Header Ads



'எனது இக்கருத்தானது எந்த சமூகத்தையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டதல்ல' - கோவிந்தன் கருணாகரம் (ஜனா)


நாடு கேட்டு ஐந்து ஊர்கேட்டு ஐந்து வீடு கேட்ட பாண்டவர் நிலைக்கு அன்று சம்பந்தன் ஐயா இறங்கி வந்த போது, தூக்கி எறிந்தவர்கள் இன்று எமது வாய்பை தட்டிப் பறிக்க நினைப்பது தார்மீக அரசியல் நெறிக்கு ஒவ்வாதது என்பதை அவர்கள் உணர வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று விடுத்துள்ள பகிரங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மாற்றத்துக்காக வாக்களித்து நாட்டின் அரசியல் தலைமையை தடம்புரட்டிய மக்கள் வசந்தம் மாகாண சபைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்திய விளைவு கிழக்கு மாகாண சபையையும் விட்டு வைக்கவில்லை.

ஆனால் அந்த மாற்றம் அதிகாரப் போட்டியினால் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. சற்று பின்னோக்கிய வரலாற்றை பார்ப்பின் மாகாண சபை முறைமையானது இலங்கையில் உருவாக ஒரே ஒரு காரணம் தமிழர் தரப்பின் அகிம்சை மற்றும் ஆயுதப் போராட்டங்களின் விளைவேயாகும். இதற்கு தமிழர் தரப்பு கொடுத்த விலை சொல்லில் வடிக்க முடியாது.

இக் காலத்தில் ஆட்சியிலும் அமைச்சரவையிலும் அங்கம் வகித்த முஸ்லீம் அரசியல் கட்சிகள் சிறுபான்மை இனத்தவர்களது மொழி, காணி, நிலம், அதிகாரம் தொடர்பான ஏன் முஸ்லீம் மக்களது பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கைகளை தமது இணக்க அரசியலூடாக எடுத்துக் கூறி தீர்ப்பதற்கு ஒரு துளியாகவும் முனையவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.

முஸ்லீம் கட்சிகளும் தலைவர்களும் முஸ்லீம் மக்களது பிரச்சினையை தேர்தல் காலங்களில் மட்டும் முஸ்லீம் பிரதேசங்களில் உரத்துக் கூறினார்கள் என்பது மட்டுமே உண்மை.

ஆனால் தமிழர் தரப்பின் ஆயுதப் போராட்ட அழுத்தம் தாங்காது அரசு தமிழர் தரப்படன் பேச்சுவார்த்தைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டபோது திடீரென தம்மையும் ஒருதரப்பாக அழைக்க வேண்டும் என்று கோசமெழுப்பி தமிழ்த் தரப்புக்கும் அரச தரப்புக்கும் இடையே தலையை நுழைக்க எத்தனித்தது.

அரசுடனும் அமைச்சரவையில் அங்கம் வகித்த வேளையிலும் தமது சமூகம் சார்ந்த பிரச்சினைகளில் போதிய அழுத்தம் கொடுத்திருந்தால் கூட அது தமிழர் தரப்பு நியாயமான போரட்டத்துக்கு ஓரளவு உரமாகியிருக்கும். ஆனால் இது தொடர்பாக மூச்சுவிடக்கூட திராணியற்றவர்களாகவே அவர்கள் இருந்தனர்.

அன்று இருந்து இன்று வரை முஸ்லீம் அரசியல் கட்சிகளது கொள்கை (முஸ்லீம் மக்களது கொள்கை அல்ல) இழித்த வாய் தமிழன் எப்படியோ எதிர்ப்பு அரசியல் செய்வான். அரசிலோ அமைச்சரவையிலோ அங்கம் வகிக்கும் பதவி ஆசை அவனுக்கோ அவனது சமூகத்துக்கோ இல்லை.

போராடி பிரச்சினை தீர்வுக் கட்டத்துக்கு வரும் வேளை தலையையோ மூக்கையோ நுழைக்கலாம் அதுவரை நாம் அரச பங்காளிகளாக இருந்து அனைத்து சுகபோகங்களையும் அனுபவிப்போம் என்பதாகவே இருந்துள்ளது. இன்னும் இருக்கின்றது.

கிழக்கு மாகாண சனத்தொகை அடிப்படையிலோ, கட்சிசார் அங்கத்துவம் அடிப்படையிலோ தமிழ்த் தேசியப் கூட்டமைப்புக்கு இன்றைய நிலையில் ஆட்சி அமைக்கக் கோரும் தார்மீக உரிமை உண்டு.

கடந்த மாகாண சபைத் தேர்தலின் போதும் தேர்தல் முடிவடைந்த பின்பும் சம்பந்தன் ஐயா இணக்க அரசியல் செய்வோம் இணைந்து கொள்வோம் என்று பகிரங்கமாக அறைகூவினார். அதை புறந்தள்ளினார்கள். முதலைமைச்சர் பதவியை எவ்வித நிபந்தனையும் இன்றி எடுங்கள் என்றார்.

புறக்கணித்தார்கள் அமைச்சர் அவையையும் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் நாம் இணைந்து ஆட்சி அமைப்போம் என்றார். அதையும் கூட உதறித் தள்ளி இரண்டரை வருட ஒப்பந்தம் போட்டு வழக்கமான தமது பாணியை தொடர்ந்தார்கள்.

நாடு கேட்டு ஐந்து ஊர்கேட்டு ஐந்து வீடு கேட்ட பாண்டவர் நிலைக்கு அன்று சம்பந்தன் ஐயா இறங்கி வந்த போது தூக்;கி எறிந்தவர்கள் இன்று காலம் எமக்கு சாதகமாகின்ற போது வழமையான தமது பாணியில் எமது வாய்பை கட்டிப் பறிக்க நினைப்பது தார்மீக அரசியல் நெறிக்கு ஒவ்வாதது என்பதை அவர்கள் உணர வேண்டும.;

எப்போதும் எப்பக்கம் சார்ந்ததேனும் எமக்கே அதிகாரமும் பதவியும் வேண்டும் என்ற குறுகிய கால அரசியலை விட்டு கடந்த கால அரசியலை விட்டு கடந்த கால அரசியல் வரலாற்றின் யதார்தங்களை உணர்ந்தும் எதிர்கால சமூக நல்லிணக்கத்தை கருதியும் விட்டுக் கொடுப்பு எத்தரப்பிலிருந்து வரவேண்டும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எனது இக்கருத்தானது எந்த சமூகத்தையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டதல்ல மாறாக இன்னமும் நமது அதிகார ஆசையால் எமது மக்களிடையே ஏற்பட இருக்கும் நல்லிணக்கத்தை தூரத் தொலைத்து விடக் கூடாது என்ற காரணத்துக்காகவே ஆகும்.

3 comments:

  1. Reasable opinion.pls skmc should come down with tna

    ReplyDelete
  2. திரு ஜனா அவர்களே
    முஸ்லிம் அரசியல் வாதிகளும் மக்களும் தாம் சார்ந்த சமூகத்தைப் பற்றி சிந்திப்பதில் தவறேதும் இல்லை,அதுபோலவே எம் சமூகமும் சிந்திக்க வேண்டும் 35 வருட போரில் சகலத்தையும் இழந்தபோதும் நம்பிக்கை ஒன்று இருந்தது ஆனால் இப்போது என்ன நம்பிக்கையில் எதிர்ப்பு அரசியலை செய்கிறீர்கள்.

    இன்று இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட காரணமாய் இருந்தவர்கள் தமிழ் மக்களே அவர்களுக்கு என்ன கைம்மாறு செய்துள்ளீர்கள் வழக்கம் போலவே தெருவில் நின்று கோசங்களை எழுப்புவதென்றால் கூட்டமைப்பினர் ஒதுங்கிக்கொள்ளுங்கள்....கோசம் போடுவதற்கும் ,மற்ற சமூகங்கள் எம்மை மிதித்து முன்னேறுவதற்கும் தமிழர்கள் வாக்களிக்கவில்லை.என்பதை இனியாவது புரிந்துகொள்ளுங்கள்

    ReplyDelete
  3. அன்று புலிகள் தமிழர்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் அடக்கியாண்ட காலத்தில், புலிகள் முஸ்லீம் மக்களை இரு மணிநேரத்தில் வடக்கிலிருந்து வெளியேற்றிய வரலாற்றை சகலரும் அறிவோம்.

    அன்று, தமிழர்களில் கணிசமானவர்கள் புலிகளின் சகல (இனச்சுத்திகரிப்பு உட்பட) நடவடிக்கைகளுக்கும் ஆதரவாக இருந்தபோதிலும் நாங்கள் 'புலிகள் வெளியேற்றினார்கள்' என்றுதான் கூறினோம். புலிகளும் தமிழர்களாக இருந்த போதிலும் 'வடக்குத் தமிழர்கள் வெளியேற்றினார்கள்' என்று இன்றுவரையில் கூறியதில்லை.

    ஏனெனில் புலிகள் வேறு தமிழர்கள் வேறு என்பதை குறைந்தபட்சம் கொள்கையளவிலாவது நாங்கள் புரிந்து வைத்திருந்து செயல்பட்டோம்.

    அவ்வாறுதான் இன்று முஸ்லீம் காங்கிரஸ் வகையறா கட்சிகளின் நடவடிக்கைகளை வைத்து முஸ்லீம்களின் ஒட்டு மொத்த போக்கையும் நீங்களாக வரையறுத்துவிடாதீர்கள்.

    அரசியல் பதவி சலுகைகளுக்காக சோரம்போவதை இன்று முழு அளவில் செய்து கொண்டிருக்கும் மு.கா. வகையறா கட்சிகளின் அரசியல்வாதிகளை இப்போதுதான் எங்கள் சமூகம் புரிந்துகொண்டு அம்பலப்படுத்திக்கொண்டு வருகின்றது.

    இதற்கு அண்மைய ஜனாதிபதித் தேர்தலின்போது கட்சிகளின் நிலைப்பாடுகளை கிஞ்சித்தும் கணக்கிலெடுக்காமல் எங்கள் சமூகம் சுயமாக முடிவெடுத்த விடயம் ஒன்றே போதும்.

    தமிழர் சமூகம் போல எங்கள் சமூகம் முழுமையாக அரசியல் மயமாக்கப்பட்ட சமூகமல்ல. மாற்றங்கள் மெதுவாக ஆனால் உறுதியாக நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

    உங்களது டக்ளஸ் தேவானந்தாக்களை நீங்கள் தூக்கி எறிந்ததைப்போல நாங்களும் 'எங்களுடைய டக்ளஸ் தேவானந்தாக்களை' தூக்கியெறியும் காலம் அதிக தூரத்தில் இல்லை.

    அதுவரையில் சுயநல அரசியல்வாதிகளின் போக்குகளை எங்கள் சமூகத்துக்குரிய சோற்றுப்பதமாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

    ReplyDelete

Powered by Blogger.