கொடுக்க முடியுமா என்றால் அதுகேள்விக்குறியே. காரணம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அடிமட்ட உறுப்பினர்களில் சிலர்முதல் உள்ளுராட்சிசபை உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் பாராளமன்ற உறுப்பினர்கள் வரை தங்களுக்கு பதவிகள் வேண்டும் என போராடி காலத்தை வீனடிப்பார்களானால் மக்கள் எதிர்பார்க்கும் அபிவிருத்தி கனவாகவே முடியும்.
வீடுகளை இழந்து தவிக்கும் கொழும்பு மக்களை எடுத்துக்கொண்டாலும் சரி நாட்டின் நாலாபக்கங்களிலும் வாழும் மக்களை எடுத்துக்கொண்டாலும் சரி அபிவிருத்தி என்ற தாகத்தில் இருக்கின்றார்கள் என்பதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
குறித்த 100 நாட்களின் பின்னர் இடம்பெறவுள்ள பாராளமன்ற தேர்தலில் தங்களது கட்சி பிரகாசிக்க வேண்டுமானால் தங்களது கட்சியின் அடிமட்ட போராளி முதல் பாராளமன்ற உறுப்பினர்கள் வரை ஒரே குடையின் கீழ் இணைத்து அவரவர் சார்ந்த பிரதேசங்களின் தேவைகளை உணர்ந்து உடனடியாக பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என்பதே மக்களின் ஆதங்கமாகும்.
முஸ்லிம் காங்கிரசின் தாயகம் என பேசப்படும் கல்முனை தற்போது உள்ள நிலையில் இருந்து மாற்றமடைய வேண்டும். புதிய திட்டங்களை தீட்டி காலத்தை வீணடிக்காது ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்களையாவது உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். சாய்ந்தமருதில் சுனாமியால் பாதிக்கப்பட்டு காணிகள் இல்லது கரைவாகுவட்டையில் சிறு சிறு துண்டங்களாக காணிகளை கொள்வனவு செய்து அதனை மூடி தங்களது இருப்பிடங்களை அமைக்க முடியாதுள்ள மக்களின் தடைகளை நிவர்த்தி செய்து கொடுக்க வேண்டும். சாய்ந்தமருதின் சோகம் என வரணிக்கப்படும் தோணாவை அபிவிருத்தி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் சம்மாந்துறை குடிநீர் திட்டத்தில் ஏற்பட்டுள்ள தடங்கல்களைக் கண்டு உடனடியாக அந்த மக்களுக்கான நீர் விநியோகத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறான மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்காது தனிநபர்களின் நலன்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுமானால் எதிர்காலத்தில் மக்களால் புறக்கணிக்கக் கூடிய நிலைக்கும் கட்சி தள்ளப்படலாம்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருக்கு எந்த அமைச்சைக் கொடுத்தாலும் செய்யமாட்டார் என்ற அபிப்பிராயம் மாறி திரைப்படங்களில் வருவது போன்று ஒரு நாள் முதல்வர் போல செயற்படவேண்டும் என்பதே வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பாகும்.
மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா? அல்லது தனிநபர்களின் பதவி ஆசைகள் நிறைவேறுமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.........

Post a Comment