10 அல்ல, 20 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படுகிறது..!
பொதுமக்கள் மீது வரிசுமத்தப்படாத வகையில் அநேக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க இடைக்கால வரவு -செலவுத் திட்டத்திற்கூடாக நடவடிக்கை எடுக்கப்படுமென நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.புதிய அரசாங்கத்தினால் எதிர்வரும் 29 ஆம் திகதி இடைக்கால வரவு - செலவு திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் படவுள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் இதன் மூலம், எவ்வாறான நிவாரணங்களை பெற்றுக் கொள்வரென கேள்வி எழுப்பியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதி மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முழுமையான பணிப்புரைக்கமையவே இடைக்கால வரவு - செலவு திட்டத்தில் அத்தியாவசிய உணவுப் பொட்களின் விலைகளை குறைக்கவிருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், அதற்காக மக்கள் மீது வரிகள் சுமத்த மாட்டோமெனவும் தெரிவித்தார்.
புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டு 20 நாட்களுக்குள் இடைக்கால வரவு - செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதென்பது எமது அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சவாலாகும். ஜனாதிபதி தேர்தலின் போது நாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியது எமது பொறுப்பாகுமெனவும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை, அரசாங்க துறையினரின் சம்பள அதிகரிப்பை போன்றே தனியார் துறையினரின் சம்பளத்தையும் அதிகரிப்பது பற்றிய யோசனைகளும் இடைக்கால வரவு - செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறினார்.
மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நிதியை வரி வசூரிப்பதன் மூலம் பெற்றுக்கொள்வதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டில் புதிய அரசாங்கம் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த அரசாங்கம் முன்னெடுத்த வீண் விரயம், ஊழல் மற்றும் மோசடியை முற்றாக நீக்குவதன் மூலம் கிடைக்கும் இலாபமே நிவாரணம் வழங்க போதுமானதெனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இடைக்கால வரவு - செலவுத் திட்டத்திற்கு முன்னர் நாட்டின் பொருளாதாரத்தின் பங்குதாரர்களான பல்வேறு வர்த்தக சங்கங்களான வாகன இறக்குமதியாளர் சங்கம், பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம், வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதிகள் ஆகியோரை நானும் திறைசேரியின் முக்கியஸ்தர்களும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதாக அவர் கூறினார்.
அரசாங்கம் அண்மையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகளை குறைத்திருந்தது. மக்களின் வாழ்க்கைச் செலவை மேலும் குறைக்கும் வகையில் பயணிகள் பஸ் மற்றும் பொருட்களை கொண்டு வரும் போக்குவரத்திற்கான கட்டணங்களில் மாற்றங்கள் செய்யப்படுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
மின்சார மற்றும் நீர் கட்டணங்களை குறைப்பதே அரசாங்கத்தின் பிரதான இலக்கு. அந்த வகையில் இக்கட்டணங்களை மறுசீரமைப்பதில் அரசாங்கம் ஒருபோதும் பின்வாங்காது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
எமது இந்த புதிய அரசாங்கம் ஊழல் மோசடிகளை குறைக்காது, மாறாக முற்றாக ஒழிக்குமெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஆரம்பத்தில் பத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையே குறைப்பதாக தீர்மானித்த போதிலும் தற்போது சுமார் 20 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைப்பது தொடர்பில் நிதியமைச்சு ஆராய்ந்து வருகிறது. எனினும் அந்தப் பொருட்களின் பெயர் விவரங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.
பெற்றோல், டீசல் விலைக் குறைப்புடன் முச்சக்கரவண்டி கட்டணங்களை குறைப்பது குறித்தும் முச்சக்கரவண்டி ஓட்டுனர் சங்கங்கள் ஆராய்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Post a Comment