குருநாகல் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தங்கள் - பள்ளிவாசலிலும் வெள்ளம் (படங்கள்)
-இக்பால் அலி-
சீரற்ற கால நிலை காரணமாக நேற்றிரவு பெய்த கடும் மழையினால் குருநாகல் மாவட்டத்தில் பல்வேறு வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளதுடன் பெருந்தொகையான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குருநாகல் கண்டி பிரதான வீதியில் கலகெதரப் பகுதியில் அங்காங்கே ஏற்பட்ட மண் சரிவினால் குருநாகல் கண்டி போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது. மாவத்தகம 9ஆம் மைல் கல்லுக்கருகிலுள்ள ஆறு பாலத்தின் மேலால் நீர் பெருக்கெடுத்து ஓடியது. அத்துடன் பறகஹதெனியாவில் பிரதான வீதியிலும் நீர் பெருக்கெடுத்து ஓடியது.
பறகஹதெனிய பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு அருகாமையிலிருந்து சிங்கப்புர பிரதேசத்திற்குச் செல்லும் வீதியில் பாரிய மரம் ஒன்று வீதிக்கு குறுக்கே சாய்துள்ளதனால் வீதிப் போக்குவரத்து தடைப்பட்டதுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
பறகஹதெனிய பண்டாரகலைப் பிரதேசத்தில் அருகாமையிலுள்ள ஆறு பெருக்கெடுத்து ஓடியதால் அப்பிரதேசத்திலுள்ள சுமார் 50 வீடுகள் நீரில் மூழ்கின. அத்துடன் அதற்கருகாமையிலுள்ள பாலத்தின் ஒரு பகுதி வெள்ளதால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இங்கு உள்ள பள்ளிவாசல் ஒன்றும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பஹகதெனிய ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுச் செயலாளர் ஏ. எல் கலிலுர்ரஹ்மான் அந்த இஸ்லத்திற்கு விஜயம் செய்து தேவையான விடயங்களைக் கண்டறிந்து உடனடி நிவாரண சேவையாக சாப்பாட்டு உணவுப் பொருட்கள் வழங்கி வைத்தார்.
வேஉட வனசல்வத்த என்ற பகுதியில் பாரிய பாலம் ஒன்று முற்றாக வெள்ளத்திற்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அதற்கருகாமையிலுள்ள தார் வீதியும் முற்றாக சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. பாலங்கள் உடைப்பெடுப்புக்கு முக்கியகாரணமாக மரங்கள் விழுந்து வெள்ளத்திற்கு அடித்துச் செல்லப்படுவதால் அவை பாலத்திற்கு அடியில் சிக்குண்டு இருப்பதால் நீர் தடைப்பட்டு பாலம் உடைப்பெடுக்கின்றது. இந்த நிலையை இங்குள்ள மற்றுமொரு பாலத்திற்கு அடியில் சிக்கியுள்ள மரங்களையும்; குப்பைகளையும் இங்கு காணலாம். இந்த அனர்த்தும் தொடர்பாக குருநாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் நெரஞ்சன் விக்கிரமசிங்க மற்றும் மாவத்தகம பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலர் வருகை தந்து பார்வையிட்டனர்.




Post a Comment