உண்மையான முஸ்லிம்கள் அனைவரும் இந்த படுகொலையை கண்டிக்கின்றனர் - ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்
பாகிஸ்தான் பெஷாவர் நகர் பாடசாலை மாணவர்கள் மீதான தீவிரவாதிகளின் தாக்குதலை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கின்றது.
பாடசாலை மாணவர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 140 க்கும் அதிகமானவர்கள் மரணித்திருக்கின்றார்கள். இதில் 80 க்கும் அதிகமானவர்கள் ஒன்றுமறியாத அப்பாவி சிறுவர்கள் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
இஸ்லாத்தின் பெயரால் தீவிரவாதிகள் நடத்தும் இப்படியான தாக்குதல்களுக்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை. இஸ்லாம் என்பது அன்பையும், அகிம்சையையும் போதிக்கக் கூடிய மார்க்கமாகும். எதிரிகளுக்கு எதிராக ஒரு அரசு மேற்கொள்ள வேண்டிய எதிர் நடவடிக்கைகளையே ஜிஹாத் என்று இஸ்லாம் கூறுகின்றது. இப்படியான தெளிவான கோட்பாட்டை தவறாக புரிந்து கொண்டு இவர்கள் நடத்தும் இது போன்ற தாக்குதல்களை ஒரு போதும் இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை என்பதை தெளிவாக குறிப்பிட விரும்புகின்றோம்.
அத்துடன் எதுவும் அறியாத அப்பாவி சிறுவர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை அணைத்துத் தரப்பினரும் கண்டிக்க வேண்டும் என்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் வேண்டிக் கொள்கின்றது.
உண்மையான முஸ்லிம்கள் அனைவரும் இந்த படுகொலையை வன்மையாக கண்டிக்கின்றனர். இதை செய்தவர்கள் ஒருக்காலும் உண்மையான முஸ்லிம்களாக இருக்க முடியாது. சக மனிதனிடத்தில் இரக்கம் காட்டாத எவரும் முஸ்லிமாக மட்டுமின்றி மனிதராக இருக்க கூட தகுதியற்றவர்கள் ஆவர். இஸ்லாத்தின் அடிப்படைக்கும் மனிதத்தன்மைக்கும் எதிரான தீவிரவாதிகளின் இத்தகைய காட்டுமிராண்டித்தனத்தை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.
ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்' (அல்குர்ஆன் 05:32)
இப்படிக்கு,
R. அப்துர் ராசிக் B.com
பொதுச் செயலாளர் - SLTJ
.jpg)
Post a Comment