Header Ads



தேர்தலின் பின்னரான சில வழிகாட்டல்கள்

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர்  முஸ்லிம் சமூகத்திற்கு அறிவுறுத்தல்களை நாம் முன்வைத்தது போலவே நடந்து முடிந்துள்ள தோர்தலின் பின்னரான முஸ்லிம்களது நடவடிக்கைகள் தொடர்பிலும் பின்வரும் வழிகாட்டல்களை தர விரும்புகிறோம்:-

1. நடந்து முடிந்த தேர்தலில் சிறுபான்மையினரது குறிப்பாக முஸ்லிம்களது  வாக்குப்பலம் பெரும் செல்வாக்குச் செலுத்தியிருப்பது யாவரும் அறிந்த உண்மையாகும். இதனை அரசியல் ஆய்வாளர்கள் கூட ஏற்றுக்கொள்கிறார்கள்.ஆனால், இலங்கை வாழ் முஸ்லிம்கள் மிகவும் பொறுப்புணர்வோடும் நிதானமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.47 சத வீதமானவர்கள் மஹிந்தவுக்கே வாக்களித்திருக்கிறார்கள் என்பதை நாம் மறந்து விடலாகாது. மேலும்,பெரும்பான்மை இனத்தவர்களது ஆத்திரத்தையும் ஆவேசத்தையும் தூண்டும் வகையிலான வாசகங்களையோ செயற்பாடுகளையோ முஸ்லிம்கள் முற்றாக தவிர்க்க வேண்டும். இது வீராப்புப் பேசும் நேரம் அல்ல.தோல்வி கண்டவர்களது உணர்வுகளையும் மதித்து நாம் செயல்பட வேண்டும். வெற்றியானது அகம்பாவத்தையும் அத்துமீறும் உணர்வையும் தரலாகாது. நபி(ஸல்) அவர்கள் மக்காவை வெற்றிகொண்ட போது மிகவும் பணிவாகவும் கண்ணியமாகவுமே நடந்து கொண்டமையை நாம் நினைவிற் கொள்ள வேண்டும்.

2. தேர்தலுக்கு முன்னர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அரசியல் சார் விடயங்கள் பற்றிய அதிகமான வாதப்பிரதிவாதங்களிலும் விமர்சனங்களிலும் ஈடுபட்டு வந்தார்கள். அன்றாடம் இடம்பெற வேண்டிய பல நிகழ்ச்சிகள் கூட பிற்போடப்பட்டன. அல்லது மந்தகதியில் தான் இடம்பெற்றன. ஆனால், தற்போது ஆட்சி மாற்றம் இடம்பெற்றிருக்கிறது. புதிய ஆட்சியாளர்கள் தமது பொறுப்புக்களைச் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. எனவே,சென்ற ஆட்சியாளர்களைப் பற்றியே இன்னும் பேசி காலத்தைக் கழிக்காமல் முஸ்லிம் சமூகத்தையும் நாட்டையும் காட்டியெழுப்பும் பாரிய பணியில் முஸ்லிம்கள் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் இஸ்லாமிய விசுவாசக் கோட்பாட்டை, கல்வித் துறையை, பண்பாட்டு விழுமியங்களை பலமான அடிப்படைகளின் மீது கட்டியெழுப்பும் தேவை இருக்கிறது. இதற்காக யாவரும் பேதங்களை மறந்து செயல்பட வேண்டும்.      

3. பெரும்பான்மையினருக்கு மத்தியில் சில சக்திகளால் இன,மத உணர்வுகளைத் தூண்டி விடுவதற்கான முயற்சிகள் தேர்தலுக்கு முன்னர் கணிசமான அளவு மேற்கொள்ளப்பட்டமையை நாம் மறக்க முடியாது. எனவே,தூண்டப்பட்டுள்ள இந்த இன உணர்வு சம்பந்தமாக முஸ்லிம்கள் தொடர்ந்தும் விழிப்போடு இருப்பது அவசியமாகும். அவ்வுணர்வை இல்லாமலாக்குவதற்கான முயற்சிகளில் நாம் கூடிய கவனமெடுக்க வேண்டும்.குறிப்பாக முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகாணம் போன்ற பகுதிகளில் வாழுபவர்கள் வெற்றிக் களிப்பைக் கொண்டாடும் போது நாட்டின் பிற பகுதிகளில் சிங்கள சகோதரர்களுடன் இரண்டறக் கலந்து வாழும் முஸ்லிம் சகோதரர்களுக்கு அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி நன்கு சிந்திக்க வேண்டும். இந்நாட்டு முஸ்லிம்கள் தூர நோக்கோடு நடந்து கொண்டால் தான் நாட்டில் ஐக்கியப்பட்டு வாழ முடியும். இஸ்லாமிய, பௌத்த, ஹிந்து, கிறிஸ்தவ மதங்களைப் பின்பற்றுவோர் சகோதரத்துவ உணர்வோடு, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல் வாழ்ந்தால் சுபீட்சம் மிக்க தேசத்தைக் கட்டியெழுப்ப முடியும்.இதற்காக அனைவரும் கைகோர்த்துக் கொள்வது அவசியமாகும்.

4. இலங்கையின் எந்தவொரு சமூகமும் தனித்து வாழ முடியாது. அவ்வாறு வாழுவது சாத்தியமுமல்ல. ஒவ்வொரு சமூகமும் பிறசமூகங்களில் தங்கிவாழுவதால் இணக்கப்பாட்டை இலக்காகக் கொண்ட செயல்திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதே இன்றுள்ள தேர்தலுக்குப் பின்னரான உடனடித்தேவையாகும். அந்தவகையில் சமூகங்களுக்கிடையிலான நல்லுறவைக் கட்டியெழுப்பப  தேசிய சூராசபை, உலமா சபை போன்ற நிறுவனங்கள் ஏற்பாடுசெய்யும் நிகழ்ச்சித் திட்டங்களில் முஸ்லிம்கள் சம்பந்தப்பட வேண்டும்.தேர்தலில் வெற்றி கிட்டியதால் மாத்திரம் நாட்டினதும் முஸ்லிம்களதும் அபிலாசைகளும் பூர்த்தியாகிவிட்டதாகக் கருதிவிடமுடியாது.இதற்குப் பிறகு தான் உண்மையான திட்டமிடல் ஆரம்பிக்கப்பட வேண்டும்.கிடைத்த வெற்றி அர்த்தமுள்ளதாக அமைய வேண்டுமாயின் சமூகத்திலுள்ள முஸ்லிம் அரசியல் தலைவார்களிடம் மாத்திரம் சமூக விவகாரங்களை நாம் ஒப்படைத்து விட்டு இருந்து விடாமல் சமுதாயத்தின் முக்கியஸ்தர்கள் ஒன்று கூடி கலந்தாலோசித்து முடிவுகளை எடுப்பது காலத்தின் தேவையாகும். 

1 comment:

  1. முஸ்லிம் சமூகம் ஒட்டு மொத்தமாக ஒரு பக்கம் சார்ந்திருக்காமல் முன்னாள் ஜனாதிபதியிடனும் எதோ ஒரு வகையில் தொடர்புகளை பேணி வர வேண்டும் .

    ReplyDelete

Powered by Blogger.