Header Ads



கல்முனை மாநகர பசாரினை துண்டாட சதி - கல்முனை இளைஞர் பேரவை அறிக்கை

இலங்கை வாழ் முஸ்லிம்களின் முகவெற்றிலையான கல்முனை மாநகர பசார் பகுதியினை இரண்டாக துண்டாடுவதற்கு திரைமறைவில் முயற்சிகள் நடைபெற்றுவருவதாக அறிகின்றோம். இதனை தனது அதிரடி நடவடிக்கையினால் தடுத்து நிறுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையினை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என கல்முனை இளைஞர்; பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது சம்பந்தமாக பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

முஸ்லிம்களின் வர்த்தக கேந்திர நிலையமான கல்முனை மாநகர பசாரினை துண்டாடுவதற்காக சதி முயற்சிகள் நடைபெற்று வருவதுடன் இவ்விடயம் ஜனாதிபதி செயலகம் வரை சென்றுள்ளதாக அறிகின்றோம். இம்மாநகரத்தினை துண்டாடும் முயற்சிக்கு பின்நிற்கும் எட்டப்பர்களை பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் சமூகத்தின் முன் வெளிக்காட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயற்பட்டுக் கொண்டிருக்கு தருவாயில், அவரை அரசசார்வு நிலைப்பாட்டுக்கு கொண்டுவருவதற்காக கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியிலும் உள்ளவர்கள் செயற்பட்டு வருகின்றனர்.

இதற்கமைவாக கல்முனை மாநகரத்தினை துண்டாட வைப்பதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினரை அரசசார்வு நிலைப்பாட்டுக்குள் கொண்டுவரலாம் என சதித்திட்டம் தீட்டி அரசதரப்புக்கு எட்டப்பர் கூட்டம் ஆலோசனை வழங்கியுள்ளனர். இதனை அரசாங்கம் செய்வதற்கு முற்பட்டபோது இதைத் தடுத்து நிறுத்துவதற்காகவே பாராளுமன்ற உறுப்பினர் அலரிமாளிகைக்கு சென்றிருந்தாரே தவிர கட்சியினையும் சமூகத்தினையும் காட்டிக்குக் கொடுக்கும் துரோகச் செயலுக்கல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

கல்முனை மாநகரத்தினை பாதுகாப்பதில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதை நாம் அறிந்துள்ளோம். அண்மையில் கல்முனை மாநகரத்தை துண்டு துண்டாக கூறுபோடுவதற்காக பாராளுமன்றத்தில் பொதுநிர்வாக அமைச்சரினால் நடத்தப்பட்ட கூட்டத்தின்போது தலைவருடன் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் பலத்த எதிர்ப்பினை காட்டியதுடன் அதனை தடுத்து நிறுத்தியதை இந்த நாடே அறிந்தாகும்.

அன்று ஹரீஸ் எம்.பி இந்த முயற்சியை எடுக்காது இருந்திருந்தால் அப்போதே கல்முனை பிரிக்கப்பட்டிருக்கும் என்பதை சுட்டிகாட்ட விரும்புகின்றோம்.  

சமூகப் போராட்டங்களின் போது தனது உயிரை துச்சமாக மதித்து களத்தில் நின்று செயற்பட்டு வரும் ஹரீஸ் எம்.பிக்கு இன்றைய காலகட்டத்தில் சுயநல தேவைகளை அடைந்து கொள்வதற்கான உள்நோக்கம் அவரிடம் இல்லை.

மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ள ஹரீஸ் எம்.பியின் மக்கள் செல்வாக்கை இல்லாமல் செய்து தங்களது பதவி மோகத்தை அடைந்து கொள்ளலாம் என்ற நப்பாசையில் இன்று அரசியல் பச்சோந்திகள் சதி முயற்சிகளில் இறங்கி செயற்படுவதைக் காண்கின்றோம்.

சதிகாரர்களுக்கெல்லாம் சதிகாரனாக எம்மைப் படைத்த இறைவன் இருக்கின்றான். முஸ்லிம்களின் தலைநகரம் கல்முனை மாநகரத்தை பாதுகாப்பதற்காக களத்தில் நின்று போராடுகின்ற அவரின் தூய்மையான எண்ணத்தை இறைவன் அறிவான்.

இணையத் தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் அவருக்கு சேறு பூசுவதன் மூலம் மக்கள் செல்வாக்கையும் அவரின் சுய கௌரவத்தையும் இல்லாமல் செய்ய முடியாது. உண்மையாளர்களுடனே இறைவன் இருக்கின்றான்.

எனவே சேறு பூசும் அரசியல் பச்சோந்திகளின் சதி முயற்சிகளை நீங்கள் கணக்கில் எடுக்காமல் கல்முனை மாநகரத்தையும் முஸ்லிம் சமூகத்தின் விடிவிற்கும் களத்தில் நின்று போராடுங்கள். இறைவன் உங்களுக்கு வெற்றியைத் தருவான் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(எஸ்.அஷ்ரப்கான்)

No comments

Powered by Blogger.