சரத் என் சில்வா அவர்களுடன் NFGG விஷேட சந்திப்பு
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அவர்களுக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் (NFGG) இடையிலான விஷேட சந்திப்பு ஒன்று நேற்று 16.12.2014 கொழும்பில் இடம்பெற்றது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் MM.அப்துர் ரஹ்மான் மற்றும் அதன் உதவித் தவிசாளர் MJM.மன்சூர் ஆகியோர் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அவர்களைச் சந்தித்து விரிவாகக் கலந்துரையாடினர்.
19வது திருத்தச்சட்டம் உள்ளிட்ட ஆட்சிமுறை மாற்றத்திற்கான பல்வேறு முன்மொழிவுகளை அமுல்படுத்தும்போது சிறுபான்மை மக்களின் நலன்களை பாதுகாத்தல் தொடர்பில் இதன்போது விரிவாகக் பேசப்பட்டது.
குறிப்பாக தொகுதிவாரி மற்றும் விகிதாசார தேர்தல் முறைகளை ஒருங்கிணைத்ததாக புதிய தேர்தல் முறைமையை அமுல்படுத்தும்போது முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகங்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினைப் பாதுகாத்தல் தொடர்பில் தமக்கிருக்கும் கருசனையை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதிநிதிகள் சரத் என் சில்வா அவர்களிடம் பகிர்ந்துகொண்டனர். மேலும் சிறுபான்மை மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வீழ்ச்சி அடையாமல் இருப்பதனை உறுதிசெய்வதற்கான தமது யோசனையை முன்னாள் பிரதம நீதியரசரிடம் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் முன்வைத்தார்.
அவைகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய சிறந்த யோசனைகளே என கருத்துத் தெரிவித்த சரத் என் சில்வா அவர்கள், அவற்றை பொது எதிரணியிடம் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.
அத்தோடு நல்லாட்சியினை வலுவூட்டுவதற்கான மேலும் பல யோசனைகளையும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதிநிதிகள் அங்கு முன்வைத்தனர்.
இவை அனைத்தையும் உள்ளடக்கிய தமது முன்மொழிவுகளை பொது வேட்பாளர் மைத்திரிப்பால சிறிசேன அவர்களிடமும் ஏனைய தரப்பினரிடமும் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மேற்கொண்டு வருகின்றது.
புதிய ஆட்சிமுறை மாற்றத்திற்கான யாப்பு திருத்த முன்னெடுப்புக்களில் மிக முக்கியமான பங்கினை ஆற்றிவரும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அவர்கள், பொது எதிரணியின் பங்காளிக் கட்சியான நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இது போன்ற ஆக்கபூர்வமான யோசனைகளை முன்வைப்பதானது மிகவும் சந்தோசம் அளிக்கிறது எனவும் தெரிவித்தார்.

Post a Comment