Header Ads



லேக்ஹவுஸ் ஈட்டும் வருமானம்

-எம்.ஐ. நிஷாம்தீன்-

லேக்ஹவுஸ் நிறுவனம் 2015ஆம் ஆண்டில் 4000 மில்லியன் ரூபா இலக்கை நோக்கி பயணிப்பதாகவும் கடந்த ஆண்டில் வரிக்கு முன் இலாபமாக 50மில்லியன் பெறப்பட்டதாகவும் நிறுவனத்தின் தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான பந்துல பத்மகுமார தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டின் புதுவருட தினத்தை சிறப்பிக்கும் முகமாக லேக்ஹவுஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த புதுவருட ஒன்றுகூடல் நிகழ்வு நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றிய போதே லேக்ஹவுஸ் நிறுவன தலைவர் பந்துல பத்மகுமார இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

எமது நிறுவனம் இவ்வாண்டும் பாடசாலை புத்தகங்களை அச்சிடுவதற்கான கேள்விப்பத்திரத்துக்கு விண்ணப்பித்துள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் இலாப விகிதாசாரம் அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எனினும் எமது நிறுவனத்தில் உள்ள சிலர் எமது நிறுவனத்தை காட்டிக் கொடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவது வேதனைக்குரியது. நிறுவனத்தை காட்டிக் கொடுப்பதை விட்டுவிட்டு நிறுவனத்தை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவதற்கு சகலரும் உதவி செய்ய வேண்டும்.

கடந்த வருடம் எமது நிறுவனத்தின் 64வீதமான வருமானம் விளம்பரங்கள் மூலம் ஈட்டப்பட்டுள்ளன. அவ்வாறே 18வீதம் பத்திரிகை விற்பனைகள் மூலமும், 14 வீதம் வர்த்தக அச்சிடல் பிரிவின் ஊடாகவும் ஈட்டப்பட்டன.

நிறுவனத்துக்கு கிடைக்கப் பெற்ற மொத்த வருமானத்தில் 40 வீதம் ஊழியர்களின் சம்பளக் கொடுப்பனவு மற்றும் ஊக்குவிப்பு கொடுப்பனவுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

அவ்வாறே, வருட ஆரம்பத்தின் முதல் நாளில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைவதோடு இன்றைய தினம் அனைவருக்கும் 3000 ரூபா வெகுமதி வழங்கப்படுகிறது. அவ்வாறே, இதுவரை காலமும் விசேட கொடுப்பனவாக வழங்கப்பட்டு வந்த 3200ரூபா இம்மாதம் முதல் 5000 ரூபாவாக வழங்கப்பட உள்ளது. அவ்வாறே வருடாந்த பொழுதுபோக்கு கொடுப்பனவு 150 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 1000 ரூபா வழங்கப்படும்.

இதுமாத்திரமின்றி கடந்த வருடம் எமது நிறுவனத்துக்கு புதிய அச்சிடும் இயந்திரத்துக்கு புதிய தொகுதியொன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அந்த இயந்திரத் தொகுதியை கொள்வனவு செய்ய வேண்டாம் என்று பல பிரிவுகளில் இருந்தும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டன. எனினும் அந்தத் தடைகளை மீறி மெக்டொம் இயந்திரத்தை கொள்வனவு செய்து அச்சுப்பிரதி மெருகூட்டப்பட்டுள்ளது. புதிய அச்சு இயந்திரத்திற்காக 78 மில்லியன் ரூபாவை முதலீடு செய்ததுடன் 46 மில்லியன் ரூபா செலவு செய்து புதிய தொகுதி பொருத்தப்பட்டுள்ளது.

கடந்தாண்டில் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனங்களான கண்டி, அநுராதபுரம், மாத்தறை, யாழ்ப்பாணம் ஆகிய நிறுவனங்கள் எமது வருமானத்தில் பாரிய பங்களிப்பை வழங்கின.

மேலும் கதிர்காமத்தில் 12அறைகளைக் கொண்ட புதிய தங்குமிட கட்டிடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன் அதன் 75வீதமான பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. இதற்காக 20மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக தினமின சிட்டி எப்.எம். ஊடாகவும் இலாபம் கிடைத்துள்ளதுடன் அநுராதபுர கிளையும் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது என்றார்.

No comments

Powered by Blogger.