Header Ads



மஹிந்த ராஜபக்ச திட்டமிட்ட இராணுவப் புரட்சியை விசாரிக்க, குற்றப்புலனாய்வுத் துறைக்கு உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கடந்த 9ம் திகதியன்று ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளிவந்த போது இராணுவப் புரட்சி ஒன்றுக்கு முயற்சித்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து, விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் இந்த உத்தரவை குற்றப்புலனாய்வுத் துறையினருக்கு விடுத்துள்ளார்.

வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவின் முறைப்பாட்டுக்கு இணங்கவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் தோல்வியடையப் போகும் நிலையில் மஹிந்த ராஜபக்ச, இராணுவப் புரட்சி ஒன்றுக்கு முயற்சித்ததாக மங்கள சமரவீர குற்றம் சுமத்தியிருந்தார்.

இதனையடுத்து குற்றப்புலனாய்வு துறையினர் சட்டமா அதிபரிடம் ஆலோசனையை கோரியமைக்கு அமையவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மங்கள சமரவீரவின் முறைப்பாட்டின்படி இது தொடர்பாக ஆராய்வதற்காக மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மற்றும் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் ஆகியோரை சந்தித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தவும் அதற்காக இராணுவத்தின் உதவியை பெறவும் இதன்போது முயற்சிக்கப்பட்டது.

எனினும் சட்டமா அதிபர் மற்றும் இராணுவம், பொலிஸ் தலைமை அதிகாரிகள் இதற்கு இணங்கவில்லை என்றும் மங்கள சமரவீர முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மறுத்துள்ளார்.

மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்கி தாம் பதவியை விட்டுக் கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.