Header Ads



தோல்வியடைந்ததன் பின்னரும், பதவியிலிருந்தால் ராஜபக்ஸவை விரட்டியடிப்போம் - அநுரகுமார திசாநாயக்க

கட்சித்தாவல் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கந்தளாயில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தார்.

அவர் குறிப்பிட்டதாவது;

எது எவ்வாறாக அமைந்தாலும் அடுத்த தடவை தனக்கு பாராளுமன்றத்திற்கு வருவதற்கான சந்தர்ப்பம் கிடையாது என எனது பாராளுமன்ற நண்பர் ஒருவர் தெரிவித்தார். கொண்டுவரப்படவுள்ள திருத்தம் குறித்து எம்மாலும் உறுதிப்பட கூற முடியாது என நானும் கூறினேன். என்ன செய்யலாம்? பெரிய தொகை ஒன்றை வாங்கிக்கொண்டு போய்விடவா எனக் கேட்டார். நல்ல தொகையைப் பெற்றுக்கொண்டு செல்லுமாறு கூறினேன். வேறு எதை நான் கூறுவது? இது தான் இன்றைய உண்மை நிலை. இவ்வாறானதொரு அரசியல் எமக்குத் தேவையா?

மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்கும் நோக்கில் செயற்படுவதாகவும் இதன்போது அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

தோல்வியடைந்தால் என்ன செய்யலாம் என தற்போது திட்டமிடுகின்றனர். இதுவரை காலமும் தோல்வி குறித்துக் கூறவேயில்லை. எப்போதும் வெற்றி பெறுவதாகவே கூறினார்கள். ஆனால், தற்போது தோல்வியடைந்தால் இரண்டு வருடம் இருக்கப்போவதாகக் கூறுகின்றனர். நாங்கள் உறுதியளிக்கின்றோம். எவ்விதமான அச்சமும் இன்றி ராஜபக்ஸவிற்கு எதிராக வாக்களியுங்கள். தேர்தலில் தோல்வியடைந்ததன் பின்னர் 24 மணித்தியாலங்களுக்கு மேல் பதவியில் இருந்தால் நாட்டு மக்களுடன் ஜனநாயக சக்தியாக ஒன்றிணைந்து ராஜபக்ஸவை விரட்டியடிப்போம் என உறுதியளிக்கின்றோம், என்றார்.

No comments

Powered by Blogger.