அரசியலுக்கு சென்று விசர் கூத்தாடுவதாக, அவரது குடும்பத்தினர் அப்போது மகிந்தவை சாடினர் - ராஜித்த
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை அனுப்பிய குமரன் பத்மநாதனை தம்முடன் வைத்திருக்கும் ராஜபக்ஷவினர் தம்மை தேசப்பற்றாளர்கள் எனக் கூறிக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவராக கருணா அம்மான் இருந்து வருகிறார். இப்படியானவர்களை வைத்திருப்போரே தேசப்பற்று பற்றி பேசுகின்றனர்.
கோத்தபாய ராஜபக்ஷவுக்கு தெரிந்த தேசப்பற்று என்று ஒன்றுள்ளதா?. அவர் அமெரிக்காவில் இருந்து வந்தாரே அன்றி, எப்போது அவர் மகிந்த ராஜபக்ஷவின் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டார்.
நானும் மங்கள சமரவீரவுமே மகிந்த ராஜபக்ஷவின் அரசியல் செயற்பாடுகளுக்கு உதவினோம். ஒவ்வொரு காலங்களில் நாங்கள் அவருக்கு அரசியல் ரீதியான உதவிகளை வழங்கியுள்ளோம்.
மகிந்த ராஜபக்ஷ, பாத யாத்திரை செல்லும் போது கோத்தபாய, பசில் போன்றவர்கள் இருந்தனரா?. நாமல் உட்பட அவரது குடும்பத்தில் எவரும் அப்போது மகிந்த ராஜபக்ஷவுடன் இருக்கவில்லை.
அரசியலுக்கு சென்று விசர் கூத்தாடுவதாக அவரது குடும்பத்தினர் அப்போது மகிந்தவை சாடினர். நாங்கள் அப்படியான பேச்சுகளை பேசுவதில்லை.
பாதயாத்திரை செல்லும் போது, மனித சங்கிலி போராட்டம் நடத்தும் போது மகிந்தவுடன் கோத்தபாய இருந்தாரா?.
மகிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்ற பின்னரே கோத்தபாய ராஜபக்ஷ போன்றவர்கள் அமெரிக்காவில் இருந்து கணக்கு பார்த்து இலங்கை வந்தனர்.
கோத்தபாயவுக்கு என்ன அரசியல் தெரியும். அவரது ஒரு அமைச்சின் செயலாளர். அவரே அரச சேவையை இந்த கீழ் நிலைமைக்கு கொண்டு சென்றார்.
அவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்றால், அவர் அதற்கு ஏதுவான விடயங்களை மேற்கொள்ள வேண்டும்.பாதுகாப்பு அமைச்சு பற்றி அவர் எதனையும் பேசலாம். ஆனால் அரசியல் மேடைகளில் ஏற முடியாது.
கோத்தபாய கொலன்னாவவிற்கு சென்று ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையாளர்களுடனும் அரசியல் செய்தார். அவர்களின் வீடுகளுக்கு சென்று உணவும் உட்கொண்டுள்ளார். அவர் அதனை என்னிடமே கூறினார்.
குற்றச்சாட்டு எழுந்த போது, போதைப் பொருள் விற்பனையாளர்கள் என்பதை அறியாது தான் சென்று விட்டதாக என்னிடம் கூறினார். ஏன் அப்படி தெரியாமல் செல்ல வேண்டும். அவருக்கு அரசியல் தெரியாது என்பதே இதற்கு காரணம்.
இப்படி அரசியல் எது என்பதை அறியாத கோத்தபாய எப்படி தேசத்துரோகி தேசப்பற்றாளர் என்று வரையறை செய்ய முடியும். தேசப்பற்றாளர் என்றால் யார் என்று அவரிடம் விளக்கம் கேளுங்கள். அப்பொழுது அறிந்து கொள்ள முடியும் என ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

Post a Comment