முஸ்லிம்களின் தேர்தல் முடிவு, முஸ்லிம் அரசியலைப் பாதுகாக்குமா...?
-நவாஸ் சௌபி-
முதலில் இங்கு குறிப்பிடும் கருத்துக்களை நான் மஹிந்த மீது கொண்டுள்ள தனிப்பட்ட விருப்பத்தினாலோ அல்லது அவரது ஆட்சி தொடர வேண்டும் என்ற நாட்டத்தினாலோ எழுதவில்லை, மாறாக இன்றுள்ள முஸ்லிம் மக்களின் அரசியல் நிலைப்பாடு குறித்த மாற்றுக் கருத்துக்களையும் நாம் பேசாமல் இருக்க முடியாது என்ற அவசியத்தை இக்கட்டுரை பதிவு செய்கின்றது.
இன்றுள்ள அரசியல் நீரோட்டத்தில் முஸ்லிம் மக்கள் தாங்கள் இருந்த கட்சி என்ற படகிலிருந்து துள்ளிக் குதித்து மைத்திரியின் தேர்தல் வெள்ளத்தில் மிதப்பதாகத் தெரிகிறது. மைத்திரியின் பக்கம் இருப்பவர்களை சமூகத் தலைவர்களாகத் தூக்கி வைத்துச் சுமப்பதாகவும் மஹிந்தவின் பின்னால் நிற்பவர்களை சமூகத் துரோகிகளாக தூக்கி எறிந்து பேசுவதும் அறிவுக்கு எட்டாத அரசியல் மயப்படுத்தப்பட்ட சமூக வெளிப்பாட்டையே காட்டுகிறது.
முஸ்லிம் மக்கள் தங்களது ஆத்திரத்தை அரசியல் மயப்படுத்தி இருக்கும் வழிமுறை சற்று தூரநோக்கோடு பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகவே இருக்கிறது. எதிர்வருகின்ற 08 ஆம் திகதி எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிப்பது என்பதில் முஸ்லிம் சமூகம் என்ன நிலைப்பாட்டிலிருக்கிறதோ அந்த மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தை நாம் முன்வைக்கவில்லை. ஆனாலும் எந்த வேட்பாளர் ஆட்சிக்கு வந்தாலும் அது நமக்கான ஒரு ஜனாதிபதியை நாம் தேர்ந்தெடுத்துவிட்டோம் என்று நாம் மார்தட்டும் ஒரு முடிவாக அமையாது, ஏனெனில் பெரும்பான்மைச் சமூகத்திற்கான ஒரு ஜனாதிபதியாகவே வெற்றிபெறுகின்ற எந்த ஜனாதிபதியும் இருந்துவிடப் போகின்றார்.
எனவேதான் சிங்களப் பெரும் சமூகத்திற்கான ஒரு ஆட்சித் தலைமையை தெரிவு செய்கின்ற நமது வாக்களிப்பானது நமது அரசியல் அடையாளங்களை அழித்துவிட்டு ஏன் நடைபெறவேண்டும். நமக்கான கட்சி அரசியல் என்ற அடையாளத்தை இல்லாது ஒளித்து தேசிய அரசியலில் நாம் யாரை ஆட்சிக்கு அமர்த்தினாலும் அதில் நாம் அரசியல் இலாபம் பெற முடியாது என்பதை எமது மக்களின் ஆத்திரத்தின் முன் நிறுத்திப் பார்க்கிறோம்.
மஹிந்தவை எதிர்க்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த மாற்று அரசியல் சிந்தனைகளும் தங்கள் அறிவுக்குள் ஏறாமல் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமளிக்காத ஒரு அரசியல் நிலைப்பாட்டிலிருந்து கொண்டு எமது மக்கள் தங்களுக்கான அரசியல் சுயத்தை அழித்துவிடப் போகின்றார்களோ என்ற அபாயம் எங்களை உள்ளாற அச்சுறுத்துகிறது.
உரிமையோ, அபிவிருத்தியோ, எதுவுமில்லாமலோ எமக்கான ஒரு கட்சி அடையாளம் எங்களைவிட்டு விலகாது இருக்க வேண்டும். கட்சியைத் தொலைத்துவிட்டு நாம் எதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்பார்க்கப் போகிறோம் நமது அரசியல் தூரநோக்கு இவ்வளவுதானா?
இதனடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸின் நிதானத்தோடு குறிப்பாக கிழக்கு முஸ்லிம் சமூகமாவது இருக்க வேண்டும். இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிதானத்தோடு தமிழ் மக்கள் பெரும்பாலும் மைத்திரிக்கான பகிரங்க வெளிப்பாடுகள் எதுவுமில்லாது இருப்பதை எம்மால் அவதானிக்க கூடியதாக இருக்கிறது. அதுபோன்று வாக்களிப்பை மைத்திரிக்கு செய்யும் அபிப்பிராயத்தோடு முஸ்லிம் காங்கிரஸின் முடிவினை எதிர்பார்ப்பதுபோல் கட்சியை முதன்மைப்படுத்தி எமது மக்கள் இருந்திருக்க வேண்டும் என்பதும் மறுப்பதற்கானதல்ல.
மேலும் அம்பாறையில் சில முஸ்லிம் பிரதேசங்களில் மைத்திரியின் பக்கம் சில பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றது ஒரு கூட்டத்திற்கு ஆசாத் சாலியும் மைத்ரியின் சகோதரர் டட்லி சிறிசேனவும் வந்தனர், அடுத்த ஒரு கூட்டத்திற்கு தயாகமகே வந்து சென்றார், இன்னுமொரு கூட்டத்திற்கு றிசாத் பதியுத்தின் வந்து நின்றார், இடையில் மக்கள் சந்திப்பு என்று நல்லாட்சிக்கான றஹ்மான் முகம் காட்டிச் சென்றார்.
இப்படியாக இருந்தால் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் மைத்திரியின் வெற்றியின் பிறகு யாரிடம் போவது தயாவிடமா, ஆசாத் சாலியிடமா, றிசாத்திடமா? டட்லியிடமா? றஹ்மானிடமா? இதற்கு இத்தனை முகவர்கள் இருந்தால் எப்படி? ஐக்கிய தேசிய கட்சியின் அம்பாறை மாவட்ட பொறுப்பில் தயாகமகே இருக்கிறார் அவரை முன்னிறுத்தி இவை எல்லாம் நடந்தாலும் முஸ்லிம் சமூகத்திற்குள் இதற்கு கட்டுக்கோப்பான ஒரு அரசியல் வடிவம் இல்லாமலிருப்பதை தெளிவாக காண முடிகிறது. குறிப்பாக கல்முனைத் தொகுதியில் கூட முதன்மை பெற்ற ஒரு அரசியல் தலைமை இல்லாமல்தான் இன்று மைத்திரிக்கான பிரச்சாரங்களும் தேர்தல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. கொழும்பிலிருந்து ஆசாத் சாலியும் முஜிபுர் றஹ்மானும் வந்துதான் எமக்குப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற நிலையில்தான் நமது பிரதேச அரசியல் நிலை இத்தேர்தலில் மாறி இருக்கிறது. இதனைப் பார்க்கின்ற போது ஆத்திரம் மக்களின் கண்ணை மறைத்து ஒரு அரசியல் வடிவமில்லாமல் இந்த தேர்தலை நாம் முன்னெடுப்பதாகவே தெரிகிறது.
இதைப் பார்க்கின்ற போது மஹிந்த மீதான எதிர்ப்பைக் காட்டுவதற்காக மைத்திரியின் பக்கம் ஒழுங்குபடுத்தப்படாத ஒரு அரசியலை குறிப்பாக கிழக்கு முஸ்லிம்கள் முன்னெடுக்கின்றார்கள் என்று தெரிகிறது.
முஸ்லிம் காங்கிரஸின் தலைமையும் உயர்பீடம், உலமாக்கள், அரசியல் பீடம் என்று கதை பேசிப் பேசி இருந்ததே தவிர தங்களது நிலைப்பாட்டை மக்களுக்கு சரியான முறையில் முன்வைக்கும் ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவில்லை. குறைந்தபட்சம் பொதுவேட்பாளரை அறிவித்த தினத்திலிருந்தாவது அதனைச் செய்திருக்க வேண்டும். கட்சியைவிட்டு மக்கள் விலகிச் செல்லாதவாறு முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் மயப்படுத்தப்பட்ட பிரச்சாரங்களை செய்ய முற்படவில்லை.
கட்சி முடிவெடுப்பதற்கு முன்பாக மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள் என்ற செய்தி ஆழமாக மக்கள் மனங்களில் பதியும்வரை கட்சி அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமலே இருந்தவிட்டது. இந்த நிலை இன்று கட்சியே தேவை இல்லை என்று மக்கள் புறக்கணிக்கின்ற ஒரு புள்ளியில் வந்து நிற்குமோ என்ற அச்சத்தை தருகிறது.
முஸ்லிம் காங்கிரஸ் உருவாகுவதற்கு முன்பு முஸ்லிம்களின் அரசியல் இலங்கையின் பிரதான தேசிய அரசியல் கட்சிகளான சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி என்று இருந்த நிலை எதிர்காலத்தில் உருவாகிவிடுமோ என்ற அபாய ஒலியும் இதில் கேட்பதாகவே தெரிகிறது. எமது கட்சிகளும் ஏதோ ஒரு கட்சியைச் சாந்திருக்க வேண்டும் என்ற சிந்தனையில் அரசியல் செய்வதால்தான் மக்களும் அவ்வாறான சிந்தனைப் போக்குகளுக்கு மாற்றம் பெற்றிருக்கிறார்கள் என்று நோக்கத் தோன்றுகிறது.
இப்போது கூட மஹிந்தவா? மைத்திரியா? என்றுதான் முடிவெடுக்க முற்படுகிறோமே தவிர இரண்டுமில்லாமல் சமூக அடையாளத்தோடு ஒரு கட்சியாக இருக்க நாம் சிந்திக்க முற்படுகிறோமா? என்ற கேள்வி எழுகிறது. சமூக அரசியலுக்கான முகத்தை சரியான தருணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தூக்கிப் பிடிக்க தவறிவிட்டது இருந்தாலும் இப்போது அதன் தலைவர் எந்த முடிவினையும் பகிரங்கமாக அறிவிக்காமல் அரசோடு இருப்பதுபோல் இருந்து வருவதும் அரச ஊழியர்களுக்கு தங்களது மனச்சாட்சிப்படி வாக்களியுங்கள் என அறிவிப்பு விடுத்ததும் நடுநிலையான ஒரு முடிவினை கட்சி எடுக்கப் போகிறது என்பதை ஆதாரப்படுத்தி இருக்கிறது.
இன்றைய சூழ்நிலையில் இவ்வாறான ஒரு நிலைப்பாட்டினை முஸ்லிம் காங்கிரஸ் எடுப்பது எதிர்காலத்தில் முஸ்லிம் சமூக இருப்பை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. இருக்கின்ற காலத்தினுள் இதனைவிடவும் வேறு எந்த முடிவையும் ஒரு பக்கம் சார்ந்து எடுப்பதற்கான கால அவகாசம் இல்லை என்பதும் நன்றாகவே தெரிகிறது.
முஸ்லிம் காங்கிரஸின் நடுநிலையான இந்த நிலைப்பாட்டை முஸ்லிம் மக்கள் சரிகாண வேண்டிய அரசியல் நியாயங்களை தங்கள் சிந்தனைகளுக்குள் எடுத்துக்கொண்டு கட்சி அரசியலுக்கான பலத்தினை வழங்க வேண்டும்.
ஒரு இழப்பும் அழிவும் நடந்தபின் குரல் கொடுப்பதிலும் அதற்காக அரசை விமர்சிப்பதிலும் அர்த்தமில்லை அவ்வாறான அழிவுகளும் இழப்புகளும் எதிர்காலத்தில் ஏற்படாதவாறு தடுக்க வேண்டும் அதற்கான பிரயத்தனங்களை செய்வதை தீர்க்கதரிசனமான தலைமைத்துவ நகர்வாகும். அந்த இடத்தில்தான் இன்று ஹக்கீம் தனது நிதானத்திற்கான இருப்பை நிலை நிறுத்தி வைத்திருக்கிறார் என்ற அரசியல் நியாயம் சரிகாணப்பட வேண்டியதே.
இன்று எமது சமூகம் சிலரை தூக்கிச் சுமப்பதற்கு காரணம் அவர்கள் முஸ்லிம் சமூகத்திற்கான அழிவுகளும் இழப்புகளும் நடந்த பின் அதற்காக மஹிந்த அரசை விமர்சித்தும் மஹிந்த அரசுக்கு ஏசியும் தங்களது எதிர்ப்புகளை காட்டியதால் ஆகும். இது ஒரு பக்கமான சமூக அக்கறைதான் அதை நாம் மறுக்க வில்லை. ஆனாலும் இவர்கள் யாராவது ஒரு பிரச்சினையை அல்லது அழிவை இல்லாது செய்வதற்கு என்ன பொறிமுறையை வைத்திருக்கிறார்கள் என்ற கேள்வியைக் கேட்டால் எதுவுமில்லை என்றுதான் தெரிகிறது.
எதற்கெடுத்தாலும் மஹிந்தவை விமர்சித்தும் அவருக்கு ஏசியும் சிலர் இன்று முஸ்லிம் சமூகத்தின் காவலர்களாக மாறி இருக்கிறார்கள் இப்படியே அவர்கள் பேசிப் பேசி இருப்பதைத் தவிர வேறு எந்த தீர்வும் அவர்களால் வந்ததாக இல்லை. ஒரு பிரச்சினை நடந்த பிறகு அதைப் பேசிப் பேசி இருப்பது மட்டும் பெரிய கெட்டித்தனம் அல்ல. எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகளும் அழிவுகளும் ஏற்படாதவாறு தடுக்க வேண்டுமே அதற்கான அரசியல் நகர்வுகளை நோக்கி மக்களை வழிப்படுத்த வேண்டுமே அதை யார் செய்வது? மஹிந்தவுக்கு ஏசிக் கொண்டிருப்பதால் மட்டும் சமூகப் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட முடியாது. தங்ளது அரசியலில் நிலையாக இருப்பதற்காக சிலர் மஹிந்தவுக்கு ஏசிக் கொண்டிருக்கிறார்கள் இதனால் மஹிந்த அரசாங்கத்தின் மீது எந்த குற்றமும் இல்லை என்று நாம் சொல்லவில்லை.
தவறும் குற்றமும் உருவாகும் இடத்திலிருந்துகொண்டுதான் அதற்கான நியாயத்தை தேடவேண்டிய ஒரு அரசியல் காலகட்டமாக இன்றைய சூழ்நிலைகள் மாறி இருக்கிறது. நமக்கான எதிரி இருக்கும் இடத்தில்தான் நாமும் இருக்க வேண்டும். அவ்வாறிருப்பது ஒரு பிரச்சினை உருவாகுவதை தடுக்காவிட்டாலும் குறைந்தபட்சம் உருவாகின்ற பிரச்சினையை தணித்துவிடுவதற்காவது உதவும்.
பெரும்பாலான முஸ்லிம் மக்கள் மைத்திரியுடன் இருப்பதால் மைத்திரி வென்றுவிடுவார் என்று அர்த்தமில்லை. நடக்கவிருக்கும் தேர்தல் முடிவானது சூதாட்டத்தின் முடிவு போன்றது அதிஷ்டமும் தந்திரமும் நிறைந்தது. இந்த சூதாட்ட தேர்தலின் இறுதி முடிவு என்பது எப்படியும் அமையலாம் இதற்கு அரசுக்குள் இருப்பவர்கள் வெளிச் செல்கிறார்கள், மக்கள் அரசாங்கத்தின் மீது எதிர்ப்புணர்வுடன் இருக்கின்றார்கள், மைத்திரியின் கூட்டத்தில் மக்கள் வெள்ளம் அதிகம், இந்த அரசாங்கம் முஸ்லிம்களைக் கொடுமைப்படுத்தியது போன்ற காரணங்களும் கதைகளும் தேர்தல் முடிவில் எந்தளவு செல்வாக்கு செலுத்தும் என்பது நம்பகமில்லாதவை.
அதற்காகத்தான் இன்று முஸ்லிம் சமூகம் இந்த தேர்தல் முடிவில் மஹிந்தவும் வெற்றி பெறலாம் என்ற எதிர்பார்ப்போடும் அந்த வெற்றியில் எமது சமூகம் எதிர்காலத்தில் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற தூரநோக்கோடும் செயற்படுவதற்கு கட்சி அரசியலின் முக்கியத்துவத்தை எமது முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு அளித்து ஆத்திரமான முடிவுக்குப் பின்னால் அறிவுபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்க சிந்திக்க வேண்டும் என்ற மாற்றுச் சிந்தனையை நாம் முன்வைக்கின்றோம்.
இதில் முஸ்லிம் காங்கிரஸும் அதன் கட்சி அரசியலுக்காக இறுதியில் மைத்திரியை ஆதரிக்கும் முடிவினை எடுத்தால் எதிர்கால முஸ்லிம் சமூகத்தின் இருப்பு என்னவாகும் என்ற மிகப் பெரும் கேள்வி அடையாளம் எம்முன் எழுந்து நிற்கிறது.

this article said current situation .i agree 100%
ReplyDelete